திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகில், ஆசிரியர் முன்னிலையில், தந்தை பெரியார் சிலைக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில், காமராஜர் சிலைக்கு நாமக்கல் கழக மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பெரியசாமி, அண்ணா சிலைக்கு கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் மற்றும் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் ஆகியோர் இணைந்து மாலையிட்டனர்.
தந்தை பெரியார் சிலைக்கு அருகில், காலை 10.15 மணியளவில் கழகத் தலைவர் ஆசிரியர் பலத்த ஒலி முழக்கங்களுக்கிடையே கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.
கொடி மரத்தை ஒட்டி இருந்த அய்ம்பெரும் விழா கல்வெட்டை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் திறந்து வைத்தார். கல்வெட்டில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்டத் தலைவர் ஏ.கே.குமார் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
அய்ம்பெரும் விழாவுக்கான விளக்கமாக “தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, திராவிட (சிந்து சமவெளி) நாகரிகப் பிரகடன நூற்றாண்டு விழா” என்ற அய்ந்தும் அக்கல்வெட்டில் பொறித்து வைக்கப்பட்டிருந்தது.
நிகழ்வில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவ னத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், சேலம் மாவட்டத் தலைவர் இளவழகன், சேலம் மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், மாவட்டச் செயலாளர் வை.பெரியசாமி, கோபி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் முன்னிலையேற்று கலந்து கொண்டு உணர்ச்சிப் பெருக்கோடு ஒலி முழக்கங்கள் செய்தனர். பொதுமக்களும் இந்த நிகழ்வால் கவரப்பட்டு கூடிநின்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.