கடந்த நவ.26ஆம் நாள் அன்று ஈரோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு ஆகிய இரு நூற்றாண்டு விழாக்களும் வெகு சிறப்புடன் நடைபெற்றன.
ஈரோடு என்கிற போது, அது தந்தை பெரியார் பிறந்த ஊர், உலக வரைபடத்தில் ஈரோட்டைப் பதிவு செய்த தலைவர் பிறந்த ஊர் என்கிற நிலையில் அந்த ஊரில் இந்த இரு நூற்றாண்டுகளும் கொண்டாடப்படுவது என்பது வரலாற்றுச் சிறப்புக்கு உரியதுதானே!
வெறும் ஆர்ப்பாட்டம், கும்மாளம், கேலிக் கூத்தாக நடப்பதல்ல திராவிடர் கழக நிகழ்ச்சிகளும் மாநாடுகளும் – மக்களுக்கு அறிவைக் கொளுத்தும் நிகழ்ச்சிகளை உள்ளடக்கமாகக் கொண்டவை.
அந்த வகையில் மாநாட்டின் நிறைவுரையை ஆற்றிய தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஈரோட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது, இந்த ஈரோட்டில் தந்தை பெரியார் நடத்திய பயிற்சிப் பட்டறையில் 1943களில் தாம் மாணவராக இருந்து பயிற்சிப் பெற்றதை மிகுந்த மகிழ்ச்சியோடும், நன்றி உணர்ச்சியோடும் நினைவு கூர்ந்தார்.
மாநாட்டின் நிறைவுரையில் முத்தாய்ப்பாக மாநாட்டுச் செய்தி என்று முத்திரை பதிக்கும் வகையில் ஒன்றை அறிவித்தார்.
சுடுகாட்டுக்கு இடுகாட்டுக்குச் செல்லும் பாதையாக இருந்தாலும் சரி – எரியூட்டும் சுடுகாடாக – இடுகாடாக இருந்தாலும் சரி – அது பொதுவாக இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களின் பிணத்தை இந்த வழியில் எடுத்துச் சொல்லக் கூடாது என்பதோ, இந்த சுடுகாடு இந்த ஜாதிக்கு மட்டுமே உரியது என்றோ எந்த வரையறையும், தடுப்பும் இருக்கக் கூடாது.
ஜாதிக்கென்று சுடுகாடு இருக்கக் கூடாது; பொது சுடுகாடு என்ற நிலை ஏற்பட வேண்டும் – இதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் – என்ற மனிதத் தன்மைக்கு மரியாதை அளிக்கும் அறிவிப்பை பிரகடனப்படுத்தினார் திராவிடர் கழகத் தலைவர். இந்த அறிவிப்பிற்குப் பலத்த கரஒலி எழுப்பி, ஆரவாரித்து வரவேற்பு அளித்தது மக்கள் மன்றம்.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், இப்படி அறிவிப்பைக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கவே கூடாது.
சுதந்திரம் அடைந்து பவள விழாவைக் கோலாகல மாகக் கொண்டாடிய நாட்டில் செத்த பிறகும், அவன்மீது திணித்த ஜாதி உயிரோடு இருக்கிறது என்றால், இது ஏற்கக் கூடியதுதானா?
மனிதன் சாகிறான் – ஆனால் அவன் பிறப்பு வழி சுமத்தப்பட்ட ஜாதி மட்டும் சாகாது என்றால், இது வெட்கப்படத்தக்கதல்லவா!
இதைத்தான் தந்தை பெரியார் கேட்டார் – மண்ணுக்கு மட்டும் சுதந்திரமா? மனிதனுக்குச் சுதந்திரம் வேண்டாமா?
சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மை சுதந்திரம் இருக்குமா என்று தந்தை பெரியார் எழுப்பிய கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லையே!
பிரிவினைவாதம் பேசினால் தேசிய குற்றம் என்று பேசுகிற நாக்குகள், இப்படிப் பிறப்பின் அடிப்படை யிலேயே பிரிவினை பேசுவதும், செத்த பிறகுகூட ஜாதிக்கொரு சுடுகாடு என்று கூக்குரல் போடுவதும்தானே உண்மையான பிரிவினை என்பதை உணராதது ஏன்?
இதனை மதத்தோடும், சாத்திரத்தோடும் முடிச்சுப் போட்டு, ஜாதியைக் காப்பாற்றுவது கடும் குற்றம் என்று சட்டம் செய்யாதது ஏன்?
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சொல்லுகிறார்.
‘‘எல்லா ஜாதியினரும் ஒரே வகையான எரிப்பு முறையைக் கடைப்பிடிக்காததால், ஒரே சுடுகாடு இந்து தர்மத்துக்கு எதிரானது’’ என்று கூறியபோது மனித உரிமைப் போர் வாளான ‘விடுதலை’ (8.3.1982) கண்டித்ததுண்டே!
மின்சார சுடுகாட்டை சென்னையில் முதன் முதலில் அறிவித்த போது – அதனை எதிர்த்தவரும் சாட்சாத் இதே சங்கராச்சாரியார்தான்.
ஆனால் சென்னையில் மின்சார சுடுகாடுகள் அதிகரித்து விட்ட நிலையில், பார்ப்பனர்கள் உட்பட எல்லா ஜாதியினரும் அதைப் பயன்படுத்திக் கொண்டு தானே இருக்கிறார்கள்.
நகர்ப்புரத்தில் ஒழிந்த இந்த ஜாதி இன்னும் கிராமப் பகுதிகளில் கோரைப்பற்களை நீட்டிக் கடித்துக் குதறுவதை அனுமதிக்கலாமா?
பிணத்தைத் தூக்கிக் கொண்டு செல்லும் போது ஜாதி அடிப்படையில் மறிப்பது மனிதத் தன்மைதானா – மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கு இது அடையாளம்தானா?
பொது சுடுகாடு என்ற ஒன்றை ஊருக்கு ஊர் ஊராட்சியே உருவாக்கும் வகையில் அரசு ஏற்பாடு செய்யுமானால், நாளடைவில் இப்பொழுது எப்படி மின் சுடுகாட்டில் சர்வ சாதாரணமாக ஜாதிக்கு அப்பாற்பட்டு சடலங்கள் எரியூட்டப்படுகின்றனவோ, அதே நிலை கிராமப்புறங்களிலும் ஏற்படும் என்பது உறுதி. முற்போக்கான திட்டங்களுக்கு வழிகாட்டும் ‘திராவிட மாடல்’ அரசு இதிலும் வழிகாட்டட்டும். வழிகாட்டும் என்றும் உறுதியாக நம்புகிறோம்!
குடியிருப்புகள் வழியாக சவ ஊர்வலம் செல்லலாம் என்று உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.