எனது வயது 92 ஆக இருக்கலாம்; வயது இயக்கப் பணிக்குத் தடையில்லை!
தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனாகிய நான் எம் பணி– தொண்டு செய்து கிடப்பதே என்று உறுதி கூறுகிறேன்!
தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனாகிய எனக்கு வயது ஒரு தடையில்லை; எம் பணி– பெரியார்தம் தொண்டு செய்து கிடப்பதே என் வாழ்நாள் பணி என்று உறுதி கூறுகிறேன் என்று தம் பிறந்த நாள் செய்தியாகத் தெரிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது பிறந்த நாள் அறிக்கை வருமாறு:
நாளை (2.12.2024) எனக்கு 92 ஆம் ஆண்டு பிறக்கிறது.
‘பத்து வயது பகுத்தறிவுச் சிறுவனாக’ மேடை ஏற்றப்பட்டு, பொதுவாழ்க்கை என்ற தீரா நதியில் இறக்கிவிடப்பட்டு, எதிர்நீச்சல் போட்டியில், எம் தலைவரையொட்டி அவரது பயிற்சி்ப் பாசறையின் பயனுறு பாடத்தால், 82 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, எத்தனையோ எதிர்ப்பு, ஏளனங்கள், அடக்குமுறைகள், சிறைவாசங்கள், உயிர்க்குறிகளைச் சந்தித்தும், கொள்கையில் துவளாது, நாணயத்திலிருந்து வழுவாது, எதிரிகளிடம் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத உறுதி கொண்ட நெஞ்சினனாய் நான் தொடருவதன் ரகசியம், பெரியார் தந்த புத்தியும், அய்யாவிடம் கற்ற பாடங்களும், கழகக் கொள்கை உறவுகளின் வற்றாத பாசமும்தான்!
பெரியார் என்ற இராணுவத்தின் கட்டுப்பாட்டுக் கூடாரத்தின் காவல் சிப்பாய்!
இன எதிரிகள் – கொள்கை எதிரிகளின் இடையறாத எதிர்ப்புகளாலும் எனது பொதுவாழ்வு – எனக்கு,
சலிப்பையோ,
சங்கடத்தையோ,
விரக்தியையோ,
நம்பிக்கையின்மையையோ
ஒருபோதும் தந்ததே இல்லை.
சிற்சில நேரங்களில், வயதின் வளர்ச்சி என்ற முதுமையின் காரணமாக உடல் உறுப்புகளின் ஒத்துழையாமை ஏற்படக் கூடும்.
அவற்றை உடலில் தீர்க்க அருமையான நமது மருத்துவப் பெருமக்களும், உள்ளத்தால் போக்க குருதிக் குடும்பம் தொடங்கி, கொள்கைக் குடும்பமும் என்றும் என்னைத் தோள் கொடுத்துத் தாங்குகின்றன.
தாக்குதல்கள் மலைபோன்று வந்தாலும், நொடியில் நம் மன உறுதிமுன், பனிபோல் கரைந்து, கழிவு நீர் போல் ஓடி மறைகிறது!
காரணம், நான் ஒரு பெரியார் இராணுவம் என்ற ஒரு கட்டுப்பாட்டுக் கூடாரத்தின் காவல் சிப்பாய்!
சபலங்களுக்கு இடம்தராத சாதாரண தொண்டன்!
தந்தை பெரியாருக்குப் பின் இயக்கமே இருக்காது என்று ஆரூடம் கணித்த அவசர அரைவேக்காடு அரசியல் எதிரிகளும், இன எதிரிகளும் எப்படி குழிவெட்டலாம் என்று கூடி, குறுக்கு வழிகளைத் தேடி, ஓடி, அபாண்டங்களைப் பொழிந்து அழித்துவிடலாம் என்று நாளையும் திட்டம் தீட்டக் கூடும்.
‘‘சாகத் துணிந்த நமக்கு சமுத்திரம் முழங்கால்மட்டே’’ என்பதை, அந்தப் பெரும் ஆதிக்க சக்திகள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் உருவாக்கினால், அவர்கள் உருவாக்கும் சூழ்ச்சி வலைகளை அறுத்து எறிந்துவிட்டு, அவதூறுகளை பொய்யாய், பழங்கதையாய், கனவாக்கி, பொலபொலத்துப் போகச் செய்யும் ஆற்றலும், நெஞ்சுரமும் பெரியாரின் கருஞ்சட்டை இராணுவத்திற்கு என்றும் உண்டு!
இது எத்தகைய இயக்கம் தெரியுமா?
குறுகிய (5 ஆண்டு) காலத்தில் சோதனைகளைச் சாதனைகளாக்கிய எம் அன்னையின் (ஈ.வெ.ரா.மணியம்மையார்) தலைமையே அதற்கு ஒரு தக்க சான்றாகும்!
நான் வெகு சாதாரணமானவன்தான்!
நாங்கள் சாமானியர்கள்தான்!
குறைந்த எண்ணிக்கையாளர்கள்தான்!
ஆனால், குறைமதியாளர்களோ,
குறுக்குசால் விடும் குதர்க்கவாதிகளோ அல்ல!
கொள்கையை மணந்து, களத்தில் நின்று வென்று காட்டி, வெற்றிக் குழந்தைகளை ஈன்றெடுத்து வளர்த்து, அடுத்த தலைமுறைக்கு அணையாச் சுடராக தந்துவிட்டுப் போகும் திடச் சித்தம் உடையவர்கள்.
திராவிடர் இயக்கம் ஓர் இனவெறி இயக்கமோ, மதவெறி கட்சியோ, பதவி வெறிக் கூட்டமோ அல்ல!
மானுட நேயம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவத்தை 97 ஆண்டுகளுக்கு முன்பே அது நடத்திய இளைஞர்கள் மாநாட்டில் கொடியாகவே பறக்கவிட்டு, இன்றுவரை அக்கொள்கையைப் பரப்பிவரும் கோணலற்ற அறிவு விடுதலை இயக்கம்!
ரகசியம் இல்லாதது!
வன்முறை நாடாதது!
நன்றியை எதிர்பார்க்காதது!
மானம் பாராது தொண்டாற்றுவது!
கொள்கைச் சமரசம் அறியாதது!
மக்களிடம் வெறுப்பை விதைத்து கலகத்தை அறுவடை செய்து
தங்களை வளர்த்துக் கொள்ள விரும்பாத ஒரு வினைத்திட்பம் மிக்க திறந்த புத்தகம்!
அடக்குமுறைகளைத் தனது
அடக்க முறையினாலும், சகிப்புத்தனத்தினாலும் ஏற்று,
கொள்கைக்காக உயிர்த் தியாகமும் செய்யும்
உணர்வாளர்களைக் கொண்ட
பண்பாட்டு இயக்கப் பகுத்தறிவுப் பாசறை!
நீதிக்கட்சி முதல் ‘திராவிட மாடல்’ ஆட்சிவரை!
‘நீதிக்கட்சி’ என்ற பார்ப்பனரல்லாதார் இயக்கம் பிறந்து, சுயமரியாதை இயக்கமாக மலர்ந்து, திராவிடர் கழகமாய் விரிந்து, பண்பாட்டுப் பாதுகாப்புக்கான மனிதநேய இயக்கமாய் ஓங்கி,
அரசியலில் ‘திராவிட மாடல்’ என்ற ஒரு பெருமைமிகு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினை பெற்று அகிலத்திற்கே எடுத்துக்காட்டாய்த் தந்து, ஓங்கி வளர்ந்து, உத்தமர்களின் பாராட்டைப் பெற்று வளரும் திராவிட இயக்கமாகப் பூத்துக் குலுங்குகிறது.
வேரும், விழுதுகளும் பலமாகி விரிந்து பரந்து, ஆழ்ந்து பெருத்துள்ளது!
அதன் கனிகளை உண்ணுவோர் பலருக்கு அதற்காக உழைத்த வில்லேருழவர்களும், சொல்லேருழவர்களும், செயல் திட்ட அரசியல் மேதைகளும், தந்தை பெரியார் என்ற மாபெரும் அறிவுச் சுடர் தந்த அற்புதக் கொள்கைச் சிற்பியுமே அதன் பாரம்பரிய சொத்து என்பது தெரியாமல் இருக்கலாம்!
டாக்டர் சி.நடேசனார்
சர்.பி.டி. தியாகராயர்
டாக்டர் டி.எம்.நாயர்
பானகல் அரசர்
ஏ.டி.பன்னீர்செல்வம்
போன்ற நீதிக்கட்சித் தலைவர்களோடு, சுயமரியாதை இயக்கம் கண்ட புரட்சியாளர் தந்தை பெரியாரின் சகாப்தமும் இணைந்து ‘திராவிடர் கழகமாக‘ வளர்ந்து, அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என்ற அரசியல் ஆளுமைகளாலும், அதன் நீட்சியாக இன்று ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி நீண்டு வரலாற்று வைர வரிகளாக மின்னுகிறது.
