சென்னை, நவ.29 இறந்தவர்களின் உடல்களை குடியிருப்புகள் வழியாக எடுத்துச் செல்லாமல், பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லக் கோரிய மனுவை ரூ.25 ஆயிரம் அபராதத்துடன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விருதுநகர் மாவட்டம் பனையாடிபட்டி கிராமம் கம்மவார் சமூக நலச் சங்கச் செயலர் மகாலட்சுமி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் ஊரில் யாராவது இறந்தால் குடியிருப்பு வழியாக பிணங்களை எடுத்துச் செல்கின்றனர். இதனால் குடியிருப்புதாரர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. இறந்த உடல்களை பிரதான சாலை வழியாக எடுத்துச் செல்லலாம். எனவே, இந்த உடல்களை மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது குடியிருப்பு தெருக்களை பயன்படுத்தாமல், பிரதான சாலை அல்லது வழக்கமான பாதையை பயன்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பொதுமக்களுக்கான தெருக்களில் இறுதி ஊர்வலத்தை நடத்தக் கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான சாலைகள், தெருக்கள் போன்றவற்றை ஜாதி, மத, சமூக வேறுபாடில்லாமல் அனைவரும் பயன்படுத்தலாம், குறிப்பிட்ட நபருக்கு அல்லது சமூகத்துக்கு மட்டும் எவ்வித உரிமையும் இருக்க முடியாது.
இந்த வழக்கு பாகுபாட்டை ஆதரிக்கும் வகையிலும், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறந்தவர்கள் இறுதி ஊர்வலத்தை மக்களுக்கான தொல்லையாக மனுதாரரின் கூட்ட மைப்பு எவ்வாறு கருதுகிறது என்று தெரியவில்லை. மனுதாரரின் கூட்டமைப்பு ஒரு பொறுப்பான அமைப்பு. கிராம மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்து, தங்களையே தரம் தாழ்த்திக் கொள்ளக்கூடாது. மனு தாரரின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது. இந்த மனு நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், கிராமத்தினர் இடையே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகையை மதுரை அமர்வின் இலவச சட்ட ஆணைக் குழுவுக்கு மனுதாரர் 15 நாட்களில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.