ஒரு படிப்பகத்தைத் திறந்தால், பல சிறைச்சாலைகளை மூடுகிறோம் என்று பொருள்!
சுயமரியாதை இயக்கத்தின் இயல்பை, சாதனைகளை பட்டியலிட்ட கழகத் தலைவர்!
திருச்செங்கோடு, நவ.25 அடிக்க அடிக்க எழும் பந்துபோல் எதிர்க்க எதிர்க்க எழும் திராவிடர் இயக்கம்! ஒரு படிப்பகத்தைத் திறந்தால் பல சிறைச்சாலைகளை மூடுகிறோம் என்று பொருள்! என்று சுயமரியாதை இயக்கத்தின் இயல்பை, சாதனைகளை பட்டியலிட்டார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.
கழகத் தலைவருக்குச்
சிறப்பான வரவேற்பு!
திருச்செங்கோட்டில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய திராவிட இயக்கத்தின் முக்கிய தூண்களின் பிறந்தநாள் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, திராவிட (சிந்து சமவெளி) நாகரிக நூற்றாண்டு என அய்ம்பெரும் விழாவாக கொண்டாடுவதற்கு நாமக்கல் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நேற்று (24.11.2024) காலை 12 மணியளவில், திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியில் உள்ள செங்குந்தர் திருமண மாளிகையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக தி.மு.க. இளைஞரணி சார்பில் சூரியம் பாளையம் பகுதியில் கலைஞர் நூலகத்தைத் திறந்து வைத்துவிட்டுத்தான் நிகழ்ச்சி அரங்கிற்கு வந்தார் ஆசிரியர். இருமருங்கிலும் சட்டமன்ற, அமைச்சர் பெருமக்கள் மற்றும் கழகத் தோழர்களுடன் கழகத் தலைவர் வருகை புரிந்த காட்சி அங்கிருந்தோருக்கு எழுச்சியையும், உணர்ச்சியையும் இயல்பாக வழங்கிவிட்டது.
அத்துடன் எழுந்த ஒலி முழக்கங்கள் எழுச்சிக்குக் கூடுதல் பலம் சேர்ந்தன. அத்துடன் ஆசிரியருக்கு வழங்கப்பட்ட இளைஞர்களின் சிலம்பாட்ட வரவேற்பு அந்த எழுச்சியை பன்மடங்கு கூட்டிக் காட்டிவிட்டது. அதுமட்டுமல்ல அரங்கமும் இரு பாலராலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. உள்ளே நுழையும் இடத்தில்தான் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் ஒன்றாக இருக்கும் பதாகைகள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. அங்கு நடந்து செல்வதற்குக் கூட பாதை இல்லை. அந்த அளவுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைக் காண மக்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர். தமிழர் தலைவர் ஆசிரியரை, மக்களை விலக்கி வழி ஏற்படுத்திக் கொண்டு தான் மேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது எழுந்த ஆரவாரம் அரங்கின் கூரையில் மோதித் திரும்பியது.
முன்னிலை வகித்து சிறப்பித்த பெருமக்கள்!
எழுச்சிகரமான இந்த நிகழ்ச்சிக்கு 102 வயது நிரம்பிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் அய்யா பொத்தனூர் க.சண்முகம் பொருத்தமாகத் தலைமை தாங்கினார்.
