‘குடிஅரசு’ சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடர் வண்டியில் புறப்பட்டோம்.
தாமதமாக வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இரவு நடுநிசி 12.26க்குத் தான் ஈரோட்டிலிருந்து புறப்பட்டது. காலை 6.49க்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெளியே வந்து, காரில் ஏறி அமர்ந்தவுடன் ஒரு நடுத்தர வயது அம்மையார் – அன்புடன் பின்னால் என்னைத் தொடர்ந்து வந்து, வணக்கம் தெரிவித்தார் – பாசமுடனும், மரியாதை கலந்த அன்புடனும்.
‘நான் பெரியார் மணியம்மை பழைய மாணவி’ என்று பெருமிதத்துடன் மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
நான் ‘பெரியார் மணியம்மை கல்லூரியா? பல்கலைக் கழகமா? பள்ளி – மாணவியா?’ என்று கேட்டபோது, அவர் ‘திருச்சி பெரியார் மணியம்மையார் மேல் நிலைப்பள்ளி மாணவியாகப் படித்தேன்’ என்று கூறினார்.
என்னுடன் ஒளிப்படம் கைப்பேசியில் எடுக்க அன்புடன் தயங்கிய வண்ணம் வேண்டுகோள் விடுத்தார்.
நான் காரிலிருந்து இறங்கி அவருடன் நின்று கைப்பேசியில் படம் எடுக்க வாய்ப்பை அளித்தேன். வேறு ஒருவரும் அவரது கைப்பேசியினால் என்னுடன் படம் எடுக்க அனுமதி கேட்டார். மகிழ்ச்சியுடன் நின்றேன் – பிறகு எனது கார் புறப்பட்டது.
எங்கே பயணித்தாலும் நமது பழைய மாணவச் செல்வங்களைச் சந்திக்கும் போதெல்லாம் ஏற்படும் பரவசமான வாய்ப்பினால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமே இல்லை!
வெளிநாட்டு விமான நிலையங்களில், சிலபல அலுவலகங்களுக்குச் சென்று சில கடமைகளை ஆற்றும்போதும் சரி – டில்லித் தலைநகர் மற்ற பல வெளியூர் – வெளிநாடுகளிலும் இத்தகைய எதிர்பாராத நமது கல்விக் குடும்ப உறவுகளின் பாசமும், நேசமும் பெறுகிறபோது அடையும் மகிழ்ச்சியை அளவிட்டு எழுதவோ, பேசவோ முடியாது!
ஜாதி, மதம், கட்சி, பிரதேசம் எல்லாம் கடந்த மானிட உறவு அது!
கார் சென்ட்ரல் வளாகத்தை விட்டு வெளியே கிளம்புகையில் முன்னால் ஓர் ஆட்டோவில் எழுதப் பட்ட வாசகங்களைப் படித்தேன்.
‘உழைப்பை நம்பு
உறவை நம்பாதே’
எவ்வளவு ஆழமான அனுபவ உண்மையின் வெளிப்பாடு இது என்று வியந்தேன் – சிந்தித்தேன். உழைப்பை நம்புவதுதான் வாழ்க்கையில் உயருவதற்கு உதவிடும் உன்னத வழி முறை; அதே நேரத்தில் ‘உறவை நம்பாதே’ என்பதும் கேள்விக்குறியுடன் ஆழ்ந்து யோசிக்க வேண்டிய கருத்துதான்.
‘உறவு’ என்று இங்கே அந்த ஆட்டோ தோழர் குறிப்பிடுவது, ரத்த உறவு பற்றியதாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்.
ரத்த உறவுகள் பலரும் – சொந்த பந்த தாய்ப் பிள்ளை உறவுகூட அற்ப சொத்தாசையில் கூலிப்படையை ஏவி கொலை வரை திட்டமிட்டு நடத்திடும் அன்றாட அவலச் செய்திகள் காரணமாகப் பிறந்த அனுபவ அறிவுரையா…? அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று வியர்வைக் கடலில் நீந்திய பிறகு உள்ளூர் உறவுகளுக்கு ‘நில புலம்’ வாங்கி வையுங்கள் என்று சேமித்த பணம் ஏராளம் அனுப்பியதையெல்லாம் ஏமாற்றி விடும் எத்தர்களும் ‘உறவுகளின்’ பட்டியலில் (ரத்த உறவுகள்தான்) உள்ளதால் இதைக் குறிப்பிடுகிறோரோ – தெரியவில்லை.
தெலங்கானா மாநிலம், யதாத்ரி மாவட்டம், மோட்குரு மண்டலம், சதர்சபுரம் கிராமத்தில், தந்தையின் உடலுக்கு இறுதி நிகழ்வுகளை நடத்தவிடாமல், மூன்று நாள்களாக சகோதரர்கள் சொத்துப் பிரச்சினையால் சண்டையிட்டு, வீட்டிலேயே தந்தையின் உடலை வைத்திருந்தனர். என்னே கொடுமை! எவ்வளவு வேதனையும், வெட்கமும் – இதுதான் ரத்த உறவு.
ஆனால் கொள்கை உறவுகளோ, கல்வி உறவுகளோ அப்படிஏமாற்றுவது வஞ்சிப்பது கிடையாது; வேண்டுமானால் நன்றி காட்டத் தவறியிருக்கலாம் – அந்த குற்றம்கூட உண்மையான கொள்கை உறவுகளிடம் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது!
கல்வி உறவுகளின் பாசமோ தெளிந்த நீரோடை; குடும்ப உறவுகளோ சிற்சில இடங்களில் பற்பல நேரங்களில் குழம்பிய குட்டையாக, ஏமாற்ற எண்ணிடும் சூழ்ச்சி சூழல்கள் நிறைந்த ஆறாகக்கூட ஏற்படக்கூடும்!
அதற்கென்ன செய்ய முடியும்?
இதுதான் உலகம்!!
இதில் நல்ல மனிதர்களும் வாழுகிறார்கள் என்ற ஆறுதலையே நாம் எண்ணி மகிழ்வோம் – வாழ்வோம்!
‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்றவர்களே நமக்கு சம்மட்டி அடி பாடம் – இல்லையா?