உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மெயின்புரி மக்களவைத் தொகுதி, சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், மேனாள் முதலமைச்சருமான, மறைந்த முலாயம் சிங் யாதவின் சொந்த தொகுதி.
இங்கு, முலாயம் சிங் குடும்பத்தினர்தான் பெரும்பாலும் எம்.பி.,யாக இருப்பர். இதன்படி, முலாயமின் மருமகள் டிம்பிள் தற்போது எம்.பி.,யாக உள்ளார்.
உ.பி.,யின் பிரயாக்ராஜில் வரும் ஜனவரியில் மகா கும்பமேளா நடக்கவுள்ளது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடுவர்.
‘இந்த நிகழ்வின் போது, பிரயாக்ராஜில், ஹிந்து சமூகத்தினர் மட்டுமே கடைகள் வைக்க வேண்டும்’ என்ற சர்ச்சை இப்போது எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிம்பிள், ‘நாட்டில் எல்லாரும் சமம். ஹிந்துக்கள் அல்லாதவர்கள் கடை வைக்கக் கூடாதா…’ என நியாயமான வினாவை எழுப்பினார்.
‘பகவான் கிருஷ்ணரின் வழிவந்த யாதவர் குடும்பத்தைச் சேர்ந்த பெண், இப்படி பேசலாமா…’ என, பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
‘டிம்பிள் தேவையின்றி பேசி வம்பில் சிக்கி விட்டாரே…’ என, கவலைப்பட்டு அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர் என்றும், உத்தரப் பிரதேச மக்களும் அப்படிக் கூறுகின்றனர் என்றும் ‘தினமலர்’ ஏடு தனக்கே உரித்தான வகையில் செய்தியை வெளியிட்டுள்ளது.
கங்கை, யமுனை, நதிகளுடன் இல்லாத சரசுவதி நதி சங்கமிப்பதாகக் கூறப்பட்டுள்ளதுதான் வேடிக்கை.
டிம்பிள் எம்.பி. அப்படி என்ன தவறான கருத்தைக் கூறி விட்டார்?
இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோத மான முறையில் கருத்துக் கூறினாரா?
ஓர் இந்தியக் குடிமகனுக்கோ, குடிமகளுக்கோ, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உரிமையைத்தானே வெளிப்படுத்தியுள்ளார்.
எதிலும் மதப் பார்வை என்பதை மட்டும் மய்யப்படுத்தி மக்களைப் பிளவுபடுத்துவதும், வீண் வம்புகளை விதைப்பதும், அதன் மூலம் கலவரங்களைத் தூண்டுவதும்தான் ஹிந்து மத வாதிகளுக்கு அன்றாட பிழைப்பாகவே போய் விட்டது.
இப்படி எல்லாம் மதவாத நெருப்பை விசிறி விடுவதால்தான் வேறு நாடுகளில் வாழும் ஹிந்துக்களுக்கு வீண் தொல்லைகள் ஏற்படும் ஒரு மனப் போக்கை இந்தியாவில் உள்ள ஹிந்துத்துவாவாதிகள் ஏற்படுத்தி வருவது எதார்த்தம்.
அந்த வகையில் பார்த்தாலும் ஹிந்துக்களுக்கு இவர்கள் நன்மை செய்தவர்கள் ஆக மாட்டார்கள்.
ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து மக்கள் நலத் திட்டங்களை, வளரச்சிப் பணிகளை செய்யத் திராணி அற்றவர்கள், பெரும்பான்மை மக்களிடத்தில் வேர்ப்பிடித்துள்ள பாமரத்தனமான பக்தியைப் பகடைக் காயாக்கி, ்அரசியல் லாபம் என்ற மீன் பிடிப்பதுதான் இவர்களின் யுக்தியாக இருக்கிறது.
அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஒபாமா அவர்கள் இந்தியா வந்தபோது பிரதமர் நரேந்திர மோடியைப் பக்கத்தில் அமர வைத்து, ‘‘இந்தியா மதச் சார்பற்ற தன்மையில் இருந்த போது சிறப்பாக இருந்தது’’ என்று சுட்டிக் காட்டியதன் பொருள் என்ன?
ஹிந்துவாக இருந்தாலும், முஸ்லிம், கிறித்த வராக இருந்தாலும், மதம் சாராதவர்களாக இருந்தாலும் இந்திய அரசமைப்புச் சட்டப்படி எல்லோரும் இந்நாட்டின் குடிமக்களே என்பது நினைவில் இருக்கட்டும்.