தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை
சென்னை, நவ. 27- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளான இன்று தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார்.
தமிழ்நாடு தி.மு.க. அரசின் துணை முதலமைச்சரும், தி.மு.க.வின் ஆற்றல்மிகு இளைஞரணி செயலாளரும், சீரிய பகுத்தறிவாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (27.11.2024) காலை 9.30 மணிக்கு தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவுத் தூண் ஆகிய நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியார் நினைவிட நுழை வாயிலில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அன்புடன் வரவேற்றனர்.
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தார்.
இதையடுத்து தமிழ்நாடு இந்து அற நிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் ஏற்பாட்டில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங் கும் நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள், கல்லூரி மாணவர்கள், சுயஉதவிக்குழு மகளிர், விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், தி.மு.கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் சிறப்பித்தார்.
தமிழர் தலைவரிடம் வாழ்த்து
இதையடுத்து பெரியார் அருங் காட்சியகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சந்தித்து தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துப் பெற்றார்.
உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறி, அவர் எழுதிய ‘‘உலகத் தலைவர் பெரியார் – வாழ்க்கை வரலாறு’’ தொகுதி – 10, ‘‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தொண்டறம்’’ ஆகிய இயக்க நூல்களை வழங்கி சிறப்பு செய்தார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணை பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அமைச்சர் பெருமக்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், சா.சி. சிவசங்கர், சென்னை மாநகர மேயர் பிரியாராஜன், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் புரசை ரங்கநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, சி.வி.எம்.பி. எழிலரசன் மற்றும் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் மதுரை இளமயிலன், இலட்சுமணன், அயலக அணி துணை செயலாளர் பரிதி இளம்சுருதி, எழும்பூர் பகுதி செயலாளர் சுதாகர், வட்டச் செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று வாழ்த்துத் தெரிவித்தனர்.