காஞ்சிபுரத்தில் தி.மு.க. சார்பில் (26.9.2009) நடைபெற்ற முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு தந்தை பெரியார் விருது வழங்கும்முன் அவரைப் பாராட்டி விருது வழங்குவதற்கான காரணத்தைத் தென்மண்டல தி.மு.க. அமைப்புச் செயலாளர் மத்திய ரசாயனம், மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி வாசித்தார். அதன்பின் பலத்த கரவொலிக்கிடையே நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குத் தந்தை பெரியார் விருதை வழங்கினார். மாநாட்டில் மு.க.அழகிரி தமிழர் தலைவரைப் பாராட்டிப் பேசிய வரலாற்றுக் குறிப்பு வருமாறு:
மாணவப் பருவத்திலேயே நதி நீரோட்டமான தன் பேச்சாற்றலால் தந்தை பெரியாரைக் கவர்ந்து, பின்னர் அவர் அணுக்கத் தொண்டராகப் பணியாற்றி இன்று அய்யா அவர்களின் வழித்தோன்றலாக மட்டுமின்றி அய்யா அவர்களின் உருத்தோன்றலாகவும் தமிழ்நாட்டில் மட்டு மல்லாது திக்கெட்டும் திராவிடர் கழகத்தின் கொள்கைகளை வளர்த்து வருபவர் ஆசிரியர் என்று அனைவராலும் அன் போடு அழைக்கப்படுகின்ற டாக்டர் கி.வீரமணி அவர்கள்.
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் பாசத்திற்கும் நேசத்திற்கும் என்றும் உரியவராக விளங்குவது மட்டுமின்றி, சோதனையான நேரங்களில் உடனிருந்து தோள் கொடுத்து, இனமான உணர்வின் இரத்த பந்த வடிவாய்ச் செயல்படுகின்றவர் – கலைஞரின் அன்பு இளவல் – திராவிடர் கழகத்தின் தளநாயகர் கி.வீரமணி அவர்கள். இவர் கடலூர் முதுநகரில் 2.12.1933ஆம் ஆண்டு சி.எஸ்.கிருஷ்ணசாமி – பட்டம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு முடித்து 1956ஆம் ஆணடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று 1960இல் சென்னை சட்டக் கல்லூரியில் சட்ட இளங்கலைப் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் (பொருளாதாரம்) தேர்வில் முதல் மாணவராக விளங்கியமைக்காக மூன்று தங்கப் பதக்கங்கள் பெற்ற ஒரே மாணவர் கி.வீரமணி.
கடலூரில் ஓராண்டு மட்டுமே வழக்கறிஞர் தொழில் செய்த இவர் 1962லிருந்து 1977 வரை ‘விடுதலை’ நாளிதழின் நிருவாக ஆசிரியராகப் பணியாற்றினார். 1978 முதல் இன்று வரை ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியராகச் செயல்பட்டு வருகிறார்.
தனது பள்ளிப் பருவமான ஒன்பது வயதில் மேடையேறிப் பேசத் துவங்கிய கி.வீரமணி அவர்கள், தமிழ்நாட்டின் மாநகரங்கள், நகரங்கள், பட்டிதொட்டிகள் என தமிழகத்தை நூற்றுக்கணக்கான முறை வலம் வந்திருக்கிறார். தமிழ் நாட்டின் குக்கிராமங்கள் வரை இவர் பாதம் பதியாத இடம் இருக்காது என அறுதியிட்டுச் சொல்லலாம். மேடைப் பேச்சாற்றலின் வாயிலாக இலட்சக்கணக்கான மனங்களைக் கவர்ந்தவர் என்பதைவிட, மனங்களை மாற்றியவர். தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாதைக்கு இழுத்தவர் என்பதே இவரது சாதனைச் சரிதமாகும்.
