சென்னை, ஜூலை 25- லஞ்ச வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் இறந்து விட்டால் அவரிடமிருந்து பறிமுதல் செய் யப்பட்ட சொத்துக்கான சட்டப்பூர்வமான ஆதாரங்களை நிரூபித்தால் மட்டுமே வாரிசுகள் அதற்கு உரிமைகோர முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் திருவாரூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக பணி புரிந்தவர் தன்ராஜ். இவர்அந்த பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றின் உரிமத்தை புதுப்பித்துக் கொடுப்பதற்காக ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரால் கடந்த 2020 டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவருடைய வீட்டில் நடத்தப்பட்ட சோதனை யில் ரூ.2.66 லட்சம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டு களும், ரூ.56.66 லட்சம் ரொக்கமும், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பிணையில் வெளியே வந்த தன்ராஜ் மீதான வழக்கு விசாரணை திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த 2021 மே மாதம் தன்ராஜ் திடீரென மரணமடைந்து விட்ட நிலையில் தன்ராஜிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் சொத்து ஆவணங் களை தங்களிடம் ஒப்படைக்க உத்தரவிடக்கோரி அவரது மனைவி அங்கயற்கண்ணி, மகன் ஹரிபிரதாப், மகள் ஹரிபிரியா ஆகியோர் திருவாரூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதையடுத்து மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘ஓர் அரசு ஊழியர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அவர் இறந்து விட்டால் அந்த சொத்துகள் சட்டப்பூர்வமாக வந்தது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே அந்த சொத்து களுக்கு வாரிசுகள் உரிமை கோரமுடியும். மாறாக உரிய ஆதாரங்கள் எதுவும் இல்லாமல் உரிமை கோர முடியாது, எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.