– பெ. கலைவாணன்
திருப்பத்தூர்
தந்தை பெரியார் அவர்களால் உருவான சுயமரியாதை இயக்கம். அதன் நூற்றாண்டு காணும் இத் தருணத்தில் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு சிந்தனைகள், அவரை தொடர்ந்து நாகம்மையார், மணியம்மையார், ஆசிரியர், ஆகியோர் திராவிடர் கழகத்தின் மூலமாக முன்னெடுத்து செல்லும் தொடர் பகுத்தறிவு பிரச்சாரங்கள்.
இவற்றின் விளைவாக, இச் சமூகத்தில் காலம் காலமாக மனிதர்களிடையே தொடர்ந்து வந்த மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் இன்றைய நிலையில் எந் நிலையில் உள்ளது. பகுத்தறிவு பிரச்சாரத்தின் தாக்கம் எந்தளவிற்கு மக்களை விழிப்படைய செய்துள்ளது என்பதை குறித்து ஒரு பார்வை..
அந்த வகையில், அன்றாட வாழ்க்கை பயணத்தில் மக்களிடையே காணப்பட்ட மூட நம்பிக்கைகள் பல..பல..
எங்காவது பயணத்திற்கு புறப்படும்போது, “எங்க ஆயத்தம்“ என்று பயணம் பற்றி கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால் பயணத்தில் இடையூறு ஏற்படும் என்று நினைப்பது.
நல்ல காரியத்திற்காக வெளியில் புறப்படும் நேரம், துாங்கி எழும் நேரம் விளக்குமாற்றுடன் முன்னால் எவருமே நிற்கக் கூடாது.
கணவனை இழந்தவர்…
கணவனை இழந்தவர் (கைம்பெண்) வெளியில் செல்லும் போது எதிரில் வரக்கூடாது. போகிற காரியம் நடக்காது.
காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தாளி வரப் போகிறார்கள் என்று நினைப்பது.
நாய் இரவு ஊளையிட்டால் மரணம் வரப்போகின்றது.
வீட்டின் கதவில் திரும்பி போ என்று எழுதி வைப்பது. அப்படி எழுதி வைத்தால் இரத்த காட்டேரி உள்ளே வராது.
தெருவில் வாகனத்திலோ நடந்தோ செல்லும்போது பூனை குறுக்கே போனால் அபசகுனம் என்று நம்புதல்.
இரவில் வீட்டுக்குள் துடைப்பம் கொண்டு கூட்டக் கூடாது.. அய்ஸ்வரியத்தை அள்ளிக் கொண்டு போய்விடும் என்று நம்புதல். ( இப்போது துடைப்பம் மறைந்து vacuum cleaner வந்து விட்டது)
உள்ளங்கை கடித்தால் பணவரவு என்று நினைப்பது.
இரவில் கைமாற்றாக முட்டை அல்லது உப்பு கொடுப்பதைத் தவிர்த்தல். வீட்டில் சாவு விழும் என்ற மூடநம்பிக்கை.
இரவில் ஊசி கொண்டு தையல் வேலை செய்யக்கூடாது, இருட்டியதும் நகம் வெட்டக்கூடாது. அது வீட்டுக்கு கெட்டவாய்ப்பைக் கொண்டு வரும்.
இரவில் சமைத்த சாப்பாட்டை,குறிப்பாக மாமிசம் வெளியில் கொண்டு செல்லும்போது ஒரு துண்டு கரியைப் போட்டுக் கொண்டு செல்லுதல். இல்லை யென்றால் பேய், பிசாசு அடித்து விடும் என்பது. ( இப்போது நடு இரவில் தான் பிரியாணி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது)
நாவூறு படுதல், கண்திருஷ்டி வீட்டில் பல்லி கத்துவதற்கு ஒரு சகுனம், அது மேலே விழுந்தால் சகுனம், உடலில் மச்சம் இருப்பதை வைத்து நல்வாய்ப்புகளைக் கணிப்பது,
அறிவியல் பார்வையும் இல்லாமல்…
இப்படி எத்தனை, எத்தனையோ மூட நம்பிக்கைகள் இச்சமூக மனிதர்களிடையே எவ்வித அறிவியல் பார்வையும் இல்லாமல் இருந்து வந்தது.
வீட்டிற்குள் நுழையும் போது வாசல் படியின் மீது முதலில் வலது காலை எடுத்து வைத்து உள்ளே செல்ல வேண்டும் என்பார்கள். ஆசிரியர் அவர்கள் கேட்பார் இராணுவ பயிற்சியின் போது இடது – வடது (left – Right) என்று தான் சொல்லுகிறான். வலது – இடது (Right – left) என்று சொல்லுவதில்லையே, அப்போது அங்கே – எங்கே போனது இந்த வலது கால் பழக்கம் என்பார்.
இவையெல்லாம் அவரவர்கள், அவரவர் இல்லங்களில் பின்பற்றி வந்தவைகள். இவர்களின் இந்த சிறு,சிறு மூட நம்பிக்கைகள் காரணமாக அவரவர்களின் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளில் குழப்பங்கள், தயக்கங்கள் ஏற்றப்பட்டு அவர்களின் முன்னேற்றத்தில் தடைக் கற்களாக இருந்தவைகள்.
இந்த மூட நம்பிக்கைகள் எல்லாம் தந்தை பெரியாரை தொடர்ந்து திராவிடர் கழகம் பகுத்தறிவு பிரச்சாரத்தின் காரணமாக தமிழ்ச் சமூகத்திடையே அவர்கள் அறிந்தோ, அறியாமலோ இன்று பெரும்பாலும் அவைகள் தொலைந்துள்ளது என்பதை நாம் கண்கூடாக பார்க்கலாம்.
சமூகத்தில் பயத்தை உருவாக்கி…
அதே போன்று, சமூகத்தில் பயத்தை உருவாக்கி அந்த பயத்தை பயன்படுத்தி குறிப்பாக பேய், பில்லி, சூனியம் இவற்றை வைத்து மக்களை ஏமாற்றியவர்கள் ஏராளம். இவைகளும் ஒரளவு குறைந்துள்ளது. பேய் பிடித்த பெண்களையெல்லாம் இப்போது பார்ப்பது அரிதாகயுள்ளது. அப்போதெல்லாம் அக்கம், பக்கத்து வீட்டார் செய்வினை செய்து வைத்து விட்டார்கள் என்று அடிக்கடி சண்டை நடைபெறும். ஆனால் இப்போது இது போன்ற சண்டைகளை பெரும்பாலும் நம்மால் பார்க்க முடியவில்லை.
விடியற்காலையில் நம் இல்லங்கள் முன்பு நல்ல காலம் பிறக்கிறது.. நல்ல காலம் பிறக்கிறது என்று தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு “ஜக்கம்மா வந்திருக்கிறா”, “ஜக்கம்மா வந்திருக்கிறா” என்று கூறிக்கொண்டு குடு குடுப்பை அடித்துக் கொண்டு பெரிய மீசை யுடன் ஒரு நபர் வருவார். அவர் இந்த வீட்டில் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று குறி சொல்லுவார். அதை அந்த வீட்டில் இருப்பவர்கள் கேட்டு விட்டு அந்த நபருக்கு பொருளோ, பணமோ கொடுப்பார்கள்.
மோடி மஸ்தான்
அதே போன்று மோடி மஸ்தான் என்று சாலையில் அமர்ந்து பாம்பையும், கீரியையும்,எலும்பு கூட்டையும் வைத்து வித்தை காட்டி பணம் பறிப்பார்கள். இப்போது எந்த சாலையிலும் அவர்களை பார்க்க முடியாது.
