புதுடில்லி, நவ.27- அரசமைப்பு சட்ட நாளை முன்னிட்டு ‘அரசமைப்பை பாதுகாப்போம்’ என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று (26.11.2024) தொடங்கியது.
அரசமைப்பு சட்ட 75ஆவது ஆண்டு நாள் நேற்று (26.11.2024) கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசமைப்பை பாதுகாப் போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கி யுள்ளது. ஜனவரி 26 வரை 2 மாதங்களுக்கு இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
டில்லியில் நடைபெற்ற தொடக்க விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசிய தாவது: அரசமைப்பு சட்டத்தை பிரதமர் மோடி படிக்கவில்லை என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். அவர் படித்திருந்தால் அவர் நாள்தோறும் என்ன செய்கிறாரோ அதை அவர் செய்ய மாட்டார். அரசமைப்பு சட்டம் ஒரு ஆவணம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட இந்தியாவின் வாய்மை மற்றும் அகிம்சையின் விழுமியங்களை உள்ளடக்கியது.
நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக உள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், பழங்குடியினர் மற்றும் ஓபிசி சமூகத்தினரின் பாதையின் குறுக்கே தடைகள் உள்ளன. இந்தத் தடைகளை அகற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முயற்சிகளை மேற் கொண்டது.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், உணவுப் பாதுகாப்பு திட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டன. ஆனால் இந்த தடைகளை பிரதமர் மோடியும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் பலப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.