மும்பையில் நடந்த பாடல் நிகழ்ச்சி ஒன்றில் துணை முதலமைச்சர் மனைவி அம்ருதா பட்னாவிஸ் பேசும் போது, ‘‘பிராமணர்கள் மிகவும் அறிவாளிகள். அவர்கள் உயர்ந்த தகுதியில் இருப்பவர்கள். நானும் ‘பிராமண’க் குடும்பத்தில் பிறந்தவள் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்று கூறியுள்ளார்
மகாராட்டிராவின் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் தன்னைத் தானே பாடகர், பொருளாதார நிபுணர், நடிகை, தொழில் ஆலோசகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், கட்டடக்கலை நிபுணர், குறும்படத் தயாரிப்பாளர், சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர் என்ற பல பெயர்களை தானே உருவாக்கிக் கொண்டு வலம் வருவார், அவர் பிரபல தனியார் வங்கியின் இயக்குநராகவும் உள்ளார்
கடந்த முறை தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக இருந்தபோது மகாராட்டிர அரசு ஊழியர்கள் சம்பளக் கணக்கை தான் இயக்குநராக இருக்கும் வங்கிக்கு மாற்றிய ஊழலில் இவரது பெயர் முதன் முதலாக பொது வெளியில் வந்தது. அதன் பிறகும் இவர் அனைத்து அரசு இயந்திரங்களையும் தனது சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்தினார்.
முதலமைச்சர் இல்லத்தில் வைத்து பாகிஸ்தானிய இளைஞர் ஒருவருடன் நடனமாடியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அரசு இல்லத்தை தனது சொந்தப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவது தவறு என்று கூறப்பட்டது, இதற்கு அன்றைய முதலமைச்சர் தேவேந்திரபட்னாவிஸ் எந்த கருத்தும் கூறவில்லை.
அதே போல் கோவாவிற்குத் தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் சென்ற போது காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பில் வலம் வந்ததும், அதிகாரிகளை பொருட்கள் வாங்க அனுப்பியதும், கைப்பேசியைக் கையில் கொடுத்து நிழற்படம் எடுக்க வைத்தது தொடர்பாகவும் எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை எழுப்பி இருந்தன.
இந்த நிலையில் அங்கு மாநில தேர்தல் பிரச்சாரத் தின் போது பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் பாடல் பாடி முடிந்த பிறகு அவர் பேசியதுதான் கவனத்துக்குரியது.
‘‘பல திறமையான பாடகர்கள் அனைவருமே ‘பிராமணர்’கள் தான். ‘பிராமணர்’கள் அறிவாளிகள், உயர்தகுதி கொண்டவர்கள், இதனால் நானும் பிராமண குடும்பத்தில் பிறந்துள்ளேன் என்பதில் பெருமை கொள் கிறேன்’’ என்று கூறினார். இது தொடர்பாக கன்னையா குமார் கடும் விமர்சனம் வைத்துள்ளார்.
தேர்தலில் மோடி ஏக் ஹை தோ சேப் ஹை (ஹிந் துக்கள் ஒன்றாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்) என்கிறார். சாமியார் ஆதித்யநாத் ‘பட்டேங்கேத்தோ கட்டேங்கே’ – ஹிந்துக்கள் தனித்து நின்றால் இஸ்லாமியர் களால் வெட்டப்படுவீர்கள் என்று பேசுகிறார்.
மகாராட்டிர துணை முதலமைச்சர் மனைவியோ ‘பிராமணர்கள்’ உயர்ந்தவர், அறிவாளி என்று கூறுவதன் படி பார்த்தால் பிராமணர் அல்லாதவர்கள், கீழானவர்கள், முட்டாள்கள் என்று கூறவருகிறாரா என்ற கேள்வியை எழுப்பினார் கன்னையாகுமார்.
இதற்கு துணைமுதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கடுமையான சொற்களால் கன்னையா குமாரை வசை பாடியுள்ளார்.
‘‘கன்னையாகுமார் நேரடியாக என்னிடம் மோதாமல் எனது குடும்பத்தாரிடம் மோதுகிறார். அவர் ஒரு சிகண்டி (மகாபாரதத்தில் திருநங்கை பாத்திரம்). அதாவது ‘‘ஆண்மையற்றவர்’’ என்று கூறியுள்ளார். இதற்கு காங்கிரசு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நகைச்சுவை நடிகர் என்று கூறிக்கொள்ளும் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளான மதுவந்தி தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது ‘‘பிராமணர்கள் மிகவும் அறிவாளிகள். அவர்களுக்கு மூளை வலிமை அதிகம்! ஆகையால் தான் அவர்கள் எதிலும் முதலிடத்தில் உள்ளனர்’’ என்று பேசவில்லையா? நடிகை கஸ்தூரி எப்படி எல்லாம் வெறித்தனமாகப் பேசினார் என்பதும் தெரிந்ததுதான்.
அதே போல் மக்களைவைத் தலைவர் ஓம் பிர்லா கடந்த ஆட்சியின் போது ராஜஸ்தானில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது ‘பிராமணர்’கள் மிகவும் உயரிய தகுதியில் பிறந்தவர்கள் என்று கூறியிருந்தார். இதற்கு அப்போது காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டம் தெரிவித்திருந்தனர்.
பார்ப்பனர்களின் ஆதிக்க உணர்வையும், செயல்பாடு களையும் நாம் விமர்சித்தால் வகுப்புத் துவேஷம் செய்வதாக அலறுகின்றனர்.
இப்பொழுது பார்ப்பனர்கள் குறிப்பாகப் பெண் பிரமுகர்களே ‘பிராமணர்’கள் யார் தெரியுமா?’’ என்று சவால் விடுகின்றனர்.
தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகளுக்குமுன் தொடங் கப்பட்ட போராட்டத்தை இப்பொழுது பார்ப்பனர்களே தொடங்கிக் கொடுக்கின்றனர். நடக்கட்டும் – அதுவும் ஒரு வகையில் வரவேற்கத்தக்கதே! வடமாநில ஒடுக்கப் பட்டோர் விழித்தெழ இது பயன்படும் அல்லவா!