நாகை, நவ.25- நாகப்பட்டினத்தில், தி.மு.கழக மீனவர் அணி துணைச் செயலாளர் அக்கரைப்பேட்டை மனோகரன் – அழியாநிதி ஆகியோரின் மகன் மருத்துவர் குறளரசன், – மருத்துவர் பிருந்தாஞ்சலி ஆகியோரின் திருமணத்தை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (24.11.2024) நடத்தி வைத்தார். அப்போது இல்லற வாழ்வில் இணைய உள்ள இணையர் இருவரும் கலைஞரும் – தி.மு. கழகமும் போல், தி.மு.கழகத் தலைவரும் – உழைப்பும் போல பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய சிறப்புரையில் குறிப்பிட்டதாவது,
சுயமரியாதைத் திருமணங்கள்
இப்படி நடத்துகின்ற திருமணங்கள் அனைத்தும்செல்லும் என்று, முதன் முதலில் 1967-ஆம் ஆண்டில் நம் அறிஞர் அண்ணா அவர்கள்தான் முதன்முதலில் சட்டம் கொண்டுவந்தார். அதன் பிறகு, தமிழ்நாடு எங்கும் இதுபோன்ற சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற ஆரம்பித்தது. இந்தத் திருமண அரங்கை பார்க்கும்பொழுது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. ஏனென்றால், ஆண்களுக்கு நிகராக, இன்னும் சொல்லப்போனால் ஆண்களைவிட அதிகமாக பெண்கள், மகளிர், தாய்மார்கள் வந்து இருக்கிறீர்கள். ஆண்கள் எல்லாம் ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். பெண்கள் எல்லாம் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறீர்கள். ஒரு காலத்தில் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலைமை கிடையாது.
நீதிக்கட்சித் தலைவர்கள்
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே உரிமை கிடையாது. படிப்பதற்கு உரிமை கிடையாது. ஆனால், அதையெல்லாம் மாற்றியவர் அதற்காக எல்லாம் போராடியவர்தான் தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும், நம் திராவிட முன்னேற்றக் கழகமும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களும்தான். நீதிக்கட்சித் தலைவர்களும், தந்தை பெரியாரும் பெண் விடுதலைக்காக பேசிய விஷயங்கள், கண்ட கனவுகள் அத்தனையையும் சட்டமாக்கியவர், நம் பேரறிஞர் அண்ணா அவர்களும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களும்தான்.
இன்றைக்கு அவர்களின் வழியில், நம் திராவிட மாடல் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் அனைத்துத் திட்டங்களிலும், பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கலைஞர்தான் காவல்துறையில் முதன்முதலில் பெண்கள் பணியாற்றலாம் என்று சட்டம் கொண்டு வந்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக கலைஞர் அவர்கள்தான் கொண்டு வந்தார்.
பெண்களுக்கு சொத்தில் சமபங்கு
பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என்று கொண்டு வந்தவர், நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். பெண்கள் உயர் கல்வி படிக்க பல சலுகைகள் கொடுத்தவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். இன்றைக்கு நம் முதலமைச்சர் அவர்கள் அவரின் ஆட்சியில், 50 சதவிகிதம் அளவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் போட்டியிடும் இட ஒதுக்கீட்டை கொடுத்தவரும் நம் தலைவர் அவர்கள். அதனால்தான் பல மாநகராட்சிகளில் மேயர்களாக, துணை மேயர்களாக இன்றைக்கு மகளிர் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்களில், பஞ்சாயத்துகளில் பெண் தலைவர்கள் வந்து இருக்கிறார்கள். இங்கு அக்கா அழியாநிதியைப் போல ஏராளமான பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையை ஏற்படுத்தியதற்கு பெயர்தான் திராவிட மாடல் அரசு. அதேபோல் மகளிர் முன்னேற்றத்திற்கான ஏராளமான திட்டங்களை நம் முதலமைச்சர் அவர்கள் தந்துகொண்டு இருக்கிறார்கள்.
இன்றைக்கு மகளிர் வெளியே சென்று வேலை செய்யவேண்டும் என்பதற்காக, நம் தலைவர் கொண்டு வந்த திட்டம், போட்ட முதல் கையெழுத்து `பெண்களுக்கு விடியல் பயணத் திட்டம்’. ஒவ்வொரு மகளிரும் அந்தத் திட்டத்தின் வாயிலாக மாதந்தோறும் கிட்டதட்ட 1,000 ரூபாய் சேமிக்கிறார்கள்.
புதுமைப்பெண் திட்டம்
பெண்கள் படிக்க வேண்டும். பள்ளிக்கூடம் படித்தால் மட்டும் பத்தாது, உயர்கல்வி படிக்க வேண்டும் என்று அரசுப் பள்ளியில் படித்து, எந்தக் கல்லூரியில் சென்று படித்தாலும், அது தனியார் கல்லூரியாக இருந்தாலும்சரி, அவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக புதுமைப்பெண் திட்டம் என்ற பெயரில், மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். நம் தலைவர் அவர்கள்.
மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் என்ற திட்டத்தில் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களுக்கும் கொடுக்கிறார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இந்தியாவே திரும்பிப் பார்க்கின்ற வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை நம் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். ஒரு கோடியே 55 லட்சம் மகளிர் விண்ணப்பித்தார்கள். இன்றைக்கு ஓராண்டிற்கும் மேலாக, சென்ற ஆண்டு செப்டம்பர்மாதம் தொடங்கப்பட்டது. இந்த கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் சென்று கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்தத் திட்டத்தை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி இருக்கின்றன. இதற்குப் பெயர்தான் `திராவிடமாடல் அரசு’. இந்தத் திட்டங்கள் வாயிலாக, மகளிர் பொருளாதார சுதந்திரத்தை, நம் திராவிட மாடல் அரசு நிலைநாட்டி இருக்கிறது.
-இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையில் குறிப்பிட்டார்.