சென்னை, நவ. 25- இந்தியா முழுவதும் சி.ஏ. (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்த தேர்வை நடத்தும் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ஸ் ஆப் இந்தியா (அய்.சி.ஏ.அய்.) என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்படும் இந்த வேளையில், சி.ஏ. தேர்வை நடத்துவது தமிழ்நாட்டில் இந்த தேர்வை எதிர்கொள்ள இருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி தனது ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் கலாசார திருவிழாவான பொங்கல் விழா அன்று சி.ஏ. முதல்நிலை தேர்வுகளை நடத்தும் முடிவு. நமது அடையாளம், பாரம்பரியத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும். தமிழ் மரபுகள் மற்றும் பிராந்திய சுயாட்சி மீதான அவர்களின் அலட்சியத்தை இந்த உணர்வில்லாத செயல் பிரதிபலிக்கிறது. தேர்வு தேதியை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்.
-இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாடாளுமன்ற உறப்பினர் சு.வெங்கடேசன் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அய்.சி.ஏ.அய். நிறுவன தலைவர் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார்.