நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் அய்யாவை சந்திக்க முயற்சி செய்து சந்திக்க முடியாமல் போனது. பிறகு அய்யாவே எங்கள் பகுதிக்கு வருகிறார் என்று கேள்விப்பட்டு மகிழ்ந்திருந்தேன். ஆனால், இதே தேதி யில் மாலையில் என் உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு மிகுந்த மனவேதனையுடன் அய்யாவிடம், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “திருச்செங்கோடு நிகழ்ச்சியை காலையில் வைத்துக் கொள்ள முடியுமா?’’ என்று வேண்டுகோள் வைத்தேன். நான் இளையவன், இருந்தும் அய்யா அவர்கள் உடனடியாக ஒப்புக் கொண்டார். எவ்வளவு பெரிய தலைவர். பெரியாரின் சீடர் என்பதற்கு இந்த ஒரு உதாரணம் போதுமானது.
நம்முடைய முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களைத் தீட்டிக் கொடுத்துள்ளார்கள். ஆனால் இதற்கு அடித்தள மிட்டது திராவிடர் கழகம் என்ற நமது தாய் கழகம்தான். பெரியாரைப் பற்றி தொடர்ந்து விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. நம்முடைய திராவிடர் கழகத் தோழர்கள் அதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய பெரியார் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் தேவை! நாங்க யாரும் பெரியாரைப் பார்த்ததில்லை. எங்களுக்கு பெரியாருடன் பேசவும், ஒளிப்படம் எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பில்லை. இன்று வாழும் பெரியாராக இருக்கும் ஆசிரியர் அய்யாவுடன் இன்றைக்கு காலையில் இருந்து பல்வேறு விசயங்கள் குறித்து பேசியிருக்கிறோம். உண்மையிலேயே இந்த நாளை எங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டோம்.
பெரியார் என்ற மிகப்பெரிய சகாப்தத்தை உடைக்கப் பார்க்கிறார்கள். அவர்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திராவிடம் என்றால் என்ன? திராவிடன் என்றால் யார்? என்பதை பெரியாரே மிகத் தெளிவாக சொல்லிவிட்டார். அவர் பார்ப்பனர்களைப் பற்றி பேசவில்லை. பார்ப்பனியம் பற்றி பேசினார். சுயமரியாதை உள்ள தமிழன்; சமூகநீதியை ஆதரிக்கின்ற தமிழன்; பகுத்தறிவுள்ள தமிழன்; சமத்துவத்தை விரும்புகின்ற தமிழன் திராவிடன் என்று பெரியார் மிக எளிமையாகச் சொல்லி விட்டார்.
இதைப் பற்றி பலரும் தவறாக பேசிக் கொண்டி ருக்கின்றனர். புதிது புதிதாக வருகிறார்கள். அதுவும் நல்லதுதான். காரணம் நமது கொள்கைகளை மக்களுக்குச் சொல்ல வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இல்லையென்றால் நாமே காணாமல் போய்விடுவோம். அப்படி நமது கொள்கைகளை தொடர்ந்து பரப்புகின்ற பணியை ஆசிரியர் அய்யா அவர்கள், நமது கருஞ்சட்டைப் படை, திராவிடப் படை, திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றனர்.
தனது 9 வயதில் தனது பயணத்தைத் தொடங்கி இன்றைக்கு 92 வயதிலும் அதே வேகம், உறுதியாகவும், சுறுசுறுப்புடன் இருக்கிறார். அதைப் பார்க்கும் போது உள்ளபடியே எங்களுக்கெல்லாம் தன்னெழுச்சி ஏற்படுகிறது. ஆசிரியர் அய்யா எங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கிறார். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
– தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை
அமைச்சர் மதிவேந்தன் (24.11.2024
திருச்செங்கோடு அய்ம்பெரும் விழாவில்)