நவம்பர் 26 (1957) திராவிடர் கழக வரலாற்றில் மட்டு மல்ல – உலக வரலாற்றில் கேள்விப்பட்டிராத திடுக்கிட வைக்கும் ஒரு போராட்ட நாள்!
ஆம். அது ஒரு ஜாதி ஒழிப்புப் போராட்டம்! ஜாதி ஒழிப்பும், பெண்ணடிமை ஒழிப்பும் தந்தை பெரியாரின் தலையாய கொள்கைகள்!
‘சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்கலாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திர நாடா? நரக நாடா?’ என்ற ஆழமான அர்த்தம் நிறைந்த கேள்வியை எழுப்பினார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (‘விடுதலை’ 15.8.1957).
‘ஜாதி, மதம், பழக்க வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் செய்யச் சம்மதிக்கவில்லையானால், வேறு எந்தவிதத்தில், இந்நாட்டு மக்களுக்கு விடுதலையோ, மேன்மையோ, சுயமரியாதையோ ஏற்படுத்த முடியும்?’ என்று 1935ஆம் ஆண்டிலேயே குரல் எழுப்பினார் தந்தை பெரியார் (‘குடிஅரசு’ 2.6.1935).
‘பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடமாகும்’’ (‘குடிஅரசு’ 11.11.1944) என்பதே தந்தை பெரியாரின் இலக்காகும்.
இந்த இலட்சியத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர் உலகத் தலைவர் தந்தை பெரியார்!
பிரச்சாரம், போராட்டம் என்ற இரு அணுகுமுறைகள் மூலம் மக்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தினார்.
ஜாதி ஒழிப்புக்காக எத்தனை எத்தனை மாநாடுகள், போராட்டங்கள், மனுதர்ம எரிப்பு, இராமாயண எரிப்பு, ‘பிராமணாள் உணவு’ விடுதி பெயர் அழிப்பு, இரயில்வே நிலையங்களில் பிராமணாள் சாப்பிடும் இடம், சூத்திராள் சாப்பிடும் இடம் என்றிருந்த பேதங்களை எல்லாம் ஒழித்த தந்தை பெரியார் ஒரு முக்கியமான புள்ளியில் தடம் பதித்தார்.
‘‘சுதந்திர இந்தியா என்று சொல்லிக் கொண்டு, அதற்காக ஓர் அரசமைப்புச் சட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு, அந்த அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாப்பது என்றால், அது எப்படி சுதந்திர நாடாக இருக்க முடியும்?’’ என்ற வினாவை எழுப்பினார்.
அதற்காகத் தஞ்சாவூரில் ஜாதி ஒழிப்பு சிறப்பு மாநாட்டையும் கூட்டினார் (3.11.1957).
இலட்சோப லட்ச மக்கள் கூடிய அந்த மாபெரும் மாநாட்டில் முக்கிய தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றினார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை நீக்க வேண்டும்; அப்படி நீக்காவிட்டால் ஜாதியைப் பாதுகாக்கும் அந்தப் பகுதி எரிக்கப்படும் என்பதுதான் அத்தீர்மானத்தின் அறிவிப்பு.
நவம்பர் 26 என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் பூர்த்தியான நாள் (26.11.1949). பொருத்தமாக அந்தத் தேதியைத் தேர்ந்தெடுத்து அறிவித்தார்.
இலட்சோப லட்ச மக்கள் கூடிய அம்மாநாட்டில் மாபெரும் தலைவர் நிறைவேற்றி அறிவித்த தீர்மானம் பற்றி ஆலோசிக்காமல், சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்று தான் ஆய்வு செய்தார்கள்.
என்ன வேடிக்கை என்றால், சட்டத்தை எரித்தால் என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடம் இல்லை!
இப்படி எல்லாம் ஒரு போராட்டத்தை நடத்த ஒரு தலைவர், ஓர் இயக்கம் முன்வரும் என்று சட்டத்தை இயற்றியவர்களே கனவிலும் நினைக்கவில்லை.
விடுவார்களா? ஆண்டாண்டு காலமாக ஜாதி ஏணிப் படிக்கட்டின் மேல் தளத்தில் அமர்ந்து ஆதிக்கம் செய்து வந்த கூட்டம், அவசர அவசரமாக ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.
சென்னை சட்டமன்றத்தில் இந்திய தேசியத்தின் கவுரவச் சின்னங்களை அவமதித்தால் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்ற மசோதா (Prevention of Insult to National Honour – 1957) நிறைவேற்றப்பட்டது.
தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்டார்.
‘‘மூன்று ஆண்டுக்கோ, பத்து ஆண்டுக்கோ, நாடு கடத்தலுக்கோ, தூக்குக்கோ அஞ்சப் போவதில்லை. தயாராவீர் தோழர்களே!’’ என்பதுதான் தந்தை பெரியாரின் அந்த அஞ்சா நெஞ்ச அறிக்கை. இரயில் மூலம் பயணித்துத் தோழர்களுக்கு அறிவுரை, கருத்துரை புகன்று போராட்டத்துக்குத் தோழர்களைத் தயார்படுத்தினார்.
எதிர் வழக்காட வேண்டாம் என்று கூறிய தந்தை பெரியார் ‘‘நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். அரசியல் சட்டத்தில் ஜாதிக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். ஆதலால் நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்’’ என்பதுதான் சட்டத்தை எரித்த தோழர்கள் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம்!
இப்படி ஒரு தலைவர், இப்படி ஒரு இயக்கம், இப்படிப் பட்ட தொண்டர்கள், தோழர்களை வரலாறு கண்டதுண்டா?
10 ஆயிரம் தோழர்கள் சட்டத்தை எரித்து அதன் சாம்பலை உள்துறை அமைச்சருக்கு (திரு. எம். பக்தவத்சலம்) அனுப்பி வைத்தனர்.
மூவாயிரம் பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். இரு மாதங்கள் முதல் இரண்டாண்டுகள் வரை குடும்பம் குடும்பமாக சிறை ஏகினார்.
சிறையிலேயே சிலர் மாண்டனர். சிறையிலிருந்து எலும்பும் தோலுமாக வந்த தோழர்கள் விடுதலையான சில வாரங்களிலேயே மரணத்தைத் தழுவினர்.
கர்ப்பிணிப் பெண்களும் சிறை ஏகியதுண்டு. அப்படிப் பிறந்த குழந்தைக்கு சிறைப்பறவை என்றும், சிறைவாணி என்றும் பெயர் சூட்டியதுண்டு.
ஜாதி ஒழிய வேண்டும் என்பது குற்றமோ? சொல்லுங்கள் தோழர்களே! இன்றைக்கும் அந்தக் களத்திலே நின்று கொண்டுதான் இருக்கிறோம்.
வரலாறு காணாத போராட்டம் நடத்திய இந்த நவம்பர் 26ஆம் தேதியான இந்த நாளில் அந்தக் கருஞ்சட்டை வீர மறவர்களுக்கு, சுயமரியாதைச் சுடரொளிகளை நினைவு கூர்ந்து வீர வணக்கம் செலுத்துகிறோம்.
ஜாதி முற்றாக ஒழிக்கப்படும் வரை நம் போராட்டம் ஓயாது! ஓயாது!! இது உறுதி! உறுதி!!
வாழ்க பெரியார்!
ஒழிக ஜாதி!!