‘நோயைவிட சிகிச்சை கொடுமையானது’ என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு.
அதாவது சில பிரச்சினைகளுக்கும்கூட சிலர் சொல்லும் அல்லது ஈடுபட்டு செய்யும் செயல் முறையிலும் – அதன் முறைகளைப் பற்றியதே மேற்கொண்ட பழமொழியின் விரிவாக்கம் ஆகும்.
மருந்துகளை நமது டாக்டர்கள் எழுதிக் கொடுப்பதும் – அதை நோய் போக்கவோ, நோயிலிருந்து நீங்கவோ நாம் எடுத்துக் கொள்கிறோம்.
பல நேரங்களில் அந்த மருந்துகளேகூட,நோயைத் தீர்ப்பதைவிட மேலும் உடற் சங்கடங்களை கூடுதலாக்கி விடக் கூடும்.
பொதுத் தத்துவமாக, 2500 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தமது திருக்குறளில் ‘மருந்து அதிகாரத்தில்’ எழுதியுள்ள 10 குறட்பாக்களும் மருந்து, மருத்துவம், நோயாளிகள், மருத்துவர்கள் கண்காணிப்பு சிகிச்சை முறைகளின் நல்லுறவு எப்படி இருக்க வேண்டும்; அப்படி இருந்தால் எத்தகைய சிகிச்சை வாய்ப்பு அமையும் என்பதை அக்குறள்களில் மிகத் தெளிவாக எழுதியுள்ளார்!
‘‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.’’ (குறள் 942)
இதன் பொருள்: ஒருவன், தான் முன்னர் உண்ட உணவானது, நன்கு செரித்துவிட்ட தன்மையைத் தெளிவாக அறிந்து கொண்ட பிறகு, தக்க அளவு உண்பானேயானால், அவனுடைய உடம்புக்கு, மருந்து என்ற ஒன்று வேண்டியதில்லை ‘என்னே பகுத்தறிவுச் சிந்தனை!’
ஆனால், சமூக உறவு காரணமாக தொற்றுநோய்கள் – பருவங்களாலும் கால நிலைகளாலும் – ஏற்படும் நிலையில் மருந்து எடுத்துக் கொள்ளும் சிகிச்சையும்கூட தவிர்க்கப்பட முடியாததுதானே!
அப்படி, நமது டாக்டர்கள் மருந்து எழுதிக் கொடுக்கும்போது, எந்த மருந்துகளானாலும் அதிகம் புதிது புதிதாக வரும் மருந்துகளை பரிந்துரைப்பார்கள்.
அம்மருந்துகளில் சிலவோ, பலவோ நோயாளிகளின் உடலுக்கு ஒவ்வாமையிருந்தால் ஏற்காது.
வேறு சில மருந்துகளோ, பல பக்க விளைவுகளையும் (Side Effects) ஏற்படுத்தி, நோயாளிகளுக்கு மேலும் தொல்லை, துன்பத்தை ஏற்படுத்தும்.
எனவே எவ்வளவு சிறந்த சிகிச்சை, அனுபவம் வாய்ந்த டாக்டர் எழுதித் தந்த மருந்து உட்கொள்ளல் என்றாலும், நமது உடல் அம்மருந்தினை எந்த அளவுக்கு ஏற்கிறது என்பதுதான் முக்கியம்.
பக்க விளைவுகள் நோயைவிட மோசமாக்கி நோயாளிகளுக்கு வாழ்நாள் நோய் தொல்லைகளை ஏற்படுத்தலாம்.
எனவே மிக முக்கியம், டாக்டர் சொல்வதைவிட, உங்கள் உடம்பு அத்தகைய மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு என்ன சொல்லுகிறது – என்பதே மிக மிக முக்கியம்.
டாக்டருக்கு ஒரு காது கொடுக்கும் அத்தகைய நோயாளிகளான நண்பர்கள், நம் உடலுக்காக உங்கள் இரண்டு காதுகளுக்கும், மூளைக்கும் கேளுங்கள்; சிந்திக்கும் திறனையும் – கொடுத்து டாக்டரிடமே நிலையை விளக்கி, மாற்றுப் பரிகாரம் தேடுதல் மிக மிக முக்கியம்.
சில மருந்துகளை நாம் பயன்படுத்துவது பல ஆண்டுகளான நடைமுறை என்றாலும், அம்மருந்துகள் பற்றிய ஆய்வும் – தகவல் முடிவுகளும் இப்போது அதிகம் வெளி வருவதால் டாக்டர்களும், நோயாளிகளும் வெகுவாகவே யோசித்து, அவற்றைத் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசரம் அவசியம்.
இன்று (28.11.2024) ‘ஹிந்து’ ஆங்கில நாளேட்டில் வந்துள்ள இரண்டு டாக்டர்கள், அறிவார்ந்த கட்டுரை ‘Zintac’ ‘சின்டாக்’ என்ற மருந்தில் மேற்படி ஆபத்தை ஏற்படுத்தும் கூறுகள் இருப்பதாகவும், ஒன்றிய அரசு அதனை தடை செய்ய வேண்டும் என்றும் எழுதியுள்ளனர்!
சாப்பிட்ட பிறகு உடனே படுக்காமல் – உணவு மேலே எதுக்களித்து வராமல் இருக்க இந்த Acid refluxஅய் தவிர்க்க
எழுதி கொடுப்பார்கள் டாக்டர்கள்.
அதில் இதயத்திற்கு ஆபத்து உண்டாக்கும் (‘Carcinogenic’ – heart-burn மருந்து) அந்த Zintac ‘சின்டாக்’ மருந்து மற்றும் Ranitidine மருந்து என்று விளக்கி எழுதி, அதனால் அம்மருந்துகளை தடைசெய்ய வேண்டும் என்று தக்க காரணத்தோடு எழுதியுள்ளனர்.
‘Ranitidine’ என்ற மருந்தும் எங்கும் இந்த ‘acid reflux’ என்ற நெஞ்செரிச்சல் – ‘எதுக்களித்தல்’ போன்றவைகளுக்கு டாக்டர்களால் எழுதப்பட்டு, மருந்தகங்களில் விற்பனையாகிறது.
அரசு இதை கவனித்து நடவடிக்கை எடுக்க முன், டாக்டர் Prescription எழுதிக் கொடுப்பதில் இதைத் தவிர்ப்பதும், ஏற்கெனவே சாப்பிட்டு வருபவர்களுக்கு அறிவுறுத்தும் வகையிலும் அறிவுரை கூறுவதும் மிக முக்கியம்!
மருந்து நோயைத் தவிர்ப்பதைவிட புதிதாக ஒரு நோயை உருவாக்கி விடக் கூடாது அல்லவா?
கவனம்! கவனம்!! கவனம்!!!