ஈரோட்டில் நாயக்கர், நாயுடு, முதலியார் சந்திப்பு
சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கரும், முதலியாரும் – தாய் தந்தையாம்!
நாகம்மாள், லெனின் படத்திறப்பு விழா
ஒரே மேடையில் ஈ.வெ.ரா. – திரு.வி.க. – வரதராஜுலு – திருச்சி விசுவநாதம்
ஈரோடு மகாநாட்டு மண்டபத்தில் தோழர்கள்
ஈ.வெ.ரா.நாகம்மாள், லெனின் ஆகியவர்களின் உருவப் படத்திறப்பு விழா 26.11.1933 மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவிற்குக் தலைமை வகிக்க “தமிழ்நாடு” ஆசிரியர் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களை தோழர் ஈ.வெ.ரா. பிரேரித்தார். திருச்சி விசுவநாதம் ஆமோதித்தார். தலைவர் தமது பதவியை எற்றுப் பின்வருமாறு முன்னுரை கூறினார்.
டாக்டர் நாயுடு
காலஞ்சென்ற நாகம்மாள் அவர்களை நான் நன்கு அறிவேன். அவருடைய குணங்களை என்னைவிட யாரும் அதிகமாக அறிந்திருக்க முடியாது. அவர் இறந்துபோன செய்தியைக் கேட்டு என் மனைவி கண்ணீர் விட்டார். எனது மனைவியாரும் நாகம்மாளும் ஒரே படத்திலிருப்பதை இன்றும் எங்கள் வீட்டில் அடிக்கடி பார்க்கிறேன். எனக்கும் நாயக்கருக்கும் அண்ணன் தம்பிகளைப் போல அடிக்கடி சண்டை வருவதுண்டு. நாயக்கருக்கும் எனக்கும் பலவித அபிப்பிராய பேதங்களும் உண்டு. இருந்தாலும் முக்கியமான சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் காட்டிக்கொடுத்துக் கொண்டதில்லை. எங்கள் வாழ்நாட்களில் ஒன்று சேரவும் ஒத்துழைக்கவும் விட்டுப் பிரியவுமான பல சந்தர்ப்பங்கள் நேர்ந்திருக்கின்றன. நான் நமது தேச முன்னேற்றத்தில் நாட்டம் செலுத்துபவன். நாயக்கரோ சர்வ தேசங்களின் போராட்டத்தை (இன்டர்நேஷனல்) நடத்துகிறார். இருந்தாலும் அவருடைய சீர்திருத்தக் கொள்கைகளையும் இந்தியாவிலுள்ள சகல சொத்துக்களையும் எல்லா ஜனங்களும் சரி சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமென்பதையும் நான் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்ளுகிறேன். இந்திய தேசிய சர்க்காருக்கு சகல சொத்துக்களையும் பொது உடைமையாகச் செய்தாலொழிய நமது நாட்டிற்கு கதி மோட்சம் கிடையாதென்பது நிச்சயம். நான் இங்கு வந்ததுபற்றி நீங்கள் மகிழ்ச்சியடையலாம். அதைவிட என்னை அழைத்ததற்காக நான்தான் அதிக மகிழ்ச்சியடைகிறேன். முதன்முதலாக எனக்கு வந்த அழைப்பைப்பற்றி ஆச்சரியமாகயிருந்தது. மேலும் அதை நான் சந்தேகித்ததும் உண்டு. பிறகு உண்மை என அறிந்ததும் பெரு மகிழ்ச்சி கொண்டு இங்கு வந்து சேர நேர்ந்தது. என்னுடைய அபிப்பிராயங்களை முடிவுரையில் கூறுகிறேன். இப்பொழுது தோழர்
திரு.வி.கலியாணசுந்தர முதலியாரவர்களை இந்த இரு படங்களையும் திறந்து வைக்கும்படி வேண்டுகிறேன்.