நாமக்கல் மாவட்டத் தலைவர் ஏ.கே.குமார் வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன், ம.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளர் கணேசன், ம.தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் முருகன் என்ற முகிலன், கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தலைமைக்கழக அமைப்பாளர்கள் ஊமை ஜெயராமன், ஈரோடு சண்முகம் ஆகியோர் மேடை ஒருங்கிணைப்புப் பணிகளை செவ்வனே செய்தனர். சேலம் மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் பெரியசாமி, ஈரோடு மாவட்டத் தலைவர் நற்குணம், கோபி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், சேலம் மாவட்டத் தலைவர் இளவழகன், ஆத்தூர் மாவட்டச் செயலாளர் நீ.சேகர், மாநில ப.க.அமைப்பாளர் வழக்குரைஞர் இளங்கோவன், ஈரோடு பேராசிரியர் பா.காளிமுத்து, சேலம் மாவட்ட ப.க.தலைவர் ராஜூ, செயலாளர் பூபதி, சேலம் மாவட்டக் காப்பாளர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம், நாமக்கல் மாவட்ட துணைச் செயலாளர் பொன்னுச்சாமி, நாமக்கல் மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆனந்தகுமார், செயலாளர் சேகர், திருச்செங்கோடு நகரத் தலைவர் முத்துக்குமார், தலைமைக்கழக அமைப்பாளர் கா.நா.பாலு ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். அத்துடன் தி.மு.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, உள்ளாட்சிப் பொறுப்பாளர்கள், ஆண்களில் சரிபாதி அளவுக்குப் பெண்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஆசிரியர் மேடையேறுவதற்கு முன்பு, திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர்களின் “மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சி நடைபெற்றது.
கேளு கழுதை கேளு! கேளு கழுதை கேளு!
இறுதியாக ஆசிரியர் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் இங்கே வருவதாக அறிவித்தார். ஆகவே அப்போது இருந்த வரவேற்பையும், இப்போதிருந்த வரவேற்பையும் ஒப்பிட்டுப் பேசினார்.
அதாவது அப்போது திருச்செங்கோடு கோயில் மண்டபம் அருகில் நடைபெறும் கூட்டத்தில் இன எதிரிகள், மாற்றுக்கருத்து உள்ளவர்கள் பன்றியை விட்டுவிட்டார்கள் என்றும், அந்தக் கலகத்தை சுயமரியாதை இயக்கத் தோழர்கள், “மகாவிஷ்ணுவின் அவதாரம் தான். வேறொன்றும் இல்லை. ஆகவே விட்டுவிடுங்கள்” என்று நாகரிகமாக பதிலடி கொடுத்து பன்றியை விட்டவர்களை வெட்கப்பட வைத்ததையும், இப்போது கொடுக்கப்பட்ட அதிரடி வரவேற்பையும் சொல்லி, சுயமரியாதை இயக்கத்தை ஏற்காதவர்களும் ஏற்றிருப்பதை புரியவைத்தார்.
தொடர்ந்து கழுதைகளை கூட்டத்தினுள் விட்டுவிடுவதைச் சொல்லி, அந்தக்கழுதைதகளை மேடை அருகிலேயே கட்டி வைத்து, “ஹிந்தித் திணிப்பை ஏன் எதிர்க்கிறோம் என்பதை கேளு கழுதை கேளு” என்று பேச்சு மொத்தத்தையும் கழுதையிடம் பேசுவதை போலவே அமைத்து எதிரிகளுக்கு பதிலடி கொடுத்ததை நகைச்சுவையும், வரலாற்றுப் பெருமையும் கலந்து பேசினார்.
மேலும் அவர் திருச்செங்கோட்டுக்கு வந்த காலத்தை நினைவு கூர்ந்து என்.கே.பி.வேலு, ஜஸ்டிஸ் கட்சியின் பரமசிவம், எஸ்.கே.வஜ்ரவேலு, சங்கரலிங்கம், முத்தையா மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த கருப்புச்சட்டை டி.பி.எஸ் என்று வரிசையாக நினைவு கூர்ந்தார்.
தனது பக்கத்தில் அமர்ந்திருந்த அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் அவர்களைப் பார்த்து, “சமஸ்கிருதம் தெரிந்தால் தான் டாக்டர் ஆக முடியும் என்று இருந்தது” என்று பழைய வரலாற்றைச் சுட்டிக்காட்டி, ”அதை திராவிடர் இயக்கம் தானே மாற்றியது! அதனால்தானே அமைச்சர் மதிவேந்தன் இன்று டாக்டர் மதிவேந்தன்! அதுவும் எம்.டி. டாக்டர்!” என்றதும் மயிர் கூச்செறிந்தது பார்வையாளர்களுக்கு. அதன் எதிரொலியாக கைதட்டல் ஓசையால் அரங்கம் நிறைந்தது. அதை ஆழமாக உள்வாங்கிய அமைச்சர் மதிவேந்தனும் வியப்புடன் ஆமோதித்து தலையசைத்தார்.