தந்தை பெரியாரின் சமுதாய விழிப்புணர்வுக்கான சிந்தனைகளை, சமூக விடுதலைக்கான விடியல் கருத்துகளை நூல் வடிவங்களாக்கி தெருவோரப் புத்தகச் சந்தைகளின் வாயிலாக மூடப் பழக்கவழக்கங்களில் முடங்கிக் கிடந்த மக்களை அறிவொளி பெறச் செய்த சிறப்பும் இவருக்கு உண்டு. அவர் பெற்ற விருதுகளும், பட்டங்களும் பரிசுகளும் எண்ணிக்கையில் அடங்காதெனினும், குறிப்பிடத்தக்கவை யாக அவர் நெஞ்சம் குளிர்வது தமிழ்நாடு அரசு வழங்கிய ‘சமூகநீதிக்கான பெரியார் விருது’
அமெரிக்க நாட்டில் உள்ள சர்வதேச அமைப்பு வழங்கிய ‘சமூகநீதிக்கான வீரமணி விருது’, 2003இல் மியான்மரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில் வழங்கப்பட்ட ‘பேரறிவாளர்’ எனும் பட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இலக்கிய சேவைக்காக வழங்கிய ‘கவுரவ முனைவர்’ பட்டம், புதுடில்லியில் உள்ள தேசிய முன்னேற்றத்திற்கான முன்னணி அமைப்பு வழங்கிய ‘பாரத்ஜோதி’ விருது.
இவை தவிர, அய்யா பெரியார் வழித்தொண்டினைப் பாராட்டும் வகையில் பல்வேறு நகரங்களில் எடைக்கு எடை வெள்ளியும் தங்கமும் வழங்கியிருக்கிறார்கள். இன்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ளார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்னும் அறக்கட்டளைக்கு ஆயுள் செயலாளர். அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் இவரது சேவையை, இலக்கியப் பணியைப் பாராட்டி பல்வேறு பட்டங்களும் விருதுகளும் கொடுத்திருந்தாலும் கி.வீரமணி அவர்கள் மெய்சிலிர்த்து கண்ணீர்மல்கக் கரம் குவித்து மகிழ்வது-தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளோடு மறைந்தார்.
அந்த முள்ளை அய்ந்தாம் முறையாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்புக்கு வந்த கலைஞர், அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் பெரியார் கொள்கைக்குச் சட்டவடிவம் கொடுத்து தன் பேனாமுனையால் தந்தை பெரியார் நெஞ்சில் தைத்திருந்த முள்ளை அகற்றி எறிந்து, புரட்சிகரமான வரலாற்றுச் சாதனை படைத்தார். அந்தச் சாதனையைத்தான் சுயமரியாதை வீரர் வீரமணி அவர்கள் வாழ்நாளில் கிடைத்தற்கரிய விருதாகக் கருதுகிறார். இவருக்கு ‘முரசொலி’ அறக்கட்டளை 2008ஆம் ஆண்டுக்கான கலைஞர் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.
வீரமணி அவர்கள் 1958இல் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். இத்திருமணத்தைத் தந்தை பெரியார் அவர்கள் ஏற்பாடு செய்து அவரும் மணியம்மையார் அவர்களும் முன்னின்று நடத்தினர். இவரது துணை வியார் பெயர் வீ. மோகனா. குழந்தைச் செல்வங்களாக இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.
தொலைநோக்குச் சிந்தனையாளர் அண்ணா சொன்னார்- “திராவிடர் கழகமும் திராவிட முன் னேற்றக் கழக மும் இரட்டைக்குழல் துப்பாக்கி” என்று! அத்தகைய இரட்டைக் குழல்களாக தலைவர் கலைஞர் அவர்களும், அவரது இளவலாகிய வீரமணி அவர்களும் தொண்டாற்றி வருகிறார்கள். வீரமணி அவர்களின் உழைப்பிற்குப் பெருமை சேர்க்கும் வகையில்… இவரது சமுதாயப் பணியினைப் பாராட்டி, தலைமைக் கழகத்தின் சார்பில் இன்று (26.9.2009) காஞ்சிபுரத்தில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா நுற்றாண்டு நிறைவு விழாவுடன் கொண்டாடும் முப்பெரும் விழாவில், இவருக்குப் பெரியார் விருதினை வழங்கிச் சிறப்பிக்கிறோம்.
(26.9.2009 அன்று காஞ்சிபுரத்தில் தி.மு.க. நடத்திய முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘தந்தை பெரியார் விருது’ வழங்கியபோது படித்தளிக்கப்பட்ட முக்கியக் குறிப்புகள்)