மேலும் இவற்றை வைத்தால் அமானுஷ்ய சக்திகள் வீட்டிற்குள் வராது, கண் திருஷ்டி படாது என்றுச் சொல்லி படிகார கற்கள், சங்கு போன்றவற்றில் கருப்பு கயிறு கட்டி வீட்டின் முன் தொங்கவிடுவது. விகாரமான முகங்களை கொண்ட பொம்மைகளை வீட்டின் முன் கட்டுவது,மெல்லிய செப்புத் தகட்டில் சக்கரம் போன்று ஏதோ வரைந்து, எதையோ கிறுக்கி அந்த தகட்டை சட்டம் போட்டு வீட்டில் மாட்டுவது, என்று மக்களிடையே பழக்கம் இருந்தது. இந்த பொருள்களை எல்லாம் வாகனத்தில் கட்டிக் கொண்டு விற்பனைக்காக வீதிகளில் அடிக்கடி வருவார்கள். அப்படியான வாகனங்களை எல்லாம் இப்போது பெரும்பாலும் நாம் பார்ப்பதில்லை.
தொலைந்து விட்டார்கள்
இப்படி சிறு சிறு மூடநம்பிக்கைகளை வைத்து அன்றாட வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்த ஒரு சிறு கூட்டம். அவர்கள் எல்லாம் தொலைந்திருக்கிறார்கள் என்றால்…?
திராவிடர் கழகத்தின் பகுத்தறிவு பிரச்சாரம் காரணமாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வு. அந்த விழிப்புணர்வு காரணமாக மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்தவர்களுக்கு சிக்கல்கள் உருவான காரணத்தால் மூடத்தனத்தை தொழிலாக செய்து வந்தவர்கள், அன்றாட வாழ்வுக்கான வருவாய் வேறுவகையில் கிடைக்கிற வாய்ப்புகளை தேடிச்சென்று இதிலிருந்து இவர்கள் தொலைந்து விட்டார்கள்.
பார்பனச் சமூகம் தான் கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும் சடங்கு,சாஸ்திரம், சம்பிரதாயம் என்று மக்களை பயமுறுத்தி, பிறப்பு முதல் இறப்பு வரை நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி, அந்த மூடநம்பிக்கைகள் மூலமாக காலம் காலமாக ஏக போக சொகுசு வாழ்க்கையை எவ்வித உடல் உழைப்பும் இல்லாமல் வாழ்ந்து வருகிறது.
மூடபக்தியின் ஊடே ஆன்மீகம்
இந்த மூட பக்தியின் ஊடே ஆன்மீகம், யோகா என்ற பெயரில் வலம் வரும் கார்பரேட் சாமியார்கள். மற்றும் ஜோதிடம், வாஸ்து போன்ற மூட நம்பிக்கைகளை இவற்றை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் கூட்டம். இப்போது இவற்றுக்கு எல்லாம் எங்கே கேடு வந்து விடுமோ, மக்கள் விழிப்படைந்து கொண்டு வருகிறார்களே, என்ற பதற்றத்தில், அச்சத்தில் தான் தந்தை பெரியார் மீதும், அவர் சிந்தனை களை எடுத்துச் செல்லும் நம் மீதும் பாய்ந்து குதறுகிறார்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள்.
ஆனால் நான் தான் உயர்தவன் மற்றவர்கள் அனைவரும் எனக்கு கீழே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் மூட நம்பிக்கையை தொலையாமல் பாதுகாக்கிறார்கள்!.
இதை மாற்றத்தான் தந்தை பெரியார் அவர்களும் அவர் கண்ட இயக்கமும் மனிதர்கள் மீது அக்கறை கொண்டு, அன்பு கொண்டு மக்கள் சுய மரியாதையேடு வாழ, அவரவர்களின் சுய சிந்தனையால் ஏன்? எதற்கு? எப்படி? என்று ஆராய்ந்து அவரவர் புத்தி என்ன சொல்லுகிறது அதன்படி வாழுங்கள் என்று பகுத்தறிவை சொல்லிக் கொடுத்து இந்த மூட நம்பிக்கையிலிருந்து மீட்டுக் கொண்டு வருகிறது.
ஏன்? என்பது இது கேள்வியில்லை – ஏன்? என்பது தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஒளி – அந்த பகுத்தறிவு ஒளியில் உண்மையை தேடச் சொல்லி, மக்களிடையே மூடநம்பிக்கைகள் ஒழித்து, மக்கள் அனைவரும் பகுத்தறிவோடு, சமத்துவத்தோடு வாழ வழிவகை செய்துக்கொண்டு வருகிறது.