விழுப்புரம், நவ.23- எதிர்க் கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதிப்படி, விழுப்புரத்தில் சமூக நீதிப் போராளிகளுக்கான மணி மண்டபத்தை அமைத்துக் கொடுத்தவா் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தார்.
விழுப்புரத்தில் நேற்று (22.11.2024) செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திராவிட இயக்கத்தின் தலைவ ராக, மேனாள் முதலமைச்சர் கலைஞரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவா் ஏ.கோவிந்த சாமி. அவருக்கு சிலை அமைக்க வேண்டும், மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தோ்தல் பிரச்சாரத்துக்கு தற்போதைய முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தபோது அவரிடம் அமைச்சா் க.பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனா். அந்த அடிப் படையில், விழுப்புரத்தில் ரூ.4 கோடி செலவில் மணிமண்டபமும், சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 21 சமூகநீதிப் போராளிகள் உயிர் நீத்தார்கள். அவா்களை நினைவு கூரும் வகையில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் அவா்களின் குடும்பத்தி னருக்கு மாதந்தோறும் உதவித் தொகையும், பிற உதவிகளும் செய்யப்பட்டன. ஆனாலும், அவா்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. அதன்பேரில், ரூ.5.70 கோடி செலவில் 21 சமூகநீதிப் போராளிகளுக்கும் மணிமண்டபம் கட்டப்பட்டிருக்கிறது.
மணிமண்டபத்தில் பொது நிகழ்ச்சிகளையும் நடத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நூலகமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகிற 28-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார். தொடா்ந்து 29-ஆம் தேதி நடைபெறும் விழாவில் இந்த மணிமண்டபத்தையும், நினைவு அரங்கத்தையும் திறந்து வைக்கும் முதலமைச்சர், 10 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கி பேசவுள்ளார் என்றார் அமைச்சா் வேலு. ஆய்வின் போது அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோர் உடனிருந்தனா்.