உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவர் சதீஷ் மஹானா உத்தரப் பிரதேசத்தின் பிரபல சாமியாரான ஜகத்குரு ராமாநந்தாச்சார்யாவைச் சந்திக்கச் செல்கிறார். அவரிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஹிந்துக்களுக்கு விரோதமாக நடக்கிறார்களா என்று ஆய்வு செய்ய அவரது மூத்த சீடர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார் அந்தச் சாமியார்.
பேரவைத் தலைவரான சதீஷ்மஹானா வும் சாமியாரின் உத்தரவிற்குத் தலையாட்டி, ‘‘சட்ட நிபுணர்களைக் கலந்தாலோசித்து முதல மைச்சருடன் பேசி உங்களது கோரிக்கையை நிறைவேற்ற வழி கோலுவோம்’’ என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் சாமியார்களுக்குரிய பணிகள் (கர்மகாண்ட்) என்று கூறி மாதத்தில் பல நாட்கள் கோவில் கோவிலாக சுற்றுகிறார்.
அவைத் தலைவரோ ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் நடவடிக்கையைக் கண்காணிக்க சாமியார் ஒருவரை நியமிக்கும் சிறப்புப் பதவியை (சமிக்ஷா அதிகாரி) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம் ஒரு கால கட்டத்தில் சமூகநீதிக்கு உத்தரவாதம் அளிக்கும் பூமியாக இருந்தது.
கான்ஷிராம் அவர்கள் ‘பகுஜன் சமாஜ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஆட்சி அதிகாரம் என்பது தாழ்த்தப்பட்டோர் –பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை மக்களின் கைகளில்தான் இருக்க வேண்டும் என்பதுதான் பகுஜன் சமாஜ் என்பதன் விளக்கமாகும்.
அந்த அடிப்படையில்தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாயாவதியை முதல் அமைச்சராக்கிக் காட்டினார்.
1995ஆம் ஆண்டு மாயாவதி முதலமைச்சராக இருந்தபோது தந்தை பெரியார் பிறந்த நாளை அரசு விழாவாக (பெரியார் மேளா) நடத்திக் காட்டினார்.
அந்தப் பகுஜன் சமாஜ் கட்சி அடிப்படையை மறந்து, ‘பகுஜன்’ என்பதை ‘சர்வஜன்’ என்றாக்கிப் பார்ப்பனர்களையும் ஊடுருவ விட்டதால் ஏற்பட்ட விளைவுதான் இன்று உ.பி. பார்ப்பனீயத்தின் வேட்டைக் காடாக உருவாகியுள்ளது.
450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதியை இடித்து மதவெறி பூமியாக்கி விட்டது.
சட்டப் பேரவைத் தலைவர் ஒரு சாமியாரைச் சந்தித்ததும், அந்த சாமியார் கேட்டுக் கொண்டபடி – சட்டமன்ற உறுப்பினர்கள் ஹிந்துக்களுக்கு விரோதமாக நடக்கிறார்களா என்பதை கண்காணிக்க சாமியார் ஒருவரை அதிகாரியாக நியமிக்கிறார்களாம்.
அந்த சாமியார் எப்படிப்பட்டவர் தெரியுமா?
சூத்திரர்களுக்குக் கல்வி சொல்லித் தரும் பிராமணர்கள் தீண்டத்தகாத பிராமணர்களாம்.
அந்த சாமியார் விக்லங் ஷிஜன் சன்ஸ்தன் மடத்தின் தலைவராம்.
முதலமைச்சரோ ஒரு சாமியார்! நாடு எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது பார்த்தீர்களா?
இவ்வளவுக்கும் இந்தியாவிலேயே பெரிய மாநிலம் உத்தரப்பிரதேசம்! அங்கு பெரும்பான்மையான மக்களோ – தாழ்த்தப் பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான் மையினரும்தான். ஆனாலும் ஆரியம் கொலு வீற்றிருக்கிறது. பகுஜன் மக்கள் சிந்திக்கட்டும்!