1957-ஆம் ஆண்டு, நவம்பர் 3-ஆம் தேதி, தஞ்சையில் திராவிடர் கழகத்தின் ஸ்பெஷல் (தனி) மாநாடு ஒன்றை தந்தை பெரியார் அவர்கள் நடத்தினார்கள். லட்சக்கணக்கில் அந்த மாநாட்டில் மக்கள் கலந்து கொண்டார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதம், ஜாதிகளை காப்பாற்றும் பகுதிகளைச் சுட்டிக் காட்டி, (13(2); 25(1); 26, 29(1)(2) 368) இப்பகுதிகளை அரசு நீக்க 15 நாள்கள் கெடு விதித்து கீழ்கண்டவாறு பெரியார் தீர்மானம் நிறைவேற்றுகிறார்:
“இந்த நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு அமைப்பு, ஜாதி, மதம், ஆகியவை காரணமாக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் அளிக்கப்படாததாய் இருப்பதால், இவைகளை முன்னிட்டு இந்த அரசியல் சட்டம் இந்நாட்டுப் பெருங்குடி மக்களுக்கு கேடானது என்று கருதுவதால் இக்கேடுகளுக்கு ஒரு தெளிவான பரிகாரமோ, விளக்கமோ இன்று முதல் 15 நாள் வாய்தாவுக்கு இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக 1949 நவம்பர் 26 ஆம் தேதி அன்று அரசியல் சட்ட பிறப்பு நாள் வைத்து இந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று மாலையில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிடராலும் இச்சட்டம் நெருப்பிலிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநாடு பொது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறது” என்ற தீர்மானத்தை லட்சக்கணக்கான மக்களின் ஆதரவோடு நிறைவேற்றி, அரசிற்கு பகிரங்கமாக அறிவித்தார்.
பெரியாரின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாத நிலையில், அரசியல் சட்டம் உருவான நவம்பர் 26-ஆம் அதே தேதி அன்று 1957இல் தமிழ்நாடு முழுவதும், பெரியார் தொண்டர்கள் அரசியல் சட்டத்தை கொளுத்தினார்கள். அதற்கு முதல் நாளே, 25.1.1957 அன்று திருச்சியில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் இடப்பட்டார்.
அரசியல் சட்டத்தை எரிப்பவர்களுக்கு எந்த தண்டனையும் இதுவரை இல்லாத நிலையில், அரசியல் சட்டத்தை எரிப்போம் என பெரியார் அறிவித்தவுடன், எரித்தால் மூன்று ஆண்டுகள் சிறை என்று தமிழ்நாட்டில் பெரியார் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு அன்றைய காங்கிரசு அரசு அவசரமாக சட்டம் கொண்டு வந்தது. (The Tamil Nadu Act No.XIV of 1957 – The Prevention of Insults to National Honour Act, 1957 – 18.11.1957).
ஆனால், சட்டத்தை கண்டு பெரியார் தொண்டர்கள் எவரும் பயப்படவில்லை. தமிழ் நாடெங்கும் 10 ஆயிரம் கருஞ் சட்டைத் தோழர்கள் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பகுதியைக் கொளுத்தி அதன் சாம்பலை அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
அரசினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மூவாயிரம் பேர்; ஆறு மாதம் முதல் மூன்றாண்டு வரை கடும் தண்டனையை சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்ட அந்த போராளிகள், நீதிமன்றத்தில் எதிர் வழக்காடவில்லை.
தந்தை பெரியார் கூறியபடியே, (விடுதலை 23-11-1957),
“நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தை திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.
ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தை கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர்-வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.”
என பெருமிதத்துடன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தனர். சிறை புகுந்தனர்.
மன்னிப்பு கேட்டால் விடுதலை தருவதாகச் சொல்லியும், சவர்க்கார் போல மன்னிப்பு கடிதம் எல்லாம் தந்து விடுதலை ஆகவில்லை. சிறுவர், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் தண்டனை காலத்தை முழுவதும் அனுபவித்தனர்.
சிறைக்குள்ளேயே அய்ந்து தோழர்கள் மரணமடைந்தனர்; விடுதலையான ஒரு மாதத்துக்குள்ளேயே பல தோழர்கள் மரணத்தை தழுவினர்; ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் பெரியார் இயக்கம் கொடுத்த களப்பலி 18 பேர்!
ஜாதி ஒழிப்புக்காக இந்திய வரலாற்றில் பெரியாரும், அவர்தம் இயக்கமும் நடத்திய போராட்டத்திற்கு இணையாக எவரும் நடத்திடவும் இல்லை; இத்தகைய எண்ணிக்கையில் சிறை தண்டனை பெற்றதும் இல்லை; நீதிமன்றத்தில் துணி வுடன் அறிக்கை கொடுத்ததும் இல்லை.
இத்தகைய நெஞ்சுரத்தோடு இந்திய வரலாற்றில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கம், பெரியார் இயக்கத்தை தவிர வேறு எந்த இயக்கமும் இல்லை என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.
இன்றைக்கு ஜாதி நெருப்பை ஜாதி வெறியை தூண்டுகிறவர்களை, அடியாள் வேலைக்கு வா என தைரியமாக அழைக்க துணிகிறவர்களை இனங்கண்டு எதிர்க்கவேண்டும்; புறக்கணிக்க வேண்டும்.
1957 நவம்பர் 26இல் ஜாதி ஒழிப்புப் போரில் ஈடுபட்ட அந்த போராளிகளின் தியாகத்தைப் போற்றி, ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுக்க இன்றைய நாளில் உறுதி ஏற்போம்.
– கோ.கருணாநிதி