காரைக்குடியில் நடைபெற்ற ஒரு மகாநாட்டிற்கு அய்யா சிதம்பரம் அவர்கள்-தான் வரவேற்புக் கழகத் தலைவர். ஆர்.கே.சண்முகம் அவர்கள் அப்பொழுது தலைமை வகித்தார். 1930க்கு முன்னாலே உள்ள காலம் அது. அந்த மகாநாட்டிலேயிலிருந்து கொள்கைப் பிடிப்போடு இருந்தார்கள். அதனால்தான் கலப்பு மணம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்கள். பற்றுதல் என்றால் பிடிவாதமான பற்றுதலுடன் அந்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தார்கள். இந்த மாதிரியாகவே கலப்பு மணம் நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது போலவே அவர்கள் கேட்டார்கள்.
அப்பொழுது வீரமணி அவர்கள் என் ஞாபகத்திற்கு வந்தார். தனக்கு ஒரு திருமணம் ஆகப்போகின்றது என்று வீரமணி நினைக்கவே இல்லை. அந்த மாதிரி இருக்கும்பொழுது வீரமணி அவர்களிடத்திலே திடீர் என்று இந்த சங்கதியைச் சொன்னேன். வீரமணி திடுக்கென்று கேள்விப்பட்டவுடன் பதில் சொல்லாமல் இருந்தார்.
நான் சொன்னேன். அய்யா, உங்களுக்கு நல்ல வாய்ப்பு என்று நினைக்கிறேன். வசதி உள்ள இடம். அதற்கு வீரமணி பதில் சொன்னார். வசதி இருக்கிறதோ இல்லையோ, அதைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை. இப்படியே சொன்னார். அய்யா சொல்லுகிறீர்கள் அம்மா சொல்லுகிறீர்கள் என்பதற்காக நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பேன் என்று சொன்னார். சரி, அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். அப்பொழுது அய்யா சிதம்பரம் அவர்கள் ஊரில் இல்லை. மலேயாவில் இருக்கின்றார். ரெங்கம்மையார் சொன்னார்கள். நீங்கள் சொன்னால் ஒத்துக்கொள்வார் பரவாயில்லை என்று சொன்னார்கள். ஒரு வழியாக வீரமணி அவர்கள் ஒப்புதல் கொடுத்தார்கள் என்று தெரிந்த உடனே அம்மையார் அவர்கள் அவரது கணவரிடத்திலே இதைத் தெரியப்படுத்தினார்கள். உடனே கப்பலில் ஏறி வந்தார்கள். அவசரமாக முடிவுகளை எல்லாம் எடுத்தார்கள்.
திருமணத்தைக் கூடுமானவரை சுருக்கமாக நடத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை இல்லை. என்னுடைய சுபாவம் அப்படி! எந்தக் காரியமாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சுருக்கமாகத்தான் நடத்த வேண்டும் என்பது என்னுடைய சுபாவம். அந்த முறையில் நடத்த வேண்டுமென்றுதான் நான் ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. தள்ளமுடியாத நிலையில் கொஞ்சம் நீண்டு விட்டது. எனக்குக் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனாலும் நல்லபடியாகத் திருப்தியாக முடிந்தது.
ஒருத்தருக்குத் திருப்தி இல்லாவிட்டாலும் இன்னொருத்தருக்காவது திருப்தி இருக்கின்றதே என்று சொன்னால் வரவு செலவு சரியாகப் போய்விட்டது என்று அர்த்தம். நாம் ஒரு கமிட்டி போட்டால், மகாநாடு போட்டால் எப்படி நடக்குமோ அப்படித்தான். வேறே ஒன்றும் அதிசயமானது ஒன்றும் இல்லை.
நம்முடைய கழகத் தோழர்கள் அடிக்கடி சந்திக்க என்ன இருக்கின்றது? வழி வேறு இருக்கின்றதா? ஒன்றும் கிடையாது. தேர்த் திருவிழாவிற்குப் போவதில்லை. மகாநாட்டில் தான் சந்திப்போம்.
மகாநாடு நடத்த வேண்டும் என்று யாராவது கேட்டால் மகாநாடு நடத்தி, அதிலே என்ன பேசி, அதிலே என்ன தீர்மானம் போடுகிறோமோ, அவைகளைப் பத்தாயிரம் பேர் – இலட்சம் பேர் கூடும்படியான கூட்டங்களில் பேசிக் கொண்டே-யிருக்கின்-றோம். மகாநாடு கூட்டினாலே 4,000, 5,000 பேர் வந்தாலே அதிகம். 10,000 பேர் 20,000 பேர் வரவேண்டுமென்றால் நான்கு வருடம், அய்ந்து வருடத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும். மகாநாட்டிலே இயக்கக் காரியமாக, இயக்கக்காரர்களைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பு. அதுதான் உண்மையிலேயே முக்கியம். அந்த முறையிலேயே இயக்கத் தோழர்களை எல்லாம் சந்திக்கும்படியான ஒரு வாய்ப்பு. அன்பர்களையும், நமது மரியாதைக்குள்ளவர்களையும் சந்திக்க ஒரு நல்ல வாய்ப்பு என்கிற முறையிலே கொஞ்சம் தாராளமாக இதை நடத்துகின்றோம். இதை எல்லாம் பார்ப்பதற்கு ரொம்ப மகிழ்ச்சி.
இந்தத் திருமணத்திலே ஒரு சின்ன புதிய முறையைப் புகுத்தியிருக்கின்றேன். திருமணத்திற்கு வந்தவர்களை எல்லாம் பாராட்டித் தாம்பூலம் கொடுப்பது முறை. தாம்பூலத்திலே வெற்றிலை பாக்கு விலை ஒரு அணாவுக்குக் குறையாது. சின்னத் தேங்காயாக இருந்தாலும் 2 அணா விலை இருக்கும் பழம் கொடுப்பார்கள். இப்பொழுது ஏறக்குறைய பெரிய மனிதர்கள் எல்லாம் மலைப்பழம் கொடுப்பது வசதியாகப் போய்விட்டது. ஆக 2 பழம் எடுத்துக் கொண்டால் ஒன்றரை அணா. அதுவும் எல்லாவற்றையும் சேர்த்துச் செய்தால் நான்கரை அணா ஆகின்றது.
அதுவும் நண்பர் சிதம்பரம் அவர்கள் செட்டியார் என்கிற முறையிலே செய்வார்களேயானால் ஒரு வெற்றிலை பாக்கு தாம்பூலத்திற்கு மூன்று ரூபாய் இருக்கும்; இரண்டு ரூபாய்க்குக் குறையாது.
ஆப்பிள் இரண்டு, மூன்று போடுவார்கள். வெற்றிலை ஒரு வாரத்திற்கு ஆகிறாற்போலப் போடுவார்கள். ஆக இரண்டு, மூன்று ரூபாய்க்கு ஆகும். வாங்கிட்டுப் போகிறவர்களும் ஒரு ரூபாய், ஒன்றரை ரூபாய்க்கு விற்று விடுவார்கள். அந்த மாதிரி எல்லாம் இல்லாமல் நாமும் ஏதாவது கொடுத்த மாதிரி இருக்கட்டும். அதுவும் ஏதாவது பயன்படுகிற மாதிரி இருக்க வேண்டும் என்கிற முறையிலே ஒரு எண்ணம் தோன்றியது. கழக சம்பந்தமான ஏதாவது ஒரு புத்தகம் அந்த விலைகளுக்குள்ளேயே கணக்குப் பார்த்து ஆளுக்கு ஒன்று கொடுக்கலாமா என்று ஒரு எண்ணம் தோன்றியது.
வீரமணியே சொன்னார். அய்யா எத்தனையோ திருமணத்திற்குத் தலைமை வகித்துச் சிறப்புரை எல்லாம் ஆற்றியிருக்கிறீர்கள். இது திருமண சம்பந்தமாக இருக்கின்றது. அந்தப் பேச்சுகளில் பத்து, இருபது பேச்சுகளைப் புத்தகமாகப் போட்டுவிட்டு, அதற்குப் பெயரை வேண்டுமானால் வாழ்க்கைத் துணை நலம் என்ற தலைப்புப் போட்டுப் புத்தகமாகக் கொடுக்கலாம் என்று சொன்னார்.
கோவிலுக்குப் போகிறவர்கள் எப்படிச் சர்க்கரையை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்களோ அது மாதிரிதான் இது. மற்றபடி திருமணம் சாதாரணமானது தான். பகலிலே ஒன்றும் விருந்தில்லை. திருமணத்திற்கு வந்தவர்கள் அவரவர்கள், ஆங்காங்கே சாப்பிட்டுக் கொண்டார்கள். ராத்திரிக்கு ஏதோ விருந்து ஏற்பாடு பண்ணுகிறோம்.
சிதம்பரம் அவர்களும், ரெங்கம்மாள் அவர்களும் இயக்கத்திற்குத் தொண்டாற்றுமாறு பாடுபட வேண்டும். அவர்கள் பெண்ணைக் கொடுத்ததன் மூலம் நம்முடைய இயக்கத்திற்குப் பயன்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
அதே மாதிரிதான் வீரமணி அவர்களும் நமது இயக்கத்திற்குப் பயன்படும்படியான முறையிலே தொண்டாற்ற வேண்டும். ஒற்றுமையாகத் துணையாக இருந்தால் நல்லது என்று ஆசைப்படுகின்றோம்.
மற்றப்படி இந்த அறிமுகப் பேச்சோடு மணமக்களுக்கு இந்த வாழ்க்கைத் துணை ஒப்பந்தங்களை எடுத்துச் சொல்லி, அதை நிறைவேற்ற உங்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்த விழாவை இப்பொழுது நடத்திக் கொள்கிறார்கள். அதற்குப் பிறகு மணமக்களை வாழ்த்திப் பல அறிஞர்கள் பேசுவார்கள்.
நண்பர் உயர்திரு பாரதிதாசன் அவர்கள், சேர்மன் இரத்தினசாமி (பிள்ளை) அவர்கள், உயர்திரு சண்முகநாதன் அவர்கள், சுப்பையா அவர்கள், நரசிம்மன் அவர்கள், முத்துக் கண்ணப்பர் அவர்கள், வெள்ளையன் அவர்கள் இன்னும் பல அறிஞர்கள் பேசுவார்கள். பொறுமையாக இருந்து கேளுங்கள்.
மணமக்கள் வாழ்க்கை ஒப்பந்தத்தை எடுத்துச் சொல்லி இந்த நிகழ்ச்சியின் அறிகுறியாக மணமகளுடைய உருவம் பொறித்த மோதிரத்தை மணமகள் மணமகனுக்கு அணிவிப்பார். மணமகன் உருவம் பொறித்த மோதிரத்தை மணமகன் மணமகளுக்கு அணிவிப்பார். நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது என்று உங்கள் சார்பாகக் கேட்டுக் கொண்டு மணமக்கள் இப்பொழுது உறுதிமொழி கூறுவார்கள்.