இமைதிறந்தால்தான்
பார்வைக்கு விடுதலை!
இசை பிறந்தால்தான்
பாட்டுக்கு விடுதலை!
சுமை குறைந்தால் தான் முதுகிற்கு விடுதலை!
சுடர் எரிந்தால்
இருட்டுக்கு விடுதலை!
வாதம் செய்து
வென்றால் எண்ணங்களுக்கு விடுதலை!
எழுதுகோல் எடுத்தால்
எழுத்துக்கு விடுதலை!
எதிர்கால வருகைதான்
நிகழ்கால விடுதலை!
மழையாக வந்தால்
நீருக்கு விடுதலை!
மண்நுழைந்து போனால்
வேருக்கு விடுதலை!
அலையாக எழுந்தால்
கடலுக்கு விடுதலை!
சிற்றுளியால்
சிலைகளுக்கு விடுதலை!
சாதிவிட்டு நகர்ந்தால்தான்
சமத்துவத்தின் விடுதலை!
சாதித்துநீ எழுந்தால்தான்
சரித்திரத்தின் விடுதலை!
அழுதால் மட்டுமே
கண்ணீரின் விடுதலை!
கன்னத்தில் விழுந்தால்தான்
முத்தத்தின் விடுதலை!
காதலித்து அழுதால்தான்
கவிதைக்கு விடுதலை!
ஓய்வின்றி உழைத்தால்
வாழ்க்கைக்கு விடுதலை!
உலகத்தைப் படித்தால்
உன் அறிவின் விடுதலை!
பணத்தாசை ஒழிந்தால்
பண்புநலம் விடுதலை!
பதவிவெறி மடிந்தால்
அன்பு நெறி விடுதலை!
இலை மேலே நின்றால்
பனித்துளியின் விடுதலை!
எழுகதிரின் வரவால்
கிழக்கிற்கு விடுதலை!
இயற்கையுடன் இணைவது
இதயத்தின்விடுதலை!
கலைமேவும் காட்சியெலாம்
கருத்துக்கு விடுதலை!
அன்னிய மொழி (சமஸ்கிருதம்)விரட்டினால்
அன்னைமொழி தமிழுக்கு விடுதலை!
வயல்வெளியில் நீ உழைத்தால்
வறுமைக்கு விடுதலை!
சிறகுகளை நீ விரித்தால்
சிகரத்திற்கே விடுதலை!
சிரித்து முகத்துடன் நீ இருந்தால்
மனதிற்கு விடுதலை!
தாய்மடி ஒன்றால்தான்
சேய்க்கு விடுதலை!
தாய்விட்டு நீ பிரிந்தால் தறுதலையே
நீ வெறும்தலை!
‘விடுதலை’யை நீ படித்தால்
கெடுதல் இல்லை உன் நிலை!
திராவிடம் பிறந்ததால்
சமத்துவத்திற்கு விடுதலை
வெண்தாடி பெரியார்தான்
விடுதலைக்கே விடுதலை!
‘விடுதலை’யைப் படித்தால்தான்
விடுபடுமே உன் நிலை!
– கவிஞர் கீரை பிரபாகரன், அரூர்