நேற்றைய (24.11.2024) தொடர்ச்சி…
ஜாதி ஒழிய சரியான வழி
பிரம்ம, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற சொற்கள் தொழில் காரணமாக ஏற்பட்டு ஜாதியில் நிலைத்து பலவாறு பிரிந்து இப்போது பலப் போராட்டங்களுக்குக் காரணமாகிவிட்டது.இது ஒழிய வேண்டுமானால் முதலில் பிராமணனைக் கீழே இறக்கிவிட வேண்டும். ஏனெனில்இவ்வளவு வேற்றுமைகளையும் அவனே உண்டாக்கியிருக்கிறான். பிற நாடுகளில் ஜாதி வேற்றுமை இருப்பதாகக் கூறினாலும் அது அவர்களின் வாழ்க்கைக்கு ஹிம்சையை விளைவிப்பதில்லை. தற்காலம் இந்தியாவில் பிராமணனை மேலானவன் என்று ஒருவன் ஒப்புக்கொள்கிறானோ அவன்தான் பெரிய மனிதனாக வெளியேறி வர முடிகிறது. திருவாங்கூர் மகாராஜா இன்னும் தனது சத்திரியத் தன்மையை நிலை நிறுத்த தங்கப் பசு மாட்டு வயிற்றில் நுழைந்து வருவதும் அத்தங்கத்தைப் பிராமணர்களுக்குத் தானங் கொடுப்பதுமே போதுமான சான்றாகும்.
பிராமணர்களுக்கு ஒரு செய்தி
பிராமணருக்கு ஒரு செய்தியும் கூற விரும்புகிறேன். அவர்களும் திருந்த வேண்டும். காலத்தின் நிலையை எண்ணி பிராமணீயத்தை நிலை நிறுத்தப் பாடுபடாமல் மனிதனாக வாழ விரும்ப வேண்டும். சகலரையும் சகோதரராக நேசிக்க வேண்டும். இல்லாவிடில் ஜெர்மன் நாட்டில் யூதர்களுக்கு ஏற்பட்ட கதிதான் இங்கு இவர்களுக்கும் ஏற்படும். ஏழு கோடி தீண்டாதாரை “சண்டாளன்” என்று சொல்லக்கூடிய ஒரு பிராமணனை நாம் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? வருணாச்சிரம தர்மம் ஒழிய வேண்டும். அதை இன்னும் நிலைநிறுத்த எந்தப் பார்ப்பனனாவது வெளிக் கிளம்பினால் அவனுக்கு இனிமேல் கிடைப்பது உதைதான். வருணாசிரம தர்மம் ஆத்ம சாந்திக்காக அவசியம் என்று கூறுவதில் கொஞ்சமாவது அறிவு கலந்திருப்பதாகத் தெரியவில்லை. ‘தெருவில் படுத்திருக்கிற ஏழை மக்களை அப்புறப்படுத்துங்கள்’ என்று சென்னை கமிஷனர் ஒரு உத்தரவு போட்டார். ‘அவர்களுக்கு வீடுகட்டுகிறவரையில் அங்கேயே இருக்கும்படிச் செய்யுங்கள்’ என்று நான் ஒரு கடிதம் எழுதினேன். இதற்குக் காரணம் அவர்கள் தங்கள் நிலைமையை நோக்கி நம்மை உதைக்காமல் விட்டிருப்பதே பெரிய உதவியாகக் கருதியதேயாகும்.
‘குடிஅரசு’ தொடங்குவது குறித்த திரு.வி.க, வரதராஜுலு நாயுடு, ராஜகோபாலாச்சாரியார் கருத்துக்கள்
நமது நாட்டு மக்களுக்குள் சுயமரியாதையையும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உண்டாக்கிக் “குடிஅரசு” என்னும் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதல் முதல் நானும் எனது நண்பர் ஸ்ரீமான் தங்கபெருமாள் பிள்ளையும் 1922இல் கோயமுத்தூர் ஜெயிலில், சிறைவாசம் செய்யும் போதே நினைத்தோம்.
அதுபோலவே வெளியில் வந்த கொஞ்ச நாட்களுக்குள் “குடி அரசு” என்று ஒருவாரப் பத்திரிகையும் ”கொங்கு நாடு” என்று ஒரு மாதந்திரமும் நடத்தப்போவதாய் 19-1-23 தேதியில் சர்க்காரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.
இவ்விஷயத்தை முதலில் ஸ்ரீமான் திரு.வி.கல்யாண சுந்தர முதலியார் அவர்களிடம் சொன்னேன். அவர் எனது கொள்கையை கேட்டவுடன் சந்தோஷப்பட்டு ‘இப்படி ஒரு பத்திரிகை வேண்டியதுதான். அதற்கு நீ தகுதியானவன் நீ ஆரம்பித்தால் தமிழ் நாட்டிலேயே பதினாயிரக்கணக்கான சந்தாதாரர்கள் சேருவார்கள். ஆனால், அதிக நாள் நிலைக்காது. ஒரு கூட்டத்தார் எப்படியாவது அதை ஒழித்துவிடுவார்கள் ஆனாலும், நடந்த வரை லாபம். நடத்துங்கள்” என்றார்.
