பசு மாட்டு இறைச்சியை மேற்கு வங்காளத்தி லிருந்து கொண்டு வந்து எருமை இறைச்சி என்று போலியான சான்றிதழ் பெற்று, ஏற்றுமதி செய்ததாக அய்ந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர் களிடமிருந்து ரூ.4 கோடி மதிப்புள்ள 153 டன் பசுமாட்டிறைச்சிபறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் அழிக்கப்பட்டதாக தாத்ரி – கிரேட்டர் நொய்டா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களான குளிர்ப் பதன கிடங்கின் உரிமையாளர் பூரன் ஜோஷி (51), (59), அக்ஷய் சக்சேனா (34), சிவ் சங்கர் ராய் (35) மற்றும் உதவி யாளர் சச்சின் குமார் (24) ஆகியோரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
‘‘எருமை இறைச்சி என்ற போலி சான்றிதழ் பெற்று குளிர்ப்பதன கிடங்கில் சேமிக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களில் எவ்வளவு இறைச்சி கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்,” என்று கிரேட்டர் நொய்டா உதவி காவல் ஆணையர் அமித் பிரதாப் சிங் கூறினார். மேலும் இந்த குளிர்ப்பதன கிடங்கு மே மாதம் முதல் இயங்கி வருவதாகவும், அனைத்து சட்டப்பூர்வ உரிமங்களையும் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
காசியாபாத்தைச் சேர்ந்த கவுரக்ஷா சமிதியின் மாவட்டத் தலைவர் சுமித் சர்மா நவம்பர் 9 அன்று காவல்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து இந்த கும்பல் சிக்கியது. “பசு இறைச்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு குளிர்ப்பதன கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு சேமிக்கப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நவம்பர் 9 அன்று காவல்துறைக்கு தகவல் தெரிவித்து லுஹர்லி சுங்கச்சாவடிக்கு சென்றோம். தான் மேற்கு வங்காளத்திலிருந்து வருவதாகவும், தாத்ரி, கிரேட்டர் நொய்டாவில் உள்ள குளிர்பதனக் கிடங்கிற்கு இறைச் சியை விநியோகிக்க வேண்டும் என்றும் ஓட்டுநர் தெரிவித்தார்,” என்று புகார்தாரர் சர்மா கூறினார்.
இறைச்சி மாதிரிகளை சேகரிக்க கால்நடை மருத்துவரின் உதவியை காவல்துறை பெற்று, அவற்றை மதுராவிற்கு தடயவியல் அறிக்கைக்காக அனுப்பியது. “சனிக்கிழமை ஆய்வக அறிக்கைகள் பெறப்பட்டன, மேலும் இறைச்சி பசுவைச் சேர்ந்தது என்பது வெளிப்படுத்தப்பட்டது,” என்று கிரேட்டர் நொய்டா கூடுதல் துணை காவல் ஆணையர் அசோக் குமார் தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச பசு வதைத் தடைச் சட்டம் 1955, மாநிலத்தில் பசுக்கள் மற்றும் அவற்றின் சந்ததிகளை வதை செய்வதைத் தடை செய்கிறது. தடயவியல் அறிக்கைகளைத் தொடர்ந்து, காவல்துறை இறைச்சியை அழித்து குளிர்ப்பதன கிடங்கை மூடி முத்திரை வைத்தது. பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 325 (விலங்கைக் கொல்வது அல்லது ஊனப்படுத்துவதன் மூலம் சேதம்), 61(2) (கிரிமினல் சதி), 318(4) (மோசடி), 328(4) பசு வதைத் தடைச் சட்டத்தின் கீழ் தாத்ரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
எருமை மாட்டுக் கறியை சாப்பிடலாம், ஏற்றுமதி செய்யலாம்; ஆனால் பசு மாட்டுக் கறியை மட்டும் சாப்பிடக் கூடாது; ஏற்றுமதி செய்யக் கூடாது என்ற அடிப்படையில்தான் இந்த வழக்குத் தொடுக்கப் பட்டுள்ளது.
எருமை மாட்டுக்கறியை பயன்படுத்தலாம் – அது குற்றமில்லை என்ற சட்டம் இருப்பதால் பசு மாட்டுக் கறியை – எருமை மாட்டுக் கறி என்று சான்றிதழ் பெறப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களில்தான் ஜாதியைப் பார்க்கின்றனர் என்றால் மாட்டிலும்கூட பசு மாடு, எருமை மாடு என்று பேதம் காட்டுபவர்கள் மனித ஜாதியைச் சேர்ந்தவர்கள் தானா என்ற கேள்விதான் எழுகிறது.
பசுவதைத் தடை சட்டம் என்பது மதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது உண்மைதானா?
இவர்கள் தலையில் தூக்கிக் கூத்தாடும் வேதத்தில் (யஜுர் வேதத்தில்) 30 வகை யாகங்கள் கூறப் பட்டுள்ளனவே.
அவற்றில் ஒன்று அஷ்டதச பசுவிதானம் – அதாவது பதினெட்டுப் பசுக்களை கொலை செய்து நடத்தும் யாகம். ஏகாத சீன பசுவிதானம் – அதாவது பதினொன்று பசுக்களை கொன்று நடத்தப்படும் யாகம் – இந்த யஜுர் வேதத்தைத் தடை செய்வார்களா?
மனிதனைக் கொன்றே யாகம் நடத்தியுள்ளவர்கள் (புருஷகஜ்ஞ) பசு மாட்டுக்காகக் கண்ணீர் வடிப்பதை என்ன சொல்ல!
இதில் இன்னொரு விடயம் என்ன தெரியுமா? மாட்டுக்கறி ஏற்றுமதியாளர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர்கள் பிஜேபியைச் சேர்ந்த முதலாளிகள்தான்.