பார்ப்பனர்களின் தாய்மொழி தமிழா?
கவிஞர் கலி.பூங்குன்றன்
“பிராமணர்கள் மீதானால் வன்கொடுமையாகாதா?” என்ற தினமணியின் கட்டுரைக்குப் பதிலடியின் தொடர்ச்சியான கட்டுரை:
“பிராமணர்களின் தாய்மொழி தமிழ்” என்கிறது தினமணி.
சூழ்நிலையும், சந்தர்ப்பமும் மென்னியைப் பிடித்து அழுத்தும் போது – இப்படி எல்லாம் இவர்கள் கூறுவதுண்டு. மற்றபடி தமிழைத் தாய்மொழியாக ஒருக்காலும் கொள்வதில்லை.
ஒரே ஒரு சூரிய நாராயண சாஸ்திரி தன்னுடைய பெயரைப் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டதைத் தவிர, விரல் விட்டுக் கூறுவதற்கு இன்னொருவர் என்பது குதிரைக் கொம்பே!
இவாளின் ஜெகத் குருவான சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்பவரின் (படுக்கை அறை முதற்கொண்டு இவரது படத்தை மாட்டி, தூங்கி விழித்ததும், அந்தப் படத்தைத்தான் பாப்பாராம் துக்ளக் குருமூத்தி அய்யர்) தமிழைப் பற்றிய மதிப்பீடு என்ன?
இதற்கு ஆதாரத்தை நாம் கூறுவதைவிட அந்த சங்கராச்சாரியாரின் ஆப்த நண்பரும் ஆலோசகருமான அக்னி கோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரை அழைத்தே கூறச் செய்வதுதான் சாலப் பொருத்தம்!
இதோ அவர் எழுதுகிறார்:
“கும்பகோண மடம்… சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிற கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. அந்த நாளுக்கான மாலைநேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகாபெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட ‘மடி’அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளித்தாக வேண்டும். அந்த வகையில்… குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.
அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப்பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்… நாட்டுக்கோட்டை செட்டி நாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்… மகா பெரியவரை பார்த்து அவரிடம் அருள் மொழிகள் வாங்கி விட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.
அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணாசலத்திடம் சொன்னேன்… ‘இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்…’ என்றேன்.
‘இல்லை சாமி – இப்பவே அவரை பார்க்கணும்’- என்றார் பக்தர்.
எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்… விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல, அவர் என்னை உள்ளே அழைத்தார்.
போனேன். கேட்டார். சொன்னேன். ‘இதோ பாரும் தாத்தாச்சாரி… அவரை பார்க்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை… பார்த்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணனும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்லயோ… அதனால நான் மவுனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்பிச்சிடுங்கோ…”
என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர். நானும் வெளியே வந்தேன். ‘நான்’ சொன்னதுதானப்பா… சுவாமிகள் மவுனத்தில் இருக்கார். நாளைக்கு வாயேன்…’என்றேன்.
‘அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி… நாளைவரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்’… என தாய்மொழியாம் ‘தமிழில்’ மகா பெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.”
(அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் “இந்து மதம் எங்கே போகிறது?” நூல் பக்கம் 95-97). இது ஒரு சாட்சியே.
இரண்டாவது சாட்சியம்
ஆட்சி மொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் காஞ்சிபுரத்தில் ரேஷனிங் அதிகாரியாகப் பணியாற்றினார். தன்னைப் பார்க்கும்படி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அழைத்தார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நிர்வாக அதிகாரியாக நரசிம்ம அய்யர் என்பவர் இருந்தார். இராமலிங்கனாரை அழைத்துச் செல்ல ஒரு வண்டியோடு வந்தார். இருவரும் சங்கராச்சாரியார் இருந்த இடத்திற்குச் சென்றார்கள். சங்கராச்சாரியர் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தார்.
அப்பொழுது நடந்தது என்ன? இதோ இராமலிங்கனார் பேசுகிறார்:
“சங்கராச்சாரியார் பிரகாரத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த நரசிம்மய்யர் என்னைச் சீண்டுகிறார். “நமஸ்காரம் பண்ணுங்க… நமஸ்காரம் பண்ணுங்க…” என்கிறார். விழுந்து கும்பிடச் சொல்கிறார் – நான் ஒன்றும் செய்யவில்லை.