திரு.வி.க. முதலியார்
தோழர் திரு.கலியாணசுந்தர முதலியார் அவர்கள் படங்களைத் திறந்து வைக்கும்பொழுது பின்வருமாறு பேசினார்:
பெரியோர்களே, இப்பொழுது இங்கு இரண்டு பெரியார்களுடைய உருவப் படங்களைத் திறந்துவைக்க என்னையும் டாக்டர் வரதராஜுலு நாயுடுவையும்அழைத்தமைக்காக நான் மனப்பூர்வமான நன்றியைக் கூறுகிறேன். என் உடல் நிலை அதிக நேரம் பேச இடங் கொடுக்காது. நானும் நாயுடுவும் இங்கு வருவதாக சென்னையில் பேரிகை அடித்துத் தெரிவித்தாலும் யாரும் நம்பவே மாட்டார்கள். இங்கு நாங்கள் வருவது சம்பந்தமாக பல கடிதங்கள் பலமுறையில் எனக்கு வந்து சேர்ந்தன.
ஒற்றுமைக்கு வழி
கருத்து வேற்றுமை எல்லாருக்கும் எக்காலத்தும் உண்டு. அந்த முறையில் எனக்கும் உங்களுக்கும் இருக்கவும் கூடும். பிறப்பில் உயர்வு தாழ்வு இல்லை என்பதிலும் தீண்டாமையை ஒழிப்பதிலும் உங்களுக்கும் எனக்கும் கருத்து வேற்றுமை இல்லை. பெசண்டம்மையார் குரு போன்றவர் ஆவார் – எனக்கு. “உன்னுடைய தப்பிதங்களை உணர்ந்து நியாயமான பாதையில் நடக்க ஆசைப்படு” என்று கூறியிருக்கிறார். நாயுடுவும் நாயக்கரும் நானும் ஒன்று சேர வேண்டுமென்று தென்னாட்டிலுள்ள பலரும் எதிர்பார்த்தார்கள். நாங்கள் வெவ்வேறு சமூகத்தில் பிறந்து வெவ்வேறு இடங்களில் வளர்ந்து ஏதோ ஒரு காலத்தில் ஒன்றாய்க் கூடினோம். பல வேலைகளை ஒரே மனதுடன் செய்ய ஆரம்பித்தோம். அதில் வெற்றியையும் அடைந்தோம். இப்போது எங்களிடத்திலுள்ள கருத்து வேற்றுமையால் பிரிந்திருக்கிறோம். இவ்வேற்றுமைகளுக்குக் காரணம் என்னவென்பதை தகுந்தவிடத்தில் யோசித்தால் இவ்வேற்றுமை ஒழிந்து ஒற்றுமை உண்டாக வழி பிறக்காமல் போகாது.
லெனின் படத்தை திறக்கத் தகுதியா?
நான் நாகம்மாள் அவர்கள் படத்தைத் திறக்க வந்து லெனின் படத்தையும் திறந்துவைக்கும்படி நேர்ந்தது. சிலர் என்னை லெனின் படத்தைத் திறந்து வைக்கத் தகுதியுடையவனாவென்று அய்யப்பாடு கொள்ள நேரிடும். ஆனால், எனது பழைய நண்பர்கள் அவ்வாறு எண்ணமாட்டார்கள். ஏனெனில், நான்தான் முதன்முதலில் சென்னையில் லெனின் படத்தைத் திறந்துவைத்தவன். லெனின் சம்பந்தமான நூல்களை ரஷ்யாவிலிருந்து அதிகமாக வரவழைத்தது “நவசக்தி” நிலையம்தான்.