பிறகு ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களிடம் சொன்னேன் அவரும் மிகச் சந்தோஷப்பட்டுச் “சீக்கிரத்தில் வெளியாக்க வேண்டுமென்று விரும்புவதாகவும், வெளியாகத் தாமதம் ஏற்பட்டால் அதுவரை தனது பத்திரிகையில் வேண்டுமானாலும் எழுதி வரும்படியும் சொன்னார்.
பிறகு ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களிடம் சொன்னேன். அவர் ”இந்தச் சமயம் இப்படிப்பட்ட பத்திரிகை கூடாது. அல்லாமலும் மகாத்மா ஜெயிலில் இருக்கும்போது இதைவிட்டு விட்டு நீ பத்திரிகை நடத்தப்போவது சரியல்ல. உன்னுடைய சேவை இது சமயம் மிகவும் அவசியமானது. ஆனதால் கண்டிப்பாய்ப் போகக்கூடாது” என்று சொல்லிவிட்டார்.
தந்தை பெரியார், குடிஅரசு – 1.5.1925
பொது உடைமை என்றால் என்ன?
பொது உடைமை பயப்பயடக்கூடியதல்ல. பணம் பொதுவாக எப்படி இருக்க முடியும் என்று உங்களில் பலர் பயப்படக் கூடும். சில உதாரணங்களைக் கூறினால் உங்கள் பயம் ஒழிந்துவிடும். ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி, ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், எலக்ட்ரிக் கார்ப்பரேஷன், கோ ஆபரேட்டிங் சொசைட்டி, போலீஸ் முதலியவைகள் எல்லாம் பொது உடைமைதான். இது வழக்கத்திலிருப்பதினால் என்ன குடி முழுகிப் போயிற்று. ஆகவே, பொது உடைமை என்றால் பீதி கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஒரு சிலர் இப்படியெல்லாம் பேசிவிட்டு ஒருவன் மோட்டாரும் மெத்தை வீடும் வைத்திருக்கலாமா என்று கேட்கலாம். ஒரு மனிதன் மட்டும் இவை இரண்டையும் விட்டுவிடுவதினால் யாருக்கு லாபம் எற்படும்? பொது உடைமை தோன்றிவிட்டால் இவை இரண்டையும் அவன் மரியாதையாகக் கொடுக்கும்படி நேர்ந்துவிடும்.
உலக வாழ்வுக்கு
உடல் பலம் வேண்டும்
யுத்தத்தை நான் வரவேற்கிறேன். யுத்தம் கூடாதென்று உங்களில் பலருக்குத் தோன்றலாம். யுத்தம் நேர்ந்தால்தான் மனிதன் நியாயமான பாதையில் நடக்க முடியும். நன்மை எற்பட வேண்டும் என்றால் பல பிரளயங்கள் ஏற்பட்டே முடிவில் நன்மை ஏற்பட முடியும். கடவுளைப் பற்றியும் அன்பைப் பற்றியும் பேசுகிறவர்களுக்கு இது வெறுப்பாயிருக்கும். பூசணிக்காய்ச் சாம்பார், வெண்டைக்காய்ச் சாம்பார், வெங்காயச் சாம்பார் சாப்பிடுவதனால் “மோட்சம்” உடனே கிடைக்கலாம். ஆனால்,இவ்வுலகத்தில் தைரியமாக வாழ அது உதவாது. கூட்டத்தில் கலவரம் நடந்தால் முதலில் பிராமணன் ஓடுவான். அடுத்தாற் போல் சைவன் ஓடுவான். மீனும் முட்டையும் தின்பவன்தான் மீதி இருப்பான். சும்மா இருந்தால் காக்காய் கூட நம்மைக் கொத்தித் தின்றுவிடும். பெரிய படிப்பாளிகள் – டை காலர் அணிந்திருப்பவர்கள் – உடல் பலமில்லாமல் ஒணான்களாக வாழ்கிறார்கள். நமது பெரியவர்கள் புலியைக் கையால் அடித்துக் கொன்றிருக்கிறாக்ள். அப்படிப்பட்ட வீரர்களாகிய நாம் வேதாந்தத்தையும், ஞானத்தையும் பேசிக் கொண்டு மதத்தையும், மோட்சத்தையும் கருதிக் கொண்டு பேடிகளாக வாழ வேண்டியதில்லை. திருடன் வீட்டிற்குள்ளிருந்தால் அவனைப் பிடிக்காமல் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடுவது முட்டாள்தனமாகும். உங்களை எவனாவது அடித்தால் உடனே “பளீர்” என்று கொடுத்துவிட வேண்டும். பிறகு நியாயத்தைக் கோர்ட்டில் பார்த்துக் கொள்வோம்.