பிரகாரத்தில் ஒரு பக்கத்தில் ஓரமாக சங்கராச்சாரியார் நின்று கொண்டார். வலக்கை பக்கமாக நானும், நரசிம்மய்யரும் நின்று கொண்டோம். இடது பக்கம் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் நின்றார். இவர் கேள்வி கேட்கிறார். ‘ரேஷனிங்’ பற்றி – அது என்ன, இது என்ன என்று கேட்கிறார். கேள்வி கேட்கிறதை சமஸ்கிருதத்தில் கேட்கிறார். அதை சமஸ்கிருத ஆசிரியர் தமிழில் சொல்கிறார் எனக்கு. தமிழில் பதில் சொல்கிறேன் நான்.
பேச்சு முடிந்து வெளியில் வந்தோம். வெளியே வரும்பொழுது அந்த நரசிம்மய்யரைக் கேட்டேன். “என்ன அய்யா – அவர்தான் தமிழில் சொன்னா தெரிஞ்சிக்கிறாரே… பின்னே ஏன் அவர் சமஸ்கிருதத்தில் கேட்கிறார்” என்று கேட்டேன். அதற்குச் சொன்னார். “இதிலே பாருங்கோ… இந்தப் பன்னிரெண்டரை மணிக்கெல்லாம் சந்திர மவுலீஸ்வரர் பூஜை இருக்கோல்லியோ, அது வரைக்கிலும் எந்த நீசப் பாஷையிலும் பேச மாட்டார் என்றார்” எனக்கோ அறைந்து விடலாமென்றிருந்தது.
இது இராமலிங்கனார் அவர்களின் பேட்டியில் உள்ள வாசகம்.
ஆதாரம்: கீ.இராமலிங்கனார் பேட்டி – பேட்டி கண்டவர்: கலி.பூங்குன்றன் – உண்மை 1-15, டிச.1980.
மூன்றாவது சாட்சியம் இதோ
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த டாக்டர் சி.பாலசுப்பிரமணியனார் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற (25.12.1980) தமிழ் வழிபாட்டு உரிமை மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு தகவலைச் சொன்னார். அவரின் அந்த உரை ‘விடுதலை’யிலும் (27.12.1980 பக். 2) வெளிவந்துள்ளது.
“ஆளுநர் கே.கே.ஷா அவர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் புதிய பெரியவாள் சங்கராச்சாரியாரைப் பார்க்கப் போயிருந்தோம்.
அப்போது அங்கிருந்தவர் ஆளுநருக்கு இவர்தான் தமிழ் சொல்லிக் கொடுத்தவர் என்று அறிமுகப்படுத்தினார்.
உடனே காஞ்சி பெரியவாளுக்கு வந்ததே கோபம்!
நீங்கள்தான் இவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்ததா? என்று குய்யோ முறையோ என்றார். உங்களை யார் இந்த வேலையெல்லாம் செய்யச் சொன்னது? என்றார் – இதெல்லாம் அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வெளியே வந்து விட்டோம்.
நமது தாய்மொழி இந்த அளவுக்கு ஒரு சிறுபான்மையரால் ஒதுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டுப் பேசப்படுவதை எண்ணும்போது? இந்த மாநாட்டிலேயே ஒரு முடிவு செய்ய வேண்டும்” என்றார் பேராசிரியர் டாக்டர் சி.பாலசுப்பிரமணியனார்.
ஆட்சி மொழிக் காவலர் கீ.இராமலிங்கனாரோ, பேராசிரியர் டாக்டர் பாலசுப்பிரமணியானாரோ திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களல்லர். ஆனால் தமிழர்கள். அவர்களின் பார்வையிலும் பார்ப்பனர்கள் வெறுக்கத்தக்கவர்களாகத் தானே இருக்கிறார்கள்!