ஆண் – பெண் தன்மை
ஒரு பெண்ணின் படத்தை ஒரு பெண்ணைக் கொண்டுதிறக்காமல் ஒரு ஆணைக் கொண்டு ஏன் திறக்க வேண்டுமென்று பார்க்கலாம். ஒருவித ஆராய்ச்சியில் ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறித் தோன்றும். வீரம், கோபம், மமதை முதலியவை நிறைந்த உள்ளம் பெண்ணிடத்திருப்பினும் ஆண் தன்மை வாய்ந்தவை. கருணை, அன்பு, சாந்தம், பொறுமை, அடக்கம் முதலியவை நிறைந்த உள்ளம் ஆணிடத்திருப்பினும் பெண் தன்மை வாய்ந்தவை. இந்த சாஸ்திரத்திற்கு (Evelution) எவலீயூஷன் தியரி என்றும் உள்ளது – சிறத்தல் என்று பெயர். சில படங்களின் முகங்களை ஆண்முகம் பெண் முகம் என்று கூறுவதுண்டு. நெப்போலியன் முகம் பெண் முகத்தையே காட்டுகிறது. கம்பர் படம் கிடைத்திலது. கிடைத்திருப்பின் அதுவும் பெண்மையுடையதாகத் தானிருக்கவேண்டும். நாயக்கரும் என்னைப் “பெண்” என்று ஒரு சமயம் கூறியுள்ளார். பெண்ணுரிமைக்காக நாயக்கருடன் நானும் பெரும் பாடுபட்டிருக்கிறேன். பழங்காலத்தில் பெண்ணுரிமை இருந்தது. இக்காலத்தில் இல்லை. வருங்காலத்தில் வந்துவிடும். நேற்று நடந்த பெண்கள் மகாநாட்டு சொற்பொழிவில் ஒரு பெண்மணி சீவக சிந்தாமணியைக் குறை கூறினார். அது உண்மையேயாகும். ஜைனம், பவுத்தம், வேதாந்தம் இம்மூன்றும் சேர்ந்தே பெண்ணுரிமையைப் பாழ்படுத்தியது. இம்மூன்று நூல்களும் பெண்ணுக்கு மோட்சம் இல்லை என்றே கூறுகின்றன. பெண்களை இழிவு செய்யும் கவிகள் பழைய நூல்களில் தோன்றியிருப்பது வருந்தத்தக்கதுதான். எவ்வளவுதான் நீங்கள் சுயராஜ்யத்திற்குப் பாடுபட்டாலும் பெண்ணுரிமை இன்றி சுயராஜ்யம் கிடைக்கவே கிடைக்காது.
பொன்காய்த்த மரத்தின் பொலிவிழந்த முகம்
நாகம்மையார் நல்ல குடும்பத்தில் பிறந்து உயர்ந்த குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு சிறந்த நெறியைக் கைக்கொண்டவர். ஈ.வெ.ரா. அவர்களுக்குத் தூண் போன்றுதுணையாயிருந்து வந்தவர். தமது கணவருடைய சமய, சமூக, அரசியல் சேவையில் அம்மையார் செய்த அரிய ஊழியத்தை நம் நாடு மறக்க முடியாது. நான் முதன்முதலில் நாகம்மையாரைக் கண்டது 1919ஆம் ஆண்டிலாகும். காங்கிரஸ் சார்பாக ஈரோட்டில் கூடிய சென்னை மாகாண சங்கத்தில் நாயக்கர் வரவேற்புக் கழகத் தலைவராக இருந்தார். அப்பொழுது அம்மாள் “பொன்” காய்த்த மரம் போன்று அழகிய அணிபூண்டு தோன்றினார்கள். இரண்டாவதாக அம்மையார் காங்கிரஸ் தொண்டுகளைச் செய்யும்பொழுது எல்லா அணிகலனும் இழந்து, கதாராடை பூண்டு எளிய வாழ்க்கையுடன் தோன்றக் கண்டேன். முடிவாக நாயக்கர் சென்னையில் நோய்வாய்ப்பட்டிருந்த பொழுது அம்மையாரின் பொலிவிழந்த முகத்தைக் கண்டேன். அம்மையார் பல வகையிலும் இவ்வாறிருந்து நாயக்கருக்குப் பேர் உதவியாக, விளங்கி அவரோடு பல கஷ்டங்களையும் அனுபவித்து வந்திருக்கிறார். இதைக் கூறும்போது எனக்கு புதுச்சேரியில் வாழ்ந்த அரவிந்த்கோஷ் மனைவியாரின் நினைவு வருகின்றது. அது வேறு துறையாகும். ஆனாலும், நாகம்மாள் நாயக்கர் எத்துறை போயினும் பின்தொடர்ந்து செல்வார்கள்.
