பெரம்பலூர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
பெரம்பலூர், நவ.29- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் சி.தங்க ராசு தலைமையில் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் 24.11.2024 அன்று கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆம் பிறந்தநாளில் சென்னையில் கூடுவது தொடர்பாகவும், திருச்சி சிறு கனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நாம் எவ்வளவு தீவிரமாக நிதி திரட்ட வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 28, 29 தேதியன்று திருச்சியில் நடைபெற இருக்கின்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 13ஆவது மாநாட்டில் கலந்து கொள்வது குறித்தும், மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்தும் பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நடராசன் விவரித்தார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் திராவிடர் கழக அமைப்பை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும் எனவும், உறுப்பினர் சேர்க்கை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் தலைமை கழக அமைப்பாளர் சிந்தனைச்செல்வன் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் விசயேந்திரன் வரவேற்புரையாற்றினார், மேலும் நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம், வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் சின்னசாமி, இளைஞர் அணி தலைவர் தமிழரசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.