சென்னை, நவ.23- மண்எண்ணெய்யை பயன்படுத்தி வெளிப்புற மோட்டார்களுடன் (ஓ.பி. எம்.) இயங்கக்கூடிய மீன்பிடி படகுகளுக்கு மாற்றாக திரவ பெட்ரோலிய வாயுவில் (எல்.பி.ஜி.) செயல்படும் மீன்பிடிப் படகுகளை மீனவர்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. சோதனை முயற்சியாக முதல்கட்டமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.21 கோடியே 90 லட்சம் மதிப்பில் 150 படகுகளுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒன்றிய மீன் வள கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் வாயிலாக சோதிக்கப்பட்டதில், மண்எண்ணெய் மோட்டார் 1.2 சதவீதம் கார்பன் மோனாக் சைடையும், எல்.பி.ஜி.மோட்டார் 0.32 சதவீதம் கார்பன் மோனாக்சைடையும் வெளியிடுவ தாக கண்டறிந்துள்ளனர்.
இந்த சோதனையில் எல்.பி.ஜி. மோட்டார் எரி பொருள் நுகர்வில் கணிசமான சேமிப்பையும் காட்டியது. 150 படகுகளுக்கு முதல் கட்டமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 25 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் 9.9 குதிரைத்திறன் (எச்.பி.) கொண்ட எல்.பி.ஜி. மோட்டார்களாக மாற்ற மானியம் வழங்க ரூ.25 லட்சத்தை அரசு அனுமதித்து இருக்கிறது.
இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:- சுற்றுச்சூழலை மாசுப்படுத்தக்கூடிய மண்எண்ணெயை ஒழிக்கவும், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு உள்ளிட்ட தூய்மையான எரிபொருட்களை கொண்டு வரும் யோசனையாக இந்த சோதனை திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. மண்எண்ணெய் மோட்டார் கடலின் காற்று மற்றும் நீர் ஆகிய இரண்டையுமே மாசுப்படுத்துகிறது. இது மீனவர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கிறது. எல்.பி.ஜி. மோட்டார்களை பாதுகாப்பாக கையாளுவது, இயக்குவது குறித்து மீனவர்களுக்கு பயிற்சியையும், அதற்கான ஆதரவையும் வழங்க இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.