ஈரோட்டு கண்ணம்மாள்
கள்ளுக்கடை மறியல் செய்யும்பொழுது நாயக்கர் சிறை சென்றதும் நாகம்மையாரவர்கள் “ஆ, ஈரோட்டிற்கும் இத்தகைய ஆபத்து வந்ததா?” என நினைத்து உடனே தான் தலைமை வகித்து அதை நடத்தி கண்ணகி போன்று வீரத்துடன் விளங்கினார்கள். கண்ணகி கூறிய காரணம் “என் கணவன் கள்வனல்ல” என்பதே. அதுபோல அஞ்சா நெஞ்சமும் அரிய வீரமும் 1920ஆம் ஆண்டிலே நாகம்மாளிடம் நான் காண நேர்ந்தது. உடனே என்ன நடந்தது? ஈரோடு முழுவதும் திரண்டது. போர் முற்றியது. அரசாங்கம் அஞ்சியது. 144 பின் வாங்கியது. இது பெரும் வெற்றியாகும். அம்மையார் சரித்திரம் எழுதப் பெறுங் காலத்தில் இப்பெருமை பொன் எழுத்துகளில் பொறிக்கப் பெற வேண்டும். இது எதைக் குறிக்கிறது என்றால், “பெண்கள் எந்தப் போராட்டங்களிலும் தலையிட மாட்டார்கள். தலையிட்டால் அவர்களை அடக்க யாராலும் முடியாது” என்பதையே குறிக்கிறது.
விருந்தோம்பலும் தீண்டாமை ஒழிப்பும்
இன்னும் விருந்தோம்பலில் அம்மையார் பெருஞ்சிறப்பு வாய்ந்தவர்கள். தீண்டாமையை ஒழிக்க நடந்த வைக்கம் போராட்டத்தில் நாயக்கர் உடனிருந்து வெற்றி பெற்ற வீர நாயகியாராகும். இவ்வளவு பெருமை வாய்ந்த அம்மையாரின் திருவுருவப் படத்தை இதுபோன்ற சிறப்பு வாய்ந்த மகாநாடுகளில் திறந்து வைப்பது முற்றிலும் நியாயமேயாகும். ஆகவே, அவர்களின் திருவுருவப் படத்தை நான் அகம் மிக மகிழ்ந்து, பெருமை பாராட்டி “பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட பேருருவம்” எனக் கூறி திறந்து வைக்கின்றேன்.
லெனின் படம்
தோழர் லெனின் வரலாற்றைப் பற்றி நான் தொடர்ந்து படித்து வருகின்றேன். என்னைப் பார்த்தாலே இந்த உச்சுக் குடுமி வைதீகனுக்கும் லெனினுக்கும் என்ன சம்பந்தம் என்று நினைப்பீர்கள். ஆனாலோ, எனது வாழ்க்கை தொழிலாளர்களுக்காகவே நிலைத்திருக்கிறது. தொழிலாளர் இயக்கத்தை நடத்த தோழர் சிங்காரவேலு எனக்கு வழிகாட்டினார். அவரிடம் நான் டார்வின் தியரியை பாடங் கேட்டேன். அது முழு நாத்திகப் படிப்பாகும்.
