நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் சரமாரியான குற்றச்சாட்டுகள் – கேள்விகள்!

Viduthalai
5 Min Read

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது மற்றும் விவாதங்கள் நடத்தாமல் அவை ஒத்திவைக்கப்படுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றிய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து பின்வருமாறு பேசியுள்ளார்.
‘‘பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருகிறார். அங்கு இருக்கும் அவரது அலுவலகத்திற்கு செல்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தின் உள்ளே அவைக்கு வருவதில்லை. விவாதத்திற்கு தயாராக இல்லை, யாராவது கேள்வி கேட்டால் எழுந்து பதில் சொல்லும் பொறுப்பை தட்டிக்கழிக்கிறார். அந்த பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை என்றால் இவர்கள் விவாதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள். When power increases, responsibility increases என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மணிப்பூர் கலவரம், அதானி மேல் அமெரிக்காவின் குற்றச்சாட்டு, உத்தரப்பிரதேசத்தில் சம்பல் பகுதியில் தொடரும் இரு பிரிவினருக்கிடையிலான சண்டை என நாங்கள் எந்த விவாதத்தை தொடங்கினாலும் அதை பேச அவைத்தலைவர் அனுமதி மறுத்து அவையை ஒத்தி வைக்கிறார். அதானி விசயத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது.”

கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி

தமிழ்நாடு
கடலோர காவல்படையின ரால் லட்சத்தீவுகளின் அருகில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த பத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுதலை செய்யவும், குஜராத், போர்பந்தர் அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி அயன்பொம்மையா புரத்தை சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை தேடும் பணியை துரிதப்படுத்தி கண்டுபிடித்து தரக் கோரியும், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் நேரில் சந்தித்து கடிதம் வழங்கிக் கேட்டுக் கொண்டார்.

USOF நிதி பயன்பாடு குறித்து
கிராமப்புற மற்றும் மலைப்பகுதி களுக்கு உயர்தர டிஜிட்டல் சேவைகள் அளிப்பதற்காக உருவாக்கப் பட்ட The Universal Service Obligation Fund (USOF) நிதி பயன்பாடு குறித்து, இந்நிதி தொடங்கப்பட்டது முதல் இதுநாள்வரை பெறப்பட்ட சேவை வரியின் விவரம் மற்றும் பெறப்பட்ட நிதியை பயன்படுத்திய திட்டங்களின் விவரங்களையும் கேட்டு கனிமொழி அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

பரந்தூர் மற்றும் ஓசூரில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பது குறித்து ஆர். கிரிராஜன் கேள்வி

தமிழ்நாடு
பரந்தூர் மற்றும் ஓசூரில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக் கைகள் பற்றிய விவரங்கள் கேட்டு மாநிலங்களவையில் மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் கேள்வி எழுப்பினார்.

தொழிலாளர் நலனுக்கான திட்டங்களின் செலவு பயனீட்டாளர் விவரம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி

தமிழ்நாடு

ஒன்றிய அரசின் தொழிலாளர் நலனுக்காக ஒன்றிய திட்டங்களில் செலவு, பயனீட்டாளர் விவரம் குறித்து ஒன்றிய அரசிடம் கதிர் ஆனந்த் பின்வரும் கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.

கடந்த அய்ந் தாண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் தமிழ்நாடு உள்பட தொழிலாளர் நலனுக்காக ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒன்றிய நிதியுதவி திட்டங்கள் மற்றும் ஒன்றிய துறைத் திட்டங்களின் விவரங்கள் யாவை?
ஒதுக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, விடுவிக் கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்கள் மற்றும் கடந்த அய்ந்து வருடங்கள் மற்றும் நடப்பு காலத்தில் மேற்கண்ட ஒவ்வொரு திட்டத்திற்கும் ஆண்டு வாரியாக, திட்ட வாரியாக மற்றும் மாவட்ட வாரியாக விவரம் தருக?
மேற்கூறிய காலக்கட்டத்தில் தமிழ்நாடு உட்பட மேற்கண்ட திட்டங்களின் மூலம் பயன டைந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ் வளவு? நாட்டில் உள்ள தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு போதுமான நிதி யுதவியை வழங்க ஒன்றிய அரசு உத்தேசித்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

இரயில்வே வாரிய தலைவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி கோரிக்கை

தமிழ்நாடு

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி டில்லியில் உள்ள ரயில்வே வாரிய தலைவர் சதீஷ்குமார் அவர்களை சந்தித்து சென்னை எழும்பூர் காரைக்குடி கம்பன் விரைவு வண்டியினை மீண்டும் இயக்குவது, அதிராம்பட்டினம், பூதலூர், ஆலக்குடி, அய்யனா புரம், நீடாமங்கலம், பாபநாசம் ஆகிய ரயில் நிலையங்களில் பல்வேறு ரயில்களை நிறுத்தம் செய்வதற்கு, திருச்சி-தாம்பரம் சிறப்பு ரயிலினை நிரந்தரமாக அன்றாடம் இயக்குவது, மன்னார்குடி முதல் சென்னை வரை தஞ்சாவூர் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்குவது மற்றும் தொகுதிக்குட்பட்ட ரயில்வே சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிறைவேற்றி தருமாறு கோரிக்கை வைத்தார்.

வேலைவாய்ப்பின்மை விகிதம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கேள்வி

தமிழ்நாடு

நாட்டின் இளைஞர் வேலை யின்மை விகிதம் உலகளவில் இந்தி யாவில் மிக அதிகமாக உள்ளது என்கிற தகவல் உண்மையா என்று மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கேள்வி எழுப்பினார். மேலும் தேசிய ஆய்வுகளின் மாதிரி வடிவமைப்புகள் அதே தரவை அளித்தனவா என்றும் கடந்த அய்ந்தாண்டுகளில் , மாநிலங்கள் வாரியாக, ஆண்டு வாரியாக நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த தரவு அரசிடம் உள்ளதா என்றும் இருந்தால் அத்தரவுகளை வெளியிட வேண்டும் என்றும் இல்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன அரசு கூறவேண்டும் என்றும் அவரது கேள்வியில் குறிப் பிட்டுள்ளார்.
ஸ்வச் பாரத் 2.0 திட்டத்தின்கீழ் திடக்கழிவுகளை கையாள்வதற்காக நிறுவப்பட்ட வசதிகளை மேம்படுத்த கடந்த அய்ந்து ஆண்டுகளில் அரசு எடுத்த நடவடிக்கைகளை மாநிலம் மற்றும் ஆண்டு வாரியாக வெளியிடுமாறு கேட்டு எம்.எம். அப்துல்லா கேள்வி எழுப்பினார்.

PM-KUSUM திட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட சோலார் பம்புகளின் விவரங்களை கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அ. மணி கேள்வி

தமிழ்நாடு
PM-KUSUM திட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட சோலார் பம்புகளின் எண்ணிக்கையை மாநிலங்கள் வாரியாக வெளியிட மக்களவையில் அ. மணி எம்பி கோரியுள்ளார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். சோலார் பம்ப் நிறுவுவதற்கான இலக்கில் இதுவரை எட்டப்பட்ட இலக்கின் அளவு, மாநில வாரியாக நிதி ஒதுக்கீடு, விவசாயிகளுக்கான மானியக் கட்டமைப்பு விவரம் மற்றும் சோலார் பம்புகள் அமைப்பது குறித்த கூடுதல் விவரங்களையும் கேட்டுள்ளார்.

இந்தியா கூட்டணி எம்பிக்கள் சந்திப்பு
இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *