சுயமரியாதைத் திருமணச் சட்டம் [28.11.1967]
28.5.1928இல் சுக்கிலநத்தம் என்ற ஊரில் தந்தை பெரியார் தலைமை ஏற்று வரலாற்றில் முதல் சுயமரி யாதை திருமணத்தை நடத்தி வைத்தார்.
அதன்பிறகு பல்லாயிரக்கணக்கான சுயமரியாதைத் திருமணங்கள் தந்தை பெரியார் தலைமையில், திராவிட இயக்கத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்றன. அப்போதிருந்த அரசோ, நீதிமன்றங்களோ இந்தத் திருமண முறையை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால், அன்றைய சுயமரியாதை இயக்கத் தோழர்களும், பிற்காலங்களில் திராவிட இயக்கத் தோழர் களும், சட்ட அங்கீகாரத்தைப் பற்றி கவலைப்படாமல் சுயமரியாதைத் திருமணங்களை செய்து கொண்டே இருந்தனர்.
1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தந்தை பெரியார் அவர்களுக்கே இந்த ஆட்சி காணிக்கை என்று கூறிய முதலமைச்சர் அண்ணா அவர்கள், தந்தை பெரியாருடைய கொள்கைகளை நிறைவேற்றுவதே எங்கள் இலட்சியம் என்று வாய்ச் சொற்களாக இல்லாமல் நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.
அதில் முக்கியமானதாக சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரத்தை அளிப்பதை தன் தலையாய பணியாக எடுத்துச் செய்தார்.சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்து, விவாதங்கள் நடைபெற்று, அனைத்துக் கட்சிகள் ஆதரவோடு 28-11-1967 அன்று சுயமரியாதைத் திருமணம் சட்டமன்ற அவையிலும், பிறகு அப்போதிருந்த மேலவையிலும் நிறைவேற்றி
17-1-1968 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று 20-1-1968 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டு சட்ட வடிவமானது.
இதோ, இப்போது பெரியார் திடலில் இயங்குகின்ற பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் வாயிலாக ஆயிரக்கணக்கான ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணங்களாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழி காட்டுதலின்படி செவ்வனே நடைபெற்று வருகின்றது.
வெல்க சுயமரியாதை இயக்கக் கொள்கைகள்!