பேராசிரியர் முனைவர்
நம்.சீனிவாசன்
தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு 92ஆம் ஆண்டு பிறந்தநாள். வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கின்றார்கள்.
உலகம் முழுவதும் பல்வேறு தலைவர்கள் வாழ்கிறார்கள்.
மக்களை வழி நடத்துகிறார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நாடறிந்த தலைவர். 82 ஆண்டுகால பொது வாழ்க் கைக்குச் சொந்தக்காரர்.
பத்து பிரதமர்கள், பத்து குடியரசுத் தலைவர்கள், பத்து முதலமைச்சர்கள், ஏராளமான மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள் ,மாநில அமைச்சர்கள் , உச்ச நீதிமன்ற , உயர் நீதிமன்ற நீதிபதிகள், தொழிலதிபர்கள், துணை வேந்தர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எனப் பலருடன் பழகியவர்.
இந்தியா விடுதலை பெற்ற பின் பொதுத்தேர்தல் 1952 இல் தொடங்கியது. 2024ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் பிரச்சாரம் செய்து வாக்காளர்களுக்கு வழிகாட்டிய பெருமை பெறுபவர் இந்தியாவிலேயே இரண்டு பேர் மட்டுமே. அதில் ஒருவர் ஆசிரியர் அய்யா அவர்கள்.
பொதுவாகவே தலைவர்கள் ஆச்சரியமானவர்கள். அவர்களுடைய செயல்பாடுகள் சிலிர்ப்பை ஏற் படுத்தும்.
எல்லோரும் தலைமைப் பதவிக்கு வர முடியும்; ஆனால் எல்லோரும் தலைவராக முடியாது. தனித் திறன் மிக்கவர்களே தலைவர்களாக முடியும். உண்மைத் தலைவர்களிடம் கொள்கைப் பிடிப்பு – குறிக்கோளை அடைவதற்கான உழைப்பு- இலட்சியத்திற்குக் கொடுக்கும் விலை-இடைவிடாத சிந்தனை – திட்டமிடும் நேர்த்தி – அரவணைக்கும் குணம் – பல்திறன் – ஆளுமை – துணிவு அனைத்தையும் காணலாம். ஒவ்வொரு தலைவருக்குப் பின்னும் பெரும் வரலாறு புதைந்து கிடக்கின்றது. அதிலே அரிதாகவே வெற்றிகள் காணப்படும். தோல்வி, துயரம், நிறைந்திருக்கும். துரோகத்தால் நிலை குலைந்திருப்பார்கள். சாதாரண மக்களின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டது தலைவர்களின் வாழ்க்கை.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்க்கை தனித்தன்மை மிக்கது. 92 ஆண்டு காலத்தில் 82 ஆண்டுகள் பொது வாழ்க்கை வாழ்ந்தவர். வீட்டில் உறங்கிய நாட்களை விட பிரச்சாரத்திற்காக ரயிலில் உறங்கிய நாட்கள் அதிகம். நட்பிற்காகப் பிறிதொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கொள்கைப் பிரச்சாரம் நிகழ்த்திவிட்டு, பேரனின் திருமணத்திற்குக் கூட தாமதமாக வந்த பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர்.
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தொண்டினைப் போற்றி எடைக்கு எடை தங்கம் வழங்கி மகிழ்ந்தார்கள் தமிழர்கள். குண்டுமணி அளவு கூட தங்கத்தை வீரமணி, வீட்டிற்கு கொண்டு போகவில்லை. முற்றும் துறந்த பற்றற்றத் துறவிகளையே தங்கம் புரட்டிப் போடும் . ஆனால் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட தங்கத்தை அப்படியே இயக்கத்திற்கு தந்தார் என்பது மட்டுமல்ல ; தமிழ்நாடு அரசு சமூக நீதி விருது வழங்கி, அத்துடன் சேர்த்தளித்த அய்ந்து பவுன் தங்கத்தையும் கொடுத்தார் என்பது நினைத்துப் பார்க்க முடியாத செயலாகும்.
ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி, ரூபாய் 10 லட்சத்தையும் அளித்தது. அப் பெருந்தொகையினை ‘பெரியார் உலகம்’ அமைய அள்ளிக் கொடுத்த பெரும் உள்ளம் அவருடையது.
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைவர். திராவிடர் கழகம் எப்படிப் பட்ட இயக்கம்? தேர்தலில் போட்டியிடாது – தோழர்களுக்குப் பதவிகள் கிடைக்காது – எந்தவித காண்ட்ராக்ட்டுகளையும் எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் கொள்கை உரம் ஏற்றி, லட்சக்கணக்கானத் தொண்டர்களை இயக்கத்தில் ஈர்த்து வைத்திருக்கின்ற தனித்திறன் அவர்தம் திறமாகும்.
ஒன்றிய அரசில் கல்வி ,வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. சமூக நீதி கிடைத்திட அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழு, வேலியே பயிரை மேய்ந்த கதை ஆயிற்று. ‘ஒன்றிய அரசில் இட ஒதுக்கீடு பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல’ என்று அய்யா தந்தை பெரியார் அவர்களேகூட கருதியிருந்தார்கள்.ஜனதா ஆட்சியில் மண்டல் குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் எடுத்த பெருமுயற்சி. 42 மாநாடுகள், 16 போராட்டங்கள். 1980 தொடங்கி 1992 வரை சளைக்கவில்லை. இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்தார். தலைவர்களுக்கு சமூகநீதி உணர்ச்சி ஊட்டி ஓரணியில் திரட்டினார். சமூக நீதியை நிலை நாட்டுவதில் வெற்றி பெற்றார். தமிழர் தலைவரின் அணுகுமுறைக்கு கிடைத்த இந்த வெற்றி , இந்திய வரலாற்றில் நிகழ்ந்த மகத்தான புரட்சியாகும்.
கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியர். பகுத்தறிவைப் பிரச்சாரம் செய்யும் ஏடு எதுவும் உலகில் நாளிதழாக வெளிவரவில்லை . ‘விடுதலை’ மட்டுமே அந்தச் சிறப்பை பெறுகிறது. அதிலும் கி. வீரமணி அவர்கள் 62 ஆண்டு காலம் ஆசிரியராக இருக்கிறார் . 62 ஆண்டு காலம் நாளிதழின் ஆசிரியர் என்பது வரலாற்றுச் சாதனையாகும்.
உலகில் வேறு எவருக்கும் கிடைக்காத வாய்ப்பாகும்.
தொண்டுள்ளம் படைத்த நல்லோர்கள் தம் பொருளைப் பொதுவுக்குப் பயன்பட வேண்டும் எனக் கருதி அறக்கட்டளை அமைப்பார்கள். ஆனால் அவர்களின் மறைவுக்குப் பிறகு அந்த அறக்கட்டளைகள் சிதைந்து சின்னாபின்னமாகி விடும். பொருள் சூறையாடப்படும். அறக்கட்டளை நிறுவியதன் நோக்கம் சிதைக்கப்படும். ஆனால் தந்தை பெரியார் நிறுவிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் எனும் அறக்கட்டளையையும் , அவருக்குப் பின்னால் அன்னை மணியம்மையார் நிறுவிய பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் எனும் அறக்கட்டளையையும் மேலும் மேலும் வளர்த்ததோடு மட்டுமின்றிப் புதிதாகப் பல்வேறு அறக்கட்டளைகளை உண்டாக்கி , தந்தை பெரியாரின் பிரச்சாரம் பரவவும், கொள்கை நிலை பெறவும் அரும் பாடுபட்டு பெரியாரை உலகமயமாக்கிய தனித்தன்மைக்கு உரியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அய்யா அவர்கள் ஆவார்கள்.
கொள்கை எதிரிகள் அய்ந்து முறை கொலை வெறித் தாக்குதல்கள் நடத்திய போதும் கலங்காமல் ,அஞ்சாமல் தந்தை பெரியார் போட்டுத் தந்த பாதையில் எந்தவித சபலமும் இல்லாமல் தொடர்ந்து பயணிப்பது தமிழர் தலைவரின் தனித்தன்மையாகும்.
ஜலதோஷம் பிடித்தாலே வீட்டில் முடங்கிவிடும் மனிதர்களுக்கு மத்தியில், இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகும் கூட கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, மாதத்தில் 25 நாட்கள், பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, ஓய்வின்றி சுற்றிச் சுழன்று தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வது ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தனித் தன்மையாகும்.
பொதுவாக மனிதர்கள் சூழல், இடத்திற்கு ஏற்ப தங்களைச் சற்றே மாற்றி அமைத்துக் கொள்வார்கள்.
களத்தில் நிற்கும் ராணுவ வீரன், மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர், கட்டடங்கள் கட்டும் பொறியாளர், வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் என யாவரும் வீட்டில், ஓய்வு நேரத்தில், துறைக்குத் தொடர்பு இல்லாத மனிதர்களாகவே வாழ்வார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வாழும் வீடு கூட முகாம் அலுவலகமே. எப்போதும் இயக்கம் பற்றியே சிந்தனை. தந்தை பெரியார் குறித்தே பேச்சு. நாட்டைப் பற்றியே எண்ணம். தோழர்களே உறவு. பிறிதொன்றைச் சிந்திப்பதும் இல்லை; பேசுவதும் இல்லை. இயக்கத்தோடு அய்க்கியமானதே இவர்தம் தனித்தன்மை.
தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் சிறந்த தலைவர் , பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை யாளர், வழக்கறிஞர், கல்வியாளர், ஆய்வாளர், நிர்வாகி, போராளி என்று பல்துறை விற்பனராகத் திகழ்வது அவர்தம் தனித்தன்மையாகும்.
எவரொருவர் மானமிகு கி.வீரமணி அவர்களைச் சந்தித்து பேசுகின்றாரோ, அவருடைய உள்ளத்திலே மதிப்புமிக்க இடத்தில், தம்முடைய பண்பினால் ,சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர் ஆசிரியர் அவர்கள். எதிரில் இருப்பவர்களுக்கு அளிக்கின்ற மரியாதை, அவர்தம் பேச்சுக்குக் கொடுக்கின்ற மதிப்பு, அவர் களுடைய நலனில் கொண்டிருக்கின்ற அக்கறை, உரையாடலின்போது பயன்படுத்துகின்ற கனிந்த சொற்கள், சொல்லுகின்ற கருத்துகளில் வெளிப்படும் ஆளுமை, கடல் போன்ற ஆழமான அறிவு, வானம் போன்ற எல்லையற்ற தொடர்பு, அளவிட முடியாத ஞாபக சக்தி, பதவியின் நிழல் படியாத நிலையிலும் அரசாங்கத்தை நடத்துவது போல் ஒரு பேராற்றல் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தனித்தன்மையாகும்.
நீடு வாழ்க!