இதுதான் பார்ப்பனர்களின் – அவர்களின் ஜெகத் குருக்கள் தமிழின் மீது வைத்த மரியாதை – ‘தினமணி’ சிறப்புக் கட்டுரை வெட்கமில்லாமல் எழுதுகிறது. பிராமணர்களுக்கு தாய்மொழி தமிழ் என்று.
பிராமண பாஷை என்ற
ஒன்று இருக்கிறது.
நான்காவது சாட்சி பார்ப்பன சங்கத் தலைவர் (Tambras) திரு. என்.நாராயணன் – இதோ பேசுகிறார்:
“இந்தப் பிராமணப் பாரம்பரியம் வாழையடி வாழையாகத் தழைத்தோங்கிவிட வேண்டுமானால், நாம் ஒவ்வொருத்தரும் பிராமண உணர்வோடு வாழ்ந்து நடை உடை பாவனை. ஆத்துல பிராமண பாஷை பேசணும்.
அய்யங்கார் ஆத்துக்குப் போறேன், மாமி வந்தது “டேய் குழந்தே மாமாவுக்குத் தண்ணிக் கொடுங்கறாள்”
என்ன கஷ்டம் மாமிக்கு தீர்த்தம் கொடு என்று சொல்றதுக்கு – எனக்குப் புரியவில்லை.
நான் கேட்டேன்.
என்ன மாமி தண்ணின்ட்டேளே என்று.
மாமா, ஏன் கேட்கறேள். இந்தப்பாழாய்ப்போன பஸ்சுலேயும், ஸ்கூலுக்கும் போயி இவாளுடைய பேரன்ட்ஸ் வராளே, அவாளோடு பேசிப் பேசி, சனியன் அந்தப் பாக்ஷைதான் மனசுல நிற்கிறது. ஆத்துல, தீர்த்தமே போயிடுத்து என்றாள்.
ஒரு அய்யர் ஆத்துக்குப் போறேன். தூத்தங் காணாமல் போய்விட்டது அங்கே.
வேண்டாமே நம்மாத்துல, நம்ம பாஷை பேசுவோமே!
கலப்புத் திருமணம் நடக்கக்கூடாது இனிமேல்!
நான் சொல்லித்தான் ஆகவேண்டும்!
கலப்புத் திருமனாம் நடக்கக் கூடாது!
கலப்புத் திருமணம் கூடாது என்பதற்கு ஒரு சயின்டிபிக் ரீசன் சொல்லுங்க – என்று ஒரு காலேஜ் பொண்ணு கேட்டா
ஒரு பிராமின் கேள் – வேறொரு கம்யூனிட்டி பையனை காதல் செய்கிறாள்.
மாமா சயின்டிபிக்கா சொல்லுங்கோ ஏன் கலப்புத் திருமணம் செய்யக்கூடாது என்று – அய் கம்பேக் டூ மை – அப்டேட் பண்றேன் என்றாள்.
நான் சொன்னேன்.
பயாலஜில சொல்றாங்க, கல்யாணம் ஆன ஒரு தம்பதிக்கு பிறக்கிற குழந்தைகள், 16 தலைமுறையா அம்மாவையோ, 16 தலைமுறையா அப்பாவையோதான் கொள்ளும் என சொல்கிறார்கள்.
நீ கல்யாணம் பண்ணிக்கப்போற பையனைத்தான் உனக்குத் தெரியும் – அவனுடைய மூதாதையரைத் தெரியாது
நீ வெஜிடேரியன் – அவன் நான் வெஜிடேரியன்.
நாளைக்குப் பிறக்கப்போகிற பையன் பிளேடு பக்கிரியாகப் பொறக்குமோ – பிக்பாக்கெட்டா பொறக்குமோ, ரவுடியாகுமோ தெரியாது.
அதனால்தான், ஆயிரங்காலத்துப் பயிரு –
குலம் கோத்தரம் பார்த்து கல்யாணம் பண்ணுன்னு சொல்லிருக்கா.
கீ.இராமலிங்கனார்
ஏன் தெரியுமா?
நாம மட்டுமல்ல – எந்த ஜாதிக்காரன் கலப்பு பண்ணாலும் பிடிக்கல.