திராவிட இயக்கம் படிப்பகங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்ட, சூரியம்பாளையத்தில் திறக்கப்பட்ட படிப்பகத்தை நினைவூட்டி, “ஒரு படிப்பகத்தை திறந்து வைத்தால் பல சிறைச்சாலைகளை மூடுகிறோம் என்று பொருள்” என்று திராவிட இயக்கம் பல முனைகளில் பணியாற்றியுள்ளதை பதிவு செய்தார்.
திராவிடர் இயக்கத்தை
றைத்து மதிப்பிட வேண்டாம்!
மேலும் ஆசிரியர், சுயமரியாதை இயக்கம் மகளிருக்கென்று ஆற்றிய அரும் பணிகளை பட்டியலிட்டார்.
அதில் 1989 இல் கலைஞர் ஆட்சியில் ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்குச் சொத்துரிமை, அந்த சொத்துரிமை பின்னாளில் தி.மு.க.அங்கம் பெற்ற யு.பி.ஏ.அரசின் மூலம் 2005 ஆண்டு இந்தியா முழுவதுமாக சொத்துரிமையை பெண்கள் பெற்ற அரிய, பெரிய வரலாற்றையும் சுட்டிக்காட்டி, இன்றைய ‘திராவிட மாடல்’ அரசு பெண்களுக்கு பெற்றுத்தரும் உரிமைகளையும் பட்டியலிட்டுவிட்டு, முக்கியமாக உள்ளாட்சிகளில் 50 விழுக்காடு வழங்கப்பட்டிருப்பதை குறிப்பாகச் சொல்லி, பெண்கள் போராடமலேயே வழங்கப்பட்ட உரிமை அது என்று சொல்லி, சுயமரியாதை இயக்கத்தின் ஜாதி, மத, பாலியல் பேதமற்ற சமத்துவக் கொள்கையை விளக்கினார்.
மேலும் அவர், அமைச்சர் மதிவேந்தன், ‘புதிதுபுதிதாக கட்சிகள் வருகிறது. அவர்களுக்கும் நமது கொள்கைகளைச் சொல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கிறது’ என்று பேசியதை சுட்டிக்காட்டிய ஆசிரியர், “அன்றைக்கு அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, ‘ஈட்டி எட்டின மட்டும் பாயும், பணம் பாதாளம் வரை பாயும். எங்கள் அய்யா பெரியாரின் கொள்கை அண்டபிண்ட சராசரம் அத்தனையும் தாண்டி அதற்கு அப்பாலும் செல்லும்’ என்று கம்பீரமாக பேசுவதைச் சொல்லி, “அப்படிப் பாய்ந்ததால்தானே மதிவாணன் அமைச்சர்! அப்படி பாய்ந்ததால் தானே இராஜேந்திரன் அமைச்சர்!” என்று ஆசிரியர் இடைவெளியில்லாமல் பேசிக்கொண்டிருக்கவே, மக்கள் உணர்ச்சி வசப்பட்டு அரங்கம் அதிர கையொலி செய்தனர்.
அந்த உணர்ச்சி குறைவதற்குள் ஆசிரியர், “திராவிட இயக்கத்தை யாரும் குறைத்து எடை போட்டு விடக்கூடாது. ஏனெனில் அது அடிக்க அடிக்க எழும் பந்து போல், எதிர்க்க எதிர்க்க நாங்கள் எழுவோம்” என்று முடித்தார். கேட்கவா வேண்டும்? ஆரவாரம் தொடர்ந்தது.
திராவிட இயக்கம் தான் பாதுகாப்புக் கவசம்!
