ராமேசுவரம், நவ.25- ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருகிறது என்று தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மை செயல் அலுவலர் வள்ளலார் தெரிவித்தார்.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1964இல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடியில் கடும் சேதம் ஏற்பட்டதையடுத்து, கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1965இல் மீண்டும் ராமேசுவரத்திலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினை யுத்தமாக மாறியதால், பாதுகாப்புக் காரணங்களால் கப்பல் போக்குவரத்து 1981ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து இரு நாட்டு வெளியுறவுத் துறை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
கடந்த ஆண்டு அக். 14ஆம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். அப்போது, ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ராமேசுவரம்-தலைமன்னார், ராமேசுவரம்-காங்கேசன் துறைமுகம் ஆகிய 2 வழித் தடங்களில் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஆலோசனை நடத்தி வந்தது. இது தொடர்பாக கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரை, வில்லூண்டி தீர்த்தக் கடற்கரை பகுதிகளில் ஆய்வுப் பணி நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயல் அலுவலர் வள்ளலார் தலைமையிலான அதிகாரிகள், கடந்த 2 நாட்களாக ராமேசுவரம், வில்லூண்டி தீர்த்தம், முள்ளிவாசல் தீவு, பாம்பன் குந்துக்கால், தனுஷ்கோடி ஆகிய இடங்களை பார்வையிட்டனர். இதுகுறித்து தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயல் அலுவலர் வள்ளலார் கூறியதாவது:முதல்கட்டமாக ராமேசுவரத்திலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க, ராமேசுவரத்தில் 4 இடங்களை ஆய்வு செய்துள்ளோம். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்ததும், கப்பல் பயணிகள் இறங்குதளம் ஏதாவது ஓரிடத்தில் அமைக்கப்படும்.
மேலும், இலங்கை மற்றும் இந்திய துறைமுகங்களுக்கு இடையே, தோணி பார்ஜர் கப்பல்கள் மூலம் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதி போக்குவரத்து தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ராமேசுவரம் அக்னி தீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம், முள்ளிவாசல் தீவு, பாம்பன், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க வசதியாக, உள்ளூர் சுற்றுலா படகு சேவையை தொடங்குவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இந்த நடவடிக்கைகள் மூலம் ராமேசுவரத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கல்விக் கட்டமைப்பை அழிக்கும் நீட் தேர்வு
சட்டமன்றத் தலைவர் அப்பாவு குற்றச்சாட்டு
சென்னை, நவ.25- சென்னை எழும்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று (24.11.2024) கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஓன்றிய அரசு நீட் தேர்வுக்கு ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் அனைவருடைய கருத்துமாக இருக்கிறது.
நீட் தேர்வை தனியார் முகமைதான் நடத்துகிறது. பொதுத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தேர்வை அரசு நடத்துவதற்கும், தனியாரிடம் நடத்துங்கள் என சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. நீட் தேர்வு கல்வி கட்டமைப்பை அழிக்கக்கூடியது. நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு தேவையற்றது.
நீட் தேர்வு தேவை இல்லை என்பதால்தான் தமிழ்நாடு அரசும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பொதுமக்களிடம் பல கோடி கையெழுத்துகளை வாங்கி ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் நீட் தொடர்பான சட்டம் கல்விக்கும், சாதாரண மக்களுக்கும் எதிரானது. தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை ஏன் வழங்க வில்லை என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி கேட்க வேண்டும். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி சம்பளம் வழங்க முடியும்? ஜனநாயக நாட்டில் என்னுடைய பேச்சை கேட்டால்தான் நிதி வழங்குவேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? வெள்ள பாதிப்பு, புயல் பாதிப்பு ஏற்பட்ட போதிலும் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிதியை தரவில்லை.
– இவ்வாறு அவர் கூறினார்.