லெனின் நோக்கமும் அவரால் அழிந்த மதமும்
பிரிட்டிஷார் லெனின் தங்களுக்கு உதவி செய்வார் என்று நம்பி ஏமாந்தார்கள். லெனினுடைய உண்மை நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அது பாடுபடுகின்ற ஏழை மக்களை பசியால் வாடவிட முடியாது என்பதேயாகும். இந்தத் திண்ணிய எண்ணத்தைத் துப்பாக்கிக் குண்டுகளாலும் தூக்கு மேடைகளாலும் கூட மாற்ற முடியவில்லை. லெனினின் சிறந்த கொள்கையைப் பற்றி 1921ஆம் ஆண்டில் தென்னாற்காடு ஜில்லா மகா நாட்டில் நான் பேசியிருக்கின்றேன். உண்மைச் சமயம் எப்படியிருக்க வேண்டுமென்பதில் என்னுடைய கொள்கையை லெனின் வாழ்க்கையில் கண்டேன். முதலாளிக் கூட்டத்திற்கு உதவி செய்கின்ற மதத்தை லெனின் மறுத்திருக்கின்றாரே ஒழிய தனிப்பட்டதும் அமைதியானதுமான மதத்தை அவர் ஒழித்தவரல்ல. லெனின் தனிப்பட – அமைதியாக – இருப்பதற்கென்றே ஒரு தனி அறை உண்டு. இது எனக்குப் போதுமானது அன்பும் அமைதியுமான முறை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாது. இதை நான் உங்களுக்கு வற்புறுத்த வரவில்லை.
பழந்தமிழ் நூல்களில் பொதுஉடைமைப் பேச்சு
ரஷ்யாவில் இன்று லெனின் வகுத்த ஆட்சி முறைதான் நடைபெறுகின்றது. இது கடைசி வரையில் நிலைபெறுமா? என்பதில் அய்யப்பாடும் உண்டு. “தேச பக்தி” என்ற சொல்லும் எழுத்தும் பேச்சுந்தான் அய்ரோப்பா தேசங்களையும் கீழ்நாட்டு தலங்களையும் திடுக்கிடும்படிச் செய்து பொது உடைமைக் கொள்கையைத் தொழிலாளர்களிடையே நிலை நிறுத்தியதாகும். பொதுவுடைமைக் கொள்கை நாட்டிற்கு நலம் தரும் என்பதில் எவ்வித அய்யப்பாடும் இல்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு புலவர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பொதுவுடைமைச் சொல்லை புறநானூற்றில் கூறியுள்ளார். நீங்கள் பழந்தமிழ் நூல்களில் புதிய இனிமையைக் காணுங்கள். ‘எவலீயூஷன் தியரியை’க் கடைப்பிடியுங்கள். உலக மக்கள் யாவரும் சமம் என்ற லெனினின் கொள்கையைப் பின்பற்றுங்கள். உகிலுள்ள பல தலைவர்களில் லெனின் ஒருவர். அவர் எல்லாத் தலைவர்களுக்கும் தலைவராய் இருந்து தோழராய்த் தோன்றியவர். “தோழர்” என்ற சொல் நல்ல தமிழ்ச் சொல்லாகும். அது மிகவும் பாராட்டக் கூடியது. சுயமரியாதைக்காரர்கள் இச்சொல்லை வழங்குவது எனக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. இச்சொல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தமிழ்ப் பெரியாரால் “என்னுடைய தோழனுமாய்” என்று கூறப் பெற்றதாகும்.
சுயமரியாதை இயக்கமும் முதலியாரும்
நமது நாடு உய்ய வேண்டுமானால் ரஷ்யா நாட்டிலிருந்துதான் அதற்கு வழி தோன்றவேண்டும்.அத்தகைய பெருமை வாய்ந்த உன்னதக் கொள்கையை உலகுக்குக் காட்டிய பெரியாரான லெனின் படத்தை நான் மகிழ்ச்சியுடன் திறந்து வைக்கின்றேன்.
பின்பு, “சுயமரியாதை இயக்கம் எங்கள் இருவரால் தான் தோற்றுவிக்கப் பெற்றது. நாயக்கர் தந்தை, நான் தாய். எங்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை தந்தையிடத்தில் இருக்கிறதே தவிர வேறில்லை” எனக் கூறி அமர்ந்தார்.
