சென்னை, நவ. 26- நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க தமிழ்நாடு அரசு முற்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறுவது உண்மைக்கு புறம்பானது என கைத்தறித் துறை அமைச்சர் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் காந்தி வெளியிட்டிருக்கும் அறிக்கை விவரம்:
நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிப்பது தொடர்பாக கைத்தறித் துறையினால் எவ்வித அறிவிப்போ அரசாணையோ வெளியிடப்படவில்லை. சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநர் கடித ந.க.எண்.26821/ஆர்-1/2024 நாள் 06.11.2024இ–ன்படி அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு மின்சார வாரியத்திடமிருந்து பெறப்பட்ட மின் இணைப்பு பட்டியலுடன் ஒப்பீடு செய்யப்பட்டு வணிக பயன்பாடு மற்றும் வீட்டு பயன்பாடு என கண்டறிய மாநகராட்சிகள் மற்றும் மண்டல நகராட்சி வாரியாக ஆய்வு செய்து கேட்பு உயர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் (சென்னை தவிர) மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் மற்றும் ஊராட்சி ஆணையர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரை சதுர அடிக்கான தொழில்வரி ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, குடிசைத் தொழில் போல வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு வேலை செய்து வரும் நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகம் – மதுரவாயல் ஈரடுக்கு
மேம்பால பணிக்கு ஏற்கெனவே உள்ள
115 தூண்களை மீண்டும் பயன்படுத்த திட்டம்!
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னை, நவ.26- துறைமுகம் –- மதுரவாயல் ஈரடுக்கு மேம்பால பணிக்காக ஏற்கெனவே உள்ள 115 தூண்களை பயன்படுத்தப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை துறைமுகத்திலிருந்து கன்டெய்னர் சரக்கு லாரிகள் போக்குவரத்து தடையின்றி வந்து, செல்வதற்காக, கடந்த 2009ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலை திட்டமாக கருதப்பட்ட இந்த திட்டத்தை, 2009ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் தலைமையில், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 21 கிலோ மீட்டர் நீளமுள்ள ஈரடுக்கு மேம்பாலத்திற்கு தற்போதைய 125 தூண்களில் 115 தூண்கள் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் 115 தூண்களின் வலிமையை கண்டறிவதற்கான சோதனை நடந்து வருகிறது. இந்த தூண்கள் புதிதாக அமைய உள்ள வடிவமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூண்களிலிருந்தும் தூணின் மய்யப்பகுதி மற்றும் கம்பிகளின் மாதிரிகள் எடுக்கப்படுகிறது. அல்ட்ரா சோனிக் உள்ளிட்ட கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளது. ஏனென்றால் புதிய வடிவமைப்பிற்கு ஏற்றவாறு இந்த தூண்களை பயன்படுத்தப்பட உள்ளது. இந்த சோதனையானது குறைந்தது 2 வாரங்கள் எடுத்துக்கொள்ளப்படும்.
இதனிடையே வடகிழக்கு பருவமழை காரணமாக கூவம் ஆற்றின் கட்டுமானப் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் தடையின்றி செல்வதை உறுதிசெய்ய கட்டுமானத்திற்கு தேவையான தற்காலிக கட்டமைப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இருப்பினும் துறைமுக வளாகத்தில் 700 மீட்டர் தூரத்திற்கு விரைவுசாலை வரும் இடத்தில் பிரதான பாதை மற்றும் இரண்டு சாய்வு பாதைகளை அமைக்கும் பணியிலும் ஒப்பந்த நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதேபோல் மதுரவாயல் அருகே 640 மீட்டர் தூரத்திற்கு தூண் கட்டுமானத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.3570 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரும்பாக்கம் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.