திருச்சி, நவ. 24- தேசிய மாணவர் படையின் வீரர்கள், மலை ஏறுதலின் அடிப்படைகளைக் கற்றுக் கொள்ளவும், சாகச உணர்வை வளர்க்கவும், ஒவ்வொரு ஆண்டும் எட்டு மலை ஏறும் பயிற்சி முகாம்கள் தேசிய மாணவர் படை இயக்குநரகத்தால் நடத்தப்படுகின்றன.
2024-2025 ஆம் ஆண்டிற்கான இந்தப் பயிற்சி முகாமானது, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் பகுதியில், கடந்த 15.11.2024 முதல் தொடங்கி எதிர்வரும் 26.11.2024 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1080 தேசிய மாணவர் படை வீரர்கள் கலந்து கொள்ளும் இந்தப் பயிற்சி முகாமில், பயிற்சி பெற, திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும், தேசிய மாணவர் படை மாணவி, செல்வி.ஆர்.யோகிதா தேர்வாகி, தற்போது பயிற்சி மேற்கொண்டு பள்ளிக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
இந்த முகாமில் பங்கேற்பதன் மூலம், மலை ஏறுதல், அணி வகுப்பு பயிற்சி, சுகாதாரம், சுயபாதுகாப்பு, வரைபட வாசிப்பு, படைத்துறைக்குரிய ராணுவ புவியியல், காலாட்படை, ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் கையாளுதல், ஆயுதப்பயிற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகளை அவர் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவி.யோகிதா, தனது பயிற்சிகளைச் சிறப்பாக முடித்து வாகை சூடிடவும், அவரைச் சிறந்த முறையில் பயிற்றுவித்த பள்ளியின் தேசிய மாணவர் படையின் பொறுப்பாசிரியர், இ.மனோன்மணி அவர்களுக்கும், பள்ளியின் தாளாளர், முதல்வர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.