வெற்றிச்செல்வன்
”தந்தை பெரியார் அவர்களது மறைவுக்குப்பின் நாம் எந்த உறுதிமொழி எடுத்தோமோ அந்த உறுதிமொழியை மீண்டும் இன்று நாம் புதுப்பித்துக் கொண்டு மேலும் மேலும் நம் இலட்சியங்களில் உறுதியும், செயல்பாட்டில் தீவிரமும் கொண்டு அவர்கள் எண்ணத்தில் இருந்து நூலிழை பிறழாமல் இலட்சியப் பயணத்தைத் தொடருவோம்” (விடுதலை, 20.03.1978) என்று அப்போதைய திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம் மையார் அவர்களின் மறைவின்போது ஆசிரியர் பெரியார் திடலில் கூடியிருந்த மக்களிடையே சூளுரையாற்றினார்.
அதே சிந்தனையோடு இன்றளவும் தம்முடைய இலட்சியப் பயணத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் நமது ஆசிரியர். தந்தை பெரியார் கண்ட இயக்கம் தேர்தல் இயக்கமன்று. இங்கு மாலை, மரியாதைகளைவிட சொல்லடி களும், கல்லடிகளும்தான் நிறைய கிடைக்கும். தமக்கென வாழாது பிறர்க்கென வாழும் தகைமையுடைவர்கள்தான் இவ்வியக்கத்தின் விழுதுகளாய் இருப்பவர்கள். அப்படிப்பட்ட விழுதுகளுக்கு வேராக நின்று தமது இயக்கப் பணியைத் தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத் திற்காக இந்த 92 வயதிலும் ஆற்றி வருகிறார் ஆசிரியர்.
திராவிட இயக்கங்கள் பார்ப்பன வெறுப் புணர்வு கொண்டவை என்ற பிரச்சாரம் நீண்ட நாட்களாக முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுகளில் ஒன்று. அதற்குப் பெரியார் காலத் திலேயே பதில் சொல்லியாயிற்று. பெரியாரே பார்ர்ப்பனத் தோழர்கள் என்று தமது இதழ்களில் குறிப்பிட்டிருக்கிறார். மனிதாபிமானத்தை முன்னிறுத்திய பெரியாருக்கு எந்த ஒரு சமூகத்தின் மீதும் வெறுப்புணர்வு இருந்துவிட முடியாது. இது குறித்து ஆசிரியரிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டது. அதற்கு ஆசிரியர் அளித்த பதிலிலேயே நாம் உண்மை நிலையை உணர்ந்து கொள்ள முடியும்.
“கேள்வி: ஒரு பார்ப்பனர் நாத்திகனாக இருந்தால் கூட உங்கள் இயக்கத்தில் சேர்க்க மாட்டீர்களா?
ஆசிரியர் பதில்: நிச்சயமாகச் சேர்க்க மாட்டோம். அந்த ஊடுருவலில் ஆபத்து அடங்கி இருக்கின்றது. இன்றைக்கு அ.இ.அ.தி.மு.க.வின் கதி என்ன? ஜெயலலிதா என்ற பார்ப்பனப் பெண் அதில் ஊடுருவி உள்ளுக்குள் இருந்தே கட்சியை உடைத்து விட்டார். அரசியலில் வேண்டுமானால் இவைகள் நடக்கலாம். ஆனால் எங்கள் இயக்கத்தில் எங்களால் அனுமதிக்க முடியாது. ஆனாலும் தனிப்பட்ட முறையில் எந்த பார்ப்பனரும் எங்களுக்கு எதிரியல்ல” (அலைவ் ஆங்கில இதழுக்கு அளித்த பேட்டி, உண்மை டிசம்பர் 1- 15, 1990).
அதே நேரம், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஆபத்து வந்தபோது, அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவை, முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைச் சரியான திசையில் வழிநடத்தி, தமிழ்நாட்டின் சமூகநீதிக்குப் பங்கம் வராமல் தடுத்து நின்ற பேரறிவாளராகத் திகழ்ந்தார்.
மேற்காண் நேர்காணலில், மொழிக் கொள்கை குறித்த கேள்விக்கு ஆசிரியர் அளித்த பதில் இச்சமயத்தில் நினைவுகூரத்தக்கது.
“கேள்வி: மாநில அளவிலும், தேசிய அளவிலும் உங்கள் மொழிக் கொள்கை என்ன?
பதில்: மாநிலங்களில் மாநில மொழியும், ஒன்றியத்தில் ஆங்கிலமும் இருக்க வேண்டும். ஆங்கிலமொழிதான் சுதந்திரத்திற்கு முன்பே நாட்டு மக்களை ஒன்றிணைத்தது. அது பன்னாட்டு மொழி. ஆங்கிலத்தை தேசிய மொழி ஆக்கினால் என்ன வந்துவிடும்? ஹிந்தியை எங்கள்மீது ஏன் திணிக்க வேண்டும்? மொழி என்பது கருத்துகளைப் பரிமாறும் ஒரு கருவிதான்”.
இன்றைக்கு ஏராளமான இளைஞர்கள் பெரியாரைப் படிக்கிறார்கள். பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கமாக, பெரியாரின் கொள்கைகளை அவருக்குப் பின்னர் தொய்வில்லாமல் எடுத்துச் செல்லும் இயக்கமாக ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே ஒரு கடவுள் மறுப்பு இயக்கமாக, அதிலும் பார்ப்பன எதிர்ப்பு இயக்கமாக நூறாண்டுகளாக ஒரு இயக்கம் இருக்கிறது, இருக்க முடிகிறது என்றால் அது ஆசிரியர் அவர்களின் சீரிய தலைமையினால் மட்டுமே. ஆசிரியர் அவர்கள் நீடூழி வாழ்ந்து பெரியாரின் சிந்தனைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே பெரியாரியலாளர்களின் பேராவல்.