தலைவர் முடிவுரை
டாக்டர் நாயுடு முடிவுரையாகக் கூறியதன் சாராம்சம்:
முதலியாரவர்கள் வெகு நேரம் பேசிவிட்டார். ஆனால், அவரது பேச்சின் இனிமையால் நேரம் போனது நமக்குத் தெரியவில்லை. அவரது எழுத்துத் திறமையும், பேச்சுத் திறமையும் தமிழ்நாட்டிற்கு நான் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டுவதில்லை. நான் 15 மாதம் சிறை சென்றிருந்த பொழுது முதலியார் “தேசபக்த”னில் “வாகை மாலை சூடினான்” என்று ஒரு தலையங்கத்தை எழுதியிருந்தார். இதைப் பற்றி எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவ்வளவு சிறந்த தமிழ்ச் சொல்லாக இருந்தது. எங்களுக்குள் அபிப்பிராய பேதம் உண்டு. இருப்பினும் அது பெரிதல்ல. நாயக்கர் சர்வதேசக் கூட்டுறவில் நாட்டஞ் செலுத்துகிறார்; முதலியார் சமயப்பற்று வேண்டுமென்கிறார். நான் தேசாபிமானம் அவசியமென்கிறேன். இப்போது எங்கள் மூவருக்குமுள்ள அபிப்பிராய பேதங்களை நீங்கள் கண்டுகொண்டீர்கள். இது பிரமாதமான வித்தியாசமாகாது. தேச முற்போக்கைப் பொறுத்தவரையிலும் ஒருவருக்கும் அபிப்பிராய பேதம் கிடையாது.
மாணவர்களுக்கு மதக் கல்வியும்
சர்க்காரில் ஜாதிமத வெறியரும் கூடாது
ரஷ்யாவிலிருந்த அந்தஸ்துதான் இங்கும் தற்சமயம் ஏற்பட்டிருக்கிறது. மூட பக்தியாலேயே நம் நாடு இந்த ஈன ஸ்தியை அடைந்திருக்கிறது. ஆகவே, மூட பக்திகள் ஒழிய வேண்டும். மூட பக்திக்கு மதக் கல்வியே பிரதானமாகும். பதினெட்டு வயதிற்குட்பட்டவர்களுக்கு பள்ளிக் கூடங்களில் மதக் கல்வியைப் போதிக்கவே கூடாது. இதைப் பற்றி கண்டிப்பான சட்டம் ஒன்று ஏற்படுத்த வேண்டும். மதம் போதிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு சர்க்கார் கிராண்டு கொடுக்கக் கூடாது.
சைவம், வைணவம், சமணம் என்ற போராட்டங் களைப் படிக்கின்ற நமது பிள்ளைகள் குட்டிச் சுவராகிவிடுகிறார்கள். சமய நூல்கள் முற்றும் ஒன்றை ஒன்று தூஷித்து எழுதப்பட்டிருக்கிறது. இது தேச முன்னேற்றத்திற்குப் பெரிய இடையூறாகவிருக்கிறது. சமணர்களைக் கழுவேற்றியவர்கள் எல்லாம் அக்காலத்தில் பெரிய மனிதர்களாகக் கருதப்பட்டார்கள். இப்போது இவ்விதம் முடியுமா? இந்தியருள் இப்பொழுது தோன்றுகின்ற போராட்டங்களுக்கும் சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் வேற்றுமைகளுக்கும் மதப் பைத்தியந்தான் பெருங்காரணமாயிருக்கின்றது. மதமும் ஜாதியும் ஒழிந்தாலன்றி இந்தியா விடுதலை அடைய முடியாது. சட்ட சபைகளிலும் பொது ஸ்தாபனங்களிலும் ஸ்தானங்கள் ஒதுக்குவதில் மதத்தை அஸ்திவாரமாகக் கருதி ஒதுக்கக் கூடாது. ஜாதி மதப் பற்று கொண்டவர்களுக்கு சர்க்கார் உத்தியோகம் கொடுக்கவே கூடாது. சில ஜட்ஜுகளுக்கு ஜாதி வெறி அதிகமாய்த் தோன்றுவதை நான் கண்டிருக்கிறேன். ஜாதி வெறி கொண்ட உத்தியோகஸ்தர்களிடத்தில் நீதியும் நியாயமும் மாறித் தோன்றுகிறது. எனக்கு ஜாதியும் மதமும் இல்லை என்று உறுதி கூறுகிறவனுக்குத்தான் சர்க்காரில் உத்தியோகங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
– தொடரும்