தொடர்ந்து சிந்துவெளி நாகரிகத்தின் நூற்றாண்டு விழாவை நினைவூட்டிப் பேசினார். அதை வேதகால நாகரிகம் என்று திரிப்பதை எடுத்துரைத்து, “வேதகால நாகரிகம் என்றே ஒன்று இல்லை” என்று அதற்கு பதிலடி கொடுத்து அய்ம்பெரும் விழாவுக்கு பெருமை சேர்த்து, இறுதியில் தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை தனயன் கலைஞர் அகற்ற சட்டப் போராட்டத்தை அரும்பாடுபட்டு நடத்தியதையும், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை நிறைவேற்றியதையும், பெண்களையும் ஓதுவார்களாக நியமித்த பண்பாட்டுப் போரின் மிக முக்கியமான வெற்றியையும் பதிவு செய்தார்.
நிறைவாக அண்ணாவை சிறப்பாக நினைவுகூர்ந்து “இந்தக் கொள்கைகள் யாருக்காக?” என்ற கேள்வியை எழுப்பி, மக்களை நோக்கி விரலை நீட்டி, உங்களுக்காக; உங்கள் சந்ததியினருக்காக என்று சொல்லச் சொல்ல கரவொலி மிகுந்தது. தொடர்ந்து அவர், ”திராவிடர் இயக்கம் யாருக்கும் தனிப்பட்ட முறையில் எதிரி இல்லை. இதுதான் உங்கள் பாதுகாப்புக் கவசம்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார். மக்கள் மிகுந்த மனநிறைவு பெற்றனர். நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்ய திருச்செங்கோடு நகரத் தலைவர் மோகன் நன்றி கூறினார்.
நன்கொடைகளும், விடுதலை சந்தாக்களும்!
முன்னதாக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில் ஆசிரியர் அவர்களால் சூரியம்பாளையம் பகுதியில் நேற்று (24.11.2024) திறந்து வைக்கப்பட்ட கலைஞர் நூலகம் உள்பட மூன்று நூலகங்களுக்கு தலா 20,000/- வீதமாக இயக்க நூல்கள் வழங்குவதற்காக மொத்தம் ரூபாய் 60,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். சேலம் மாவட்டக் காப்பாளர் சிந்தாமணியூர் சுப்பிரமணியம் 5 விடுதலை சந்தாக்களை ஆசிரியரிடம் வழங்கினார். அதற்கும் முன்னதாக திருச்செங்கோடு நகரத் தலைவர் மோகன் ஆசிரியரின் அனுமதி பெற்று ”தமிழ்நாடு தமிழருக்கே” என்று பெரியார் அன்று முழங்கியதன் நினைவாக தமிழ்நாடு உருவெட்டுத் தோற்றத்தில் மொத்தமாக தந்தை பெரியார் நடந்து வருவதைப் போன்ற நினைவுச் சின்னத்தை ஆசிரியர் உள்பட மேடையிலிருந்த அனைவருக்கும் வழங்கினார்.
அதே மோகன் தலைமையில் ஆனந்தகுமார் கணேசன், நந்தகுமார், வெ.மோகன், மா.முத்துக்குமார், பாரதிராஜா, மு.பூவரசன், கலை ஆர்ட்ஸ் பூ.ஜனகர், பொத்தனூர் பூ.சுந்தரம் ஆகிய 8 இளைஞர்கள் கழகத் தலைவர் முன்னிலையில் திராவிடர் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
முன்னதாக குச்சிபாளையத்தைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு பயிலும் ஜேசன் மேடையேறி 100 திருக்குறள்களை கடகடவென்று சொல்லி அனைவரின் பாராட்டையும் பெற்றான். ஆசிரியர் மிகுந்த மகிழ்வுடன் அந்தச் சிறுவனுக்கு ஆடையணிவித்து மரியாதை செய்தார்.
அதைத் தொடர்ந்து தோழர்கள் விடுதலை சந்தாக்கள், நன்கொடைகளை கழகத்தலைவரிடம் வழங்கினர்.
கழகத் தலைவர் தோழர்களுக்கு பயனாடையணிவித்து மகிழ்ந்தார். அமைச்சர் பெருமக்கள், தி.மு.க. பிரமுகர்கள் ஆசிரியருக்குப் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர். மிகுந்த மனநிறைவுடன் ஆசிரியர் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.