நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தைப் பார்வையிடுவதற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வலுவலகம் திருச்செங்கோடு மலை அடிவாரத்திற்கு அருகில் சி.எச்.பி. காலனி மேலூர் சாலையில் அமைந்துள்ளது. அந்த வேண்டுகோளை நிறைவேற்றும் வண்ணம் சரியாக 10.30 மணிக்கு ஆசிரியர், கருஞ்சட்டைப் படையினருடன் சென்றிருந்தார். தி.மு.க. மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் மிகுந்த உற்சாகத்துடன் ஆசிரியரை வரவேற்றார்.
‘‘தளபதியார் அரங்கம்’’ என பெயரிடப்பட்ட அரங்கினுள் நுழைந்ததும், வலப்பக்கத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் இ–சேவை மய்யம் இருப்பதை சுட்டிக்காட்டி விளக்கினார். தொடர்ந்து ஆசிரியரை உள்ளே அழைத்துச் சென்று தி.மு.க. மாவட்டக் கழக அலுவலகத்திற்குள் உள்ள இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார்.
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் வந்திருந்து ஆசிரியருக்கு மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து தி.மு.க. பொறுப்பாளர்கள், தோழர்கள் அணியணியாகத் திரண்டு வந்து ஆசிரியருக்கு ஆடையணிவித்து மரியாதை செய்து அவருடன் அளவளாவினர். ஆசிரியர் அங்கிருக்கும் வரை அந்த இடம் சமூக, அரசியல் திருவிழா கோலம் பூண்டிருந்தது.
இந்நிகழ்வில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில், சேலம் மாவட்டத் தலைவர் இளவழகன், சேலம் மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், மாவட்டச் செயலாளர் வை.பெரியசாமி, கோபி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், வெண்ணாந்தூர் செல்வகுமார், ஈரோடு பேராசிரியர் பா.காளிமுத்து, நாமக்கல் மாவட்டத் தலைவர் ஏ.கே.குமார், செயலாளர் பெரியசாமி, தலைமைக்கழக அமைப்பாளர்கள் ஊமை ஜெயராமன், ஈரோடு சண்முகம், ஆத்தூர் சுரேஷ், கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், நாமக்கல் மாவட்ட துணைச்செயலாளர் பொன்னுசாமி, சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வீரமணி ராஜூ, நாமக்கல் மாவட்டத் தோழர்கள் மோகன், மா.முத்துக்குமார், ஆனந்த குமார் கணேசன், நந்தகுமார், பாரதிராஜா, பூவரசன் மற்றும் தி.மு.க.வின் பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆசிரியர் அலுவலகத்தை பார்வையிட்ட நிகழ்வை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றிவிட்டனர்.