தப்பா வழி நடத்திட்டுப் போற யங்ஸ்டர்தான் இப்படி சொல்றாளே தவிர.
எல்லா ஜாதியும் – ஜாதின்னா என்ன தெரியுமா?
குடும்ப சம்பிரதாயங்கள்தான் டிரஸ்டர் குடும்ப ஜாதியாகி இருக்கிறது.
தப்பே கிடையாது ஜாதிகளில்.
ஜாதியிலே தப்பே இல்லை –
யாராவது ஜாதி தப்பென்றால், என்னிடம் கொண்டு வாருங்கள் – நான் ஆர்கியூவ் பண்றேன்.
ஜாதி தேவை –
அதிலும் பிராமண ஜாதி கட்டாயம் தேவை!
பிராமண ஜாதியை அழிப்பதற்காக அகில உலக இஸ்லாமிய சதி – அகில உலக கிறிஸ்தவ சதி நடக்கறது
உரை: என்.நாராயணன், மாநிலத் தலைவர், தமிழ்நாடு பிராமணர் சங்கம், சிறீவிஷ்ணு விழா, 24.1.2021
தமிழிலேயே “பிராமண பாஷை”யாம் புரிகிறதா? அதோடு நிற்கவில்லை தம்பிராஸ் தலைவர், பார்ப்பான் கலப்புத் திருமணம் செய்தால் பிறக்கும் பிள்ளைகளே பிளேடு பக்கிரியாகவோ, பிக் பாக்கெட்டாகவோ, ரவுடியாகவோ பொறக்கும் என்கிறார்.
பார்ப்பன சங்கத் தலைவர் பேச்சே இந்த யோக்கியதையில் இருக்கிறது – தெரிந்து கொள்வீர்!
இவர்களுக்குத் தாய்மொழி தமிழாம்!
(வளரும்)
உச்சிக்குடுமியையும் பூணூலையும்
அறுக்கச் சொன்னது யார்?
பிராமணர்களின் பூணூல் அறுப்புப் போராட்டம், உச்சிக்குடுமி கத்தரிக்கப்பட்டது என்று ‘தினமணி’ அபாண்ட பழி சுமத்துகிறது? எப்பொழுது எந்தத் தேதியில் அத்தகைய போராட்டம் அறிவிக்கப்பட்டது – நடத்தப்பட்டது என்று அறிவு நாணயம் இருந்தால் ‘தினமணி’ சொல்லட்டுமே பார்க்கலாம்.
அங்கொன்றும், இங்கொன்றும் எங்காவது நடந்திருந்தால், அது தனிப்பட்ட செயலாக இருக்குமே தவிர, தந்தை பெரியாரோ அவர் கண்ட இயக்கமோ நடத்தியதல்ல.
உண்மையைச் சொல்லப் போனால் பூணூலையும், உச்சிக் குடுமியையும் – அறுக்கச் சொன்னவர் தந்தை பெரியாரல்ல – திருமூலர்தான்! அந்தப் பாடல் இதோ!
மூடங் கெடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகும் ஆதலாற் பேர்த்துணர்ந்து
ஆடம்பரநூல் சிகையறுத் தல்நன்றே.
– திருமந்திரம், பாடல் 241
அறிஞர் அண்ணா பேசுகிறார்!
“தனித்தமிழ் கேட்டால் மொழி வளம் குன்றும் என்பர். தமிழ் இசை கேட்டால் சங்கீதக் கலை சஷீணமடையும் என்று கூறுவர். தமிழர் அதிகாரம் வேண்டும் என்று கேட்டால், ஆட்சியிலே திறமை குறையுமே என்று கூறுவர். தமிழுக்குச் சம உரிமை வேண்டும் என்று கேட்டால், பழங்கால பக்குவம் பாழாகுமே என்று பகருவர். இது ஆரியர்களின் பழைய பல்லவி. இது இனி நடக்காது.
– அறிஞர் அண்ணாவின் நூல் – ‘தமிழரின் மறுமலர்ச்சி”
* * *
தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதராகப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்புக் கொள்வதில்லை. அதனைத் தம் தாய் மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான்!
– அறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’, 2.11.1947, பக். 18.