கர்ப்பத்தடை பிரச்சாரம்
கர்ப்பத் தடை மிக அவசியமானது. அது சர்வ சாதாரணமாகக் கிராமங்களில் இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டே வருகிறது. அதை நல்ல முறையில் நடைபெறச் செய்ய வேண்டுமென்பதே கர்ப்பத் தடைப் பிரச்சாரமாகும். கர்ப்பத் தடைச் சட்டம் வேண்டியவர்களுக்கு உதவி செய்து வேண்டாதவர்களை விலக்கிவிடும். ஆகவே அறிவிற் சிறந்தவர்கள் இதை வரவேற்கவே செய்வார்கள்.
பெண்ணுரிமை
பெண்ணுரிமை மிக அவசியமானது. அப்போராட்டம் நியாயமானதேயாகும். ஆணோ, பெண்ணோ அதிகமாக முன்னேற வேண்டியதில்லை இருவரும் சமமாக வாழ்வதுதான் சம உரிமை என்பதின் பொருளாகும். நெடுங் காலமாகக் கொடுமைப் படுத்தப்பட்டு வந்த பெண் சமூகத்திற்கு அவர்கள் கோருகிற நியாயமான உரிமைகளை இப்பொழுதுதேனுங் கொடுக்கப் பின்வாங்குவது நல்லதல்ல. இதுகாறும் மிகப் பொறுமையாகஇருந்து இத்திறப்பு விழாவை நடத்தி வைக்க எனக்குப் பேருதவியாக இருந்த உங்களனைவருக்கும் எனது வந்தனத்தைச் செலுத்தி இத்திறப்பு விழா வைபவத்தை இத்துடன் முடிக்கிறேன்.
ஈ.வெ.ராமசாமி
வந்தனோபசாரம் கூறுவதற்காக தோழர் ஈ.வெ.ரா. அவர்கள் எழுந்து பின்வருமாறு கூறினார்:
தோழர்களே, இன்று லெனின் படத்தை திறந்து வைக்க வேண்டிய தோழர் சிங்காரவேலு அவர்கள் உடல்நலக் குறைவால் வரமுடியவில்லை. தலைமை வகிக்க வேண்டிய தோழர் கொச்சி கே.எம்.இபுராகீம் எம்.எல்.சி. “வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க வேண்டாம்” என்று பிரச்சாரம் செய்தமைக்காக அவரையும் அவர் தோழர்கள் 23 பேரையும் சர்க்கார் கைது செய்திருப்பதை முன்னிட்டு இங்கு வரமுடியாமற் போய்விட்டது. ஆகவே, அவர்களின் வேலைகளை இங்கு வந்திருக்கும் தோழர்கள் இருவரும் செய்து முடித்திருக்கின்றார்கள். இதற்காக இவர்களுக்கு நாம் இரட்டிப்பான நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம்.
தோழர் திருச்சி விசுவநாதம் கூறியதுபோல நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்தால் ஒரு சக்தி தோன்றி விடுகிறது. பிரிந்துவிட்டால் அந்தச் சக்தி குறைந்தும் விடுகிறது. நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து நடத்திய எந்தப் போராட்டத்திலும் வெற்றியையே அடைந்திருக்கிறோம். குருகுலப் போராட்டத்தை தமிழ்நாட்டு மக்கள் இதற்குள்ளாக மறந்திருக்க முடியாது. “தென்னாட்டில் இரண்டொரு பத்திரிகைகளை ஒழித்தாலெழிய பிராமனியத்தை ஒழிக்க முடியாது” என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், அதற்குள் எங்களுக்குள் ஏற்பட்ட அபிப்பிராய பேதத்தினால் நாங்கள் ஒழிந்தோம்.
டாக்டர் நாயுடு இதுவரையில் பேசிய பேச்சுகளை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அவர் பேசியதில் என்ன அபிப்பிராய பேதங்களைக் கண்டீர்கள்? சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைத்தான் அவர் பேச்சில் காண முடிகிறது. ஆனால், “கொஞ்சம் அவசரமாகப் போய்விடுகிறீர்கள்” என்று மட்டும் கூறினார். உண்மைதானே! தகுந்த மாதிரி தலைவர் இருந்து நடத்தினால் கொஞசம் மெதுவாகப் போகிறோம். ரெயின்சைப் பிடித்து இழுக்க ஆள் இல்லாததால், பிரேக் இல்லாத வண்டி போல ஓடுகிறோம். அவ்வளவே தவிர வேறொன்றுமில்லை.
