கிருட்டினகிரி, நவ.28- கிருட்டினகிரி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024 அன்று மதியம் ஒரு மணியளவில் கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யம் அன்னை மணயம்மையார் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கழக தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்துப் பேசினார்.
மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி அனைவரையும் வர வேற்றுப் பேசினார். கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செய லாளர் க.வெங்கடேசன், மாவட்ட விவசாயணி தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து. இராஜேசன், கிருட்டினகிரி நகர கழகச் செயலாளர் ஆட்டோ அ.கோ.இராசா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, மாநிலஇளைஞரணி துணைச்செய லாளர் மா.செல்லதுரை ஆகியோர் கருத்துரை வழங்கினர். கூட்டத்தில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் சென்னை பெரியார் திடலில் டிசம்பர் 2இல் சுயமரியாதை நாள் ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர்’’ அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாளில் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து இயக்க ஏடுகளுக்கு சந்தாக்களையும், பெரியார் உலகம் நிதியையும் வழங்கி சிறப்பிக்க வேண்டும். கிருட்டினகிரி மாவட்டம் முழுவதும் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாளில் கழகப் பிரச்சார நிகழ்வாக ஒவ்வொரு ஒன்றியத்திலும் கிளைக் கழகம்தோறும் கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்படவேண்டும் என்பதை எடுத்துக் கூறியும், ஒவ்வொரு அணியின் பொறுப்பாளர்களும் தோழர்களும் அவரவர்களுக்குரிய கழகப் பணிகளை செவ்வனே செயலாற்ற வேண்டும் என்பதை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.
கிருட்டினகிரி மாவட்டத்திற்கு முதல்முறையாக வருகை தந்த மாநில இளைஞரணி செயலாளர் நாத்திகப் பொன்முடிக்கும், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மா.செல்லதுரைக்கும் மற்றும் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் ஆகியோருக்கு மாவட்ட கழக சார்பில் மாவட்டத்தலைவர் கோ.திராவிடமணி சால்வை அணிவித்து சிறப்பித்தார். கூட்டத்தில் மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் மு.வேடியப்பன், கிருட்டினகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, ஒன்றியச் செயலாளர் கி.வேலன், மத்தூர் ஒன்றிய கழகத் தலைவர் கி.முருகேசன், காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் பெ.செல்வம், நகரச் செயலாளர் ஆட்டோ அ.கோ.இராசா, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, இரஞ்சித் (எ) சாக்கப்பன் ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.
மாவட்ட கழக துணைச் செயலாளர் சி.சீனிவாசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், கிருட்டினகிரி கார்நேசன் திடலில் பெரியார் மய்யம் படிப்பகம் உருவாக சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு இடம் வழங்கிய கிருட்டினகிரி நீதிக்கட்சி பாரம்பரிய குடும்பத்து கொள்கை வாரிசு பெரியார் பெருந்தொண்டர் கார்நேசன் திடல் டிரஸ்ட் செயலாளரும் மூத்த வழக்குரைஞருமான சுயமரியாதைச் சுடரொளி ஜி.எச்.லோகாபிராம் அவர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்து இரண்டு மணிதுளிகள் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது.
டிசம்பர்- 2 சுயமரியாதை நாள் சென்னை பெரியார் திடலில் உலகத் தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரி யார் கொள்கையை உலகம் முழுவதும் பரப்பிவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை 92 ஆம் ஆண்டு பிறந்தநாளில் நேரில் சந்தித்து பிறந்தநாள் பரிசாக இயக்க ஏடுகளுக்கு சந்தா மற்றும் பெரியார் உலகம் நிதிகளை வழங்கி மகிழ்வது எனவும், கிருட்டினகிரி மாவட்ட முழுவதும் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவை சுயமரியாதை நாளாக எழுச்சியுடன் சிறப்பாக கொண்டாடுவது எனவும்,
டிசம்பர் 24 அன்று தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி அமைதி ஊர்வலம் – பேரணி நடத்தி அவரது சிலைகளுக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது எனவும்,
திருச்சியில் வருகின்ற டிசம்பர் 28,29 ஆகிய இரு தேதிகளில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெறும் மாநாட்டில் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களையும் தோழர்களையும் பெரும் அளவில் பங்கேற்க வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.