2.11.2024 ஞாயிறு மலரில் ஆசிரியர் விடையளிக்கும் கேள்வி எண் 1இல் “மைல் கல்லுக்கு மைலேஸ்வரன்” என்று பெயர் வைத்து கும்பிட ஆரம்பித்து விடுவார்கள் என்று தந்தை பெரியார் தொலைநோக்குப் பார்வையோடு சொன்னதை நினைவுடுத்தியிருந்தார்கள்.
1970ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை நினைவுகூர விரும்புகிறேன்.
என் அகவை 86. குடந்தை துக்காம்பாளைய தெரு எங்களின் பூர்வீகம். எங்கள் வீட்டுக்கு எதிர்புறம், நாங்கள் சித்தப்பா என்று அழைக்கும் அய்யா மாரிமுத்து அவர்களின் வீடு. எங்கள் தெருவில் ஆண்டுதோறும் “முனீஸ்வரன் திருவிழா” நடைபெறும். கரகம், காவடி, வேல் தூக்கிக் கொண்டு வீதியுலா வருவார்கள். மக்கள் கூட்டம் தெருவை நிறைக்கும். சேலம் எடப்பாடியிலிருந்து வந்து குடியேறிய மக்கள்தான் இதனை அமர்க்களமாக நடத்துவார்கள்.
தெருவின் நடுவில் குறுக்கே ஒரு சாக்கடை வாய்க்கால் தலைப்பில் மின் துறையினரின் ட்ரான்ஸ்பார்மர் . அதன் அருகாமையில் ‘ஒரு எல்லைக்கல்’ பெரும்பாலும் சிறுவர்கள் இதன் மீது மலங்கழிப்பதும், சிறுநீர் விடுவதும் சகஜம். இதனை யாரும் கண்டுகொள்வதில்லை.
எங்கள் தெருவிலேயே நாடகக் கலைஞர்கள் பலர் என்னோடு வசித்து வந்தனர். முனீஸ்வரன் கோயில் திருவிழாவுக்கு மறுநாள் நாம் ஒரு விழா நடத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே ட்ரான்ஸ்பார்மர் எல்லைக் கல்லை சுத்தம் செய்து ‘கரண்ட ஈஸ்வரன்’ என்று பெயர் சூட்டி சூடம் கொளுத்தி படையல் போட்டு வணங்கச் செய்தோம். தொடர்ந்து இதை வைத்து ஆண்டுதோறும் நாடகங்கள் நடத்த வேண்டுமென நினைத்தோம். முதலில் ‘கரண்ட்டீஸ்வரன்’ என்ற பெயரில் நாடக அரங்கேற்றம்.
தொடர்ந்து காலனும் கரண்ட்டீஸ்ரனும், காலனின் சபதம், காலனைக் கலங்கவைத்த கரண்ட்டீஸ்வரன் என்று பெயர் சூட்டி நாடகங்கள் நடத்தினோம். நகைச்சுவையை மய்யமாக்கி மாற்றார் மனம் புண்படாத நிலையில் நடத்திய நாடகங்களில் “தேன் தடவிய மருந்து குப்பிகளைப் போல்” நிறைய பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறினோம்.
நாடகப் பாத்திரங்களாக கலா நிகழ்ச்சி என்.ஜி.ராஜன், வைரசுந்தரம், விடை கொடுத்தாயே சாம்பு, நடிகர் சிவகுருநாதன், நடிகை சரோஜினி ஆகியோருடன் நானும் இணைந்து நடித்தேன்.
நாடக இறுதிக் காட்சியில் காலன் (எமன்) உயிரைப் பறிக்க ஒருவர் மீது பாசக் கயிறை வீசும்போது டாக்டர் மின்சார ஒயரை அவன் மீது வீசி காலனை வீழ்த்துவார்.
காலன் வீழ கரண்ட்டீஸ்வரன் ஜெயித்தான் என்ற நிலையில் நாடகம் முடிவு பெறும். நாடகம் பார்த்தவர்கள் சிரித்தார்கள். சிந்தித்து இருப்பார்கள்?
– பாபநாசம் கு.ப.செயராமன்