நாயுடுகாருதான் என்னை இவ்வழியில் இழுத்து விட்டவர். இல்லாவிடில் நான் ஏதோ ஒரு வியாபாரியாகவோ சட்டசபை மெம்பராகவோ இருந்துவிடும்படி நேர்ந்திருக்கும். ஆகவே, அரசியலில் அவர் எனக்கு குரு போன்றவர். ஆனால், நாளடைவில் என்னை குருவுக்கு மிஞ்சின சீடப் பிள்ளையாய்ப் போய்விட்டதாகக் கூறிவிட்டுப் போய்விட்டார்.
இங்கு வந்திருக்கும் தோழர்கள் அனைவரும், நாயுடுவும், முதலியாரும் வேறு வழியில்லாமல் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்துகொள்ள வந்து விட்டார்கள் என்று நினைத்துவிடக் கூடாது. அதேபோல சுயமரியாதை இயக்கம் ஆபத்திலிருந்து கொண்டு தங்களின் உதவியைத் தேடி அழைத்திருக்கிறது என்று நாயுடுவும் முதலியாரும் நினைத்து விடவும் முடியாது. ஆனால், மூவருடைய உழைப்பும் ஒன்று சேருமானால் அது நாட்டின் நன்மைக்கும் சீர்திருத்த வேலைகளுக்கும் நலம் பயக்கும் என்பதை மட்டும் நான் ஒப்புக் கொள்ளுகிறேன்.
இனிமேல் நம்மை விட்டு இந்த இரண்டு பேரும் ஓடிவிட முடியாது. பார்ப்பான் என்னைச் சேர்த்துக் கொண்டாலும் சேர்த்துக் கொள்ளுவான். இனிமேல் இந்த இரண்டு ஆள்களையும் சேர்த்துக் கொள்ளவே மாட்டான். டாக்டர் நாயுடு ஜஸ்டிஸ் ஆபீசுக்கு ஒருசமயம் போய் வந்தபொழுது சென்னை பத்திரிகைகளெல்லாம் அவர் மீது “விபசாரக் குற்றத்தை பெண்கள்மீது சுமத்துவது போல்” சுமத்திவிட்டன. அதுவே அப்படியிருந்தால், சுயமரியாதை மகாநாட்டுக்குப் போய்வந்த இவர்களை பார்ப்பனப் பத்திரிகைகள் இனி எம்மாதிரி நடத்தும் என்பதை நீங்களே யோசித்துணரலாம். எனக்கும் நன்றாய்த் தெரியும்.
எங்களுக்குள் பல தடவைகளில் பல வழிகளில் கருத்து வேற்றுமைகள் தோன்றியிருந்தது உண்மையே. ஆனாலும், மன வருத்தம் எக்காலத்தும் ஏற்பட்டதேயில்லை. அது ஒன்றுதான் இப்போதாவது ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க உதவி செய்ததாகும். எனது மனைவியார் நாகம்மாள் உயிருடன் இருந்திருந்தால் இன்றைக்குக்கூட எங்கள் மூவரையும் நீங்கள் ஒரே மேடையில் பார்க்க முடியாது. ஆகவே, நாங்கள் மூவரும் ஒரே மேடை மீது நின்று உங்களைக் கண்டு பேசி மகிழ்வதற்கு நாகம்மையார் மரணமும் தோழர்கள் எஸ்.வி.லிங்கம் அவர்களின் முயற்சியும் பெருங் காரணமாயிருந்தது என்று தெரிவித்துக் கொண்டு இந்த இரண்டு பெரியார்களின் உருவப் படத்திறப்பு விழா வைபவத்தில் தலைமை வகித்த தோழர் நாயுடு அவர்களுக்கும் திறந்து வைத்த தோழர் முதலியார் அவர்களுக்கும் உங்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றியையும் கூறுகிறேன் எனக் கூறினார்.
கூட்டம் பலத்த கரகோஷத்தினால் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது. திறப்பு விழா வைபவத்தின்போது மகாநாடு பேருணர்ச்சி கொண்டதாக விளங்கியது. நான் பார்த்த மகாநாடுகளுக்குள் மாறுபட்ட தலைவர்களின் அபிப்பிராயங்களை தாராளமாகப் பேச இடங் கொடுத்ததும் அதற்காக அமைதியை நிலைநிறுத்திக் காண்பித்ததும் ஈரோடு மகாநாடு ஒன்றேயாகும். இந்த அமைதியானது எதைக் காட்டியது? எனில், “நாட்டுப் பற்று கொண்ட சீர்திருத்தவாதிகள் அனைவரும் இம்மூவருடைய ஒன்றுசேர்ந்த உழைப்பை முழுமனதோடு விரும்பி அழைக்கிறார்கள்” என்ப தையே காட்டியிருக்கிறதெனத் துணிந்து கூறலாம்.
– முற்றும்