தந்தை பெரியார்தம், தாய்க்கழகத்தின் திட்டங்களும், கொள்கைகளும் திராவிடர் ஆட்சிமூலம் அரும் சட்டங்கள் ஆகி, புதியதோர் விடியலை, புத்தாக்க சமூகத்தை உருவாக்கி பொற்காலத்தைத் தந்து வருகின்றது!
எவரோடும் முடிந்துவிடக் கூடிய இயக்கமல்ல இது!
‘அவரோடு சரி!’
‘இவரோடு சரி!’
என்ற அவசர ஆத்திரக்காரர்களுக்கு,
‘எவரோடும் முடிந்துவிடக் கூடியதல்ல!’
இது வேரற்ற அடிமரம் அல்ல; வெளித் தெரியாமல் ஆழமாக வேர் பதிந்துள்ள வித்தக வினைக்கான விளைச்சல் மரம் திராவிடம் என்பது நாளும் புரிய வைக்கப்படுகிறது.
ஆனால், இன்றைய ஆட்சியை நேரிடையாக எதிர்க்கத் தெம்பில்லாதோர் வம்பர்களை வரவழைத்து, சில கூலிப் படைகளிடம் பேரம் பேசி, ‘பி’, ‘சி’, ‘டி’ டீம்களை எல்லாம் நிற்க வைக்கின்றனர் – நம் கொள்கை எதிரிகள். ‘சிலிப்பர் செல்கள்க’ளை அனுப்புகிறோம் என்று வெட்கமின்றி உளறுகின்றன – செல்லரித்த செலவாகாத சில்லரைகள்.
1. இயக்கத்தில் எம் பணி, நம் மக்களை என்றும் பாதுகாக்கும் இராணுவப் பணி போன்றது.
2. கொள்கைகளை நாளும் பரப்பிவரும் ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியை மீண்டும் அங்கே வெற்றிப் பொலிவுடன் அமர்த்துவது!
3. ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை, மூடநம்பிக்கை களை ஒழித்து சமூகநீதி, அறிவியல் மனப்பான்மை தழைக்கும் புதிய சமுகமாக்குவது.
4. இளைஞர், மகளிர் முதலிய அனைத்துத் தரப்பினரும் பிரச்சாரப் பணியை சுழன்றடிக்கும் சுனாமியாக உழைத்திட வைக்கும் பணியே, எம் பணி!
5. அகால பருவ மாற்றங்களைத் தவிர்க்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பினை மக்கள் இயக்கமாக நடத்துவது!
முடியும்வரை அதே பணி எம் பணி!
ஆம், எம் வாழ்வு முடியும்வரை
எம் உடலுறுப்புகள் செயல்படும்வரை
இப்பணி தவிர வேறு எப்பணி எமக்கு?
அதுவே ‘‘திருப்பணி’’ நமக்கு!
எமக்குத் தோள் கொடுத்துள்ள தலைவரின், ஈரோட்டுப் பாதை எமது மாறாப் பாதை, ஒரே பயணப் பாதை!
அந்த ஈரோட்டுப் பாதை, பாதை இல்லா ஊர்களுக்கும்கூட புதிய பாதையமைத்து இணைக்கும் ஒரே சீரான பாதை!
பாறைகள் உருண்டாலும், மண் சரிந்தாலும்,
எதிர்கொண்டு வெல்லும் உறுதியே 92 ஆம் ஆண்டு காணும் இந்த எளிய பெரியார் தொண்டனின் இன்ப உணர்வின் இனிய முழக்கமாகும்!
என் 92 ஆம் ஆண்டில், ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ ஆண்டு மலரில், வாழ்த்து அனுப்பிய நமது ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சியில், கோவையில், கலைஞர் நூற்றாண்டையொட்டி – ரூ.300 கோடி செலவில் அமைக்கப்படும் தந்தை பெரியார் நூலகம், அறிவியல் மய்ய முமே எனக்குப் பிறந்த நாள் பரிசு என்று எழுதியுள்ளது என் கண்களைப் பனிக்க வைத்தது! உள்ளத்தை உருக்கியது!!
வைக்கம் தந்தை பெரியார் நினைவகம் திறப்பு விழா நிகழ்ச்சிகளும் கூடுதல் பரிசுதானே! இந்தப் பரிசுகள்முன் மற்றவை எம்மாத்திரம்!
இப்பரிசுகள் எனக்கு மட்டும் உரியவையல்ல – திராவிட சமுதாயத்திற்கே உரியவை!
நன்றி! நன்றி!! நன்றி!!!
‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகர் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ‘‘தாய்க்கழகமான திராவிடர் கழகமும், பெரியார் திடலும்தான் எனது ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு வழிகாட்டியாய், பாதுகாப்பு அரணாய், கேடயமாய் இருக்கிறது. கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் ஆசிரியர் வீரமணிதான்– இதைத்தான் நேற்றும் சொன்னேன். இன்றைக்கும் சொல்கிறேன். நாளைக்கும் சொல்வேன்’’ என்று சொல்லியிருப்பது இயல்பான திராவிடப் பாரம்பரிய அரசியல் வழிமுறைதான்!
‘‘மானமிகு சுயமரியாதைக்காரர்’’ நூற்றாண்டு விழா நாயகர் நம் கலைஞர் அவர்களே முன்பு இதற்கு அருமையான விளக்கம் தெரிவித்தாரே!
‘‘(ஆரிய) பாம்புக்கும், (திராவிட) கீரிக்கும் நடக்கும் சண்டையில், கடிபட்ட கீரி, தன் புண்ணை ஆற்றிக் கொள்ள ஒரு பச்சிலைமீது படுத்துப் புரண்டு, அக்காயத்திற்கு மருந்தாக – விஷ முறிவை ஏற்படுத்திக் கொள்ளும் என்பார்கள்; அதுதான் நாங்கள் பெரியார் திடலுக்குச் செல்வது; அங்கேதான் அந்த சுயமரியாதை மூலிகைத் தோட்டம் உள்ளது’’ என்று அருமையாக விளக்கினார்.
அறிஞர் அண்ணா ஆட்சி அமைந்த காலத்திலிருந்தே வந்த அரசியல் பாரம்பரியமாயிற்றே! அதனை அடிபிறழாது பின்பற்றி ஆட்சியை நடத்திவரும், ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகரின் தெளிவான அரசியல் முதிர்ச்சிக்கான சான்றாவணம் ஆகும் இது!
நமக்கு வளமைபற்றிக் கவலை இல்லை.
களத்தில் என்றும் நிற்க இளமைதானே என்றும் தேவை?
அனைத்துத் தோழர்களுக்கும் – எம் மக்களுக்கும் எனது உறுதி! உறுதி!!
இயக்கப் பணி என்ற இந்த ஒப்புவமையற்ற, நன்றியை எதிர்பாரா, மானம் பாராத, புகழ் நோக்காது புது உலகப் படைப்புக்கு நமது உழைப்பு என்பது சிறுதுளியே! ‘பெரியார் உலகம் மயம் – உலகம் பெரியார் மயம்’ பெருவெள்ளமாவது என்ற இலக்கே நமது களம்.
சிறுகனூரில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘‘பெரியார் உலகம்’’ நமது அடுத்த பெரும்பணி! அதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கனிவுடன் வேண்டுகிறேன்.
அதை நோக்கியே இனியும் நம் பணி என்ற பெரும் பணி!
‘வாழ்க, ஒழிக!’ என்பதை ஒரே தட்டில் பார்த்து, அலட்சியப்படுத்தி அரும்பணி என்றும் தொடரும்!
அறிவியக்க வீரர்கள் அல்லவா, நாம்?
எனக்கு வயது ஏறுவதன் காரணமாக உடல் தளர்ச்சி ஏற்படலாம்; அது தவிர்க்க இயலாதது.
ஆனால், பெரியாரின் வாழ்நாள் மாணவனான எனக்கு, உள்ளத் தளர்ச்சியோ, கொள்கை சறுக்கலோ ஒருபோதும் ஏற்படவே, ஏற்படாது என்று அனைத்துத் தோழர்களுக்கும், எம் மக்களுக்கும் பணிவுடன் உறுதி கூறுகிறேன்!
வாழ்க பெரியார்!
வளர்க சுயமரியாதை உலகு!
‘‘திராவிடம் வெல்லும் –
அதை என்றும் வரலாறு சொல்லும்!’’
பார்ப்பனரல்லாத இளைஞர்கள் சங்கத்தின் கொடி
1927, அக்டோபர் 22, 23 தேதிகளில், சென்னை எஸ்.அய்.ஏ.ஏ. திடலில் அமைக்கப்பட்ட டாக்டர் நாயர் பந்தலில், பார்ப்பனர் அல்லாத இளைஞர்களின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது.
அம்மாநாட்டில், பார்ப்பனரல்லாத இளைஞர்கள் சங்கத்தின் தராசு கொடி பானகல் அரசரால் ஏற்றப்பட்டது.
அக்கொடியில், அமைப்பின் இலக்குகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், முன்னேற்றம் ஆகிய சொற்கள் பொறிக்கப்பட்டு இருந்தன.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
1.12.2024