கேள்வி 1: சுயமரியாதை இயக்கத்தினால் பலன் அடைந்தவர்களின் வாரிசுகள் இன்று உயர்கல்வி, ‘வெள்ளைக்காலர்’ வேலைகளில் அமர்ந்துகொண்டு சுயமரியாதை இயக்கத்தின் தலைவர்களை அவதூறாகப் பேசுகிறார்களே?
– க.காளிதாசன், காஞ்சி
பதில் 1: இதில் நமக்கு வியப்பொன்றுமில்லை; தாயின் மடியையே தனது ‘பாரங்கள்’ என்று வர்ணிக்கும் ‘பெரிய மனிதர்கள்’ – வாழ்க நன்றி கொன்ற நாயகர்கள். அதுதான் தாய்மையின் தனிச் சிறப்பு – புரிகிறதா?
– – – – –
கேள்வி 2: பரோட்டா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மைதா மாவில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதாகவும், அதனை தவிர்க்க வேண்டும் என்றும் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ வாயிலாக விளக்கியுள்ளபோது, பரோட்டா எனும் உணவு பெரியார் திடலில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வழங்கப்படுகிறது என்பது ஏற்புடையதா?
– சீதாலட்சுமி, திண்டிவனம்
பதில் 2: இக்கேள்வியை, உணவு கொடுப்பவர்களின் கவனத்திற்கு என்சார்பிலும் வைக்கிறேன். – தவிர்ப்பது நல்லது (இனியாவது) – வாய்ருசி – உடற்கேடு – மறவாதீர்!
– – – – –
கேள்வி 3: மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமராக இருந்துவரும் பிரதமர் மோடி, “நாட்டை ஆளப் பிறந்ததாக நினைக்கிறது சோனியா குடும்பம்” என்று விமர்சனம் செய்யலாமா?
– எஸ்.நல்லபெருமாள், வடசேரி
பதில் 3: கண்ணாடி வீட்டிலிருப்பவர்களும் கல்லெறியும் விசித்திர அரசியல் யுகம் இது!
– – – – –
கேள்வி 4: மண முறிவுகள் பெருகுவதும் தந்தை பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி தானே?
– இ.ப.சீர்த்தி, காட்டாங்கொளத்தூர்
பதில் 4: சரியான காரண – காரியத்தோடு உள்ள மண முறிவுகள் – ஒருவகை. இரு சாராருக்கும் விடுதலை – சுதந்திர வாழ்வு என்பதால் அது வெற்றியே! பிடிக்காத நண்பர்கள், வேலை செய்ய விரும்பாத, முடியாத வேலைக்காரர்கள் எஜமானரிடமிருந்து கூட விலகிக் கொள்ளும் உரிமை இருக்கும்போது, வாழ்விணையர்கள் அந்த உரிமையை சரியாகப் பயன்படுத்துவது நியாயந்தானே!
– – – – –
கேள்வி 5: மக்களை பாதுகாப்பான மண்டபங்களுக்குச் செல்லச் சொல்லிவிட்டு, அங்கும் அவர்கள் மீது குண்டு வீசிக் கொல்வது நியாயமானதா? இஸ்ரேல் செய்து வருகின்ற இம்மாதிரி அட்டூழியங்களுக்குத் தீர்வு எதுவாய் இருக்க முடியும்?
– ஓவியர் மதி, சென்னை- 12
பதில் 5: போரற்ற – புதுஉலகமே இறுதியான நிரந்தரத் தீர்வு – மனிதநேயத்தை மறக்கடித்த கொடிய மதவெறியின் உச்சம் இந்த நவீன காட்டுமிராண்டித்தனம்!
– – – – –
கேள்வி 6: நாடு முழுவதும் ஹிந்துக்கள் பண்டிகையாக கொண்டாடப்படும் தீபாவளியை முன்னிட்டு பல நூறு கோடி ரூபாய்க்கு இறைச்சி விற்பனை, அரசுகள் இலக்கு நிர்ணயம் செய்து பல நூறு கோடிக்கு ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றதாக அதிகாரப்பூர்வ செய்திகள் படத்துடன் வெளிவருவது ஒரு புறம் இருக்க, மறுபுறம் பிரிட்டனில் தீபாவளியையொட்டி ஹிந்துக்களுக்கு பிரதமர் அளித்த பிரதமர் மாளிகை விருந்தில் இறைச்சி, மது வழங்கப்பட்டதால் தீபாவளி ‘புனிதம்’ கெட்டுவிட்டதாக எழுந்த எதிர்ப்பை அடுத்து பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தற்போது மன்னிப்பு கோரியுள்ளதே?
– மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில் 6: எல்லாம் எங்கும் ஓட்டு அரசியல். அங்கும் அதுவே – ‘மக்கள் எங்கும் ஒரே மாதிரி மக்களே’ என்ற ஆங்கிலப் பழமொழி நினைவுக்கு வருகிறதே!
– – – – –
கேள்வி 7: மருத்துவர்கள் நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சைகள் தோல்வியடையும்போது மருத்துவர்களைத் தாக்கி, மருத்துவமனைகளை சேதப்படுத்துவது எவ்வகையில் சரியானது?
– கல.சங்கத்தமிழன், செங்கை
பதில் 7: அசல் காட்டுமிராண்டித்தனமான காலித்‘தனம்’ – மருத்துவர்களும் மனிதர்கள் என்பதை மறந்துவிட்ட அய்ந்தறிவாளர்கள் – தாக்குபவர்கள்!
– – – – –
கேள்வி 8: விமானத்தைக் கண்டுபிடித்தது “ரைட்” சகோதரர்கள் இல்லை – பரத்வாஜ் முனிவர் என்று உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் கூறியிருக்கிறாரே?
– சூர்யா, தென்காசி
பதில் 8: எப்படி எப்பக்கத்தினால் சிரிப்பதோ தெரிய வில்லை. ஆளுநர்களின் அறிவு எவ்வளவு கூர்மையானது பார்த் தீர்களா? இப்படிப்பட்டவர்களுக்கு நோபல் பரிசுக்குப் போட்டியாக ஒரு ‘காவி கப்’ தரலாமே – ஆண்டுதோறும்!
– – – – –
கேள்வி 9: ‘திராவிட மாடல்’ ஆட்சி தொடர்வதற்கு ஏதுவாக 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் பரப்புரை எவ்வாறு இருத்தல் வேண்டும்?
– க.சிறீதேவி, சென்னை-82
பதில் 9: அதன் சாதனைகளை திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், துண்டறிக்கைப் பிரச்சாரம், மேடைப் பிரச்சாரம் வரை தொடர்ச்சியாக, வசவுகள் இன்றி – வம்பர்களுக்கு விளம்பரம் தராத மக்களை ஈர்க்கும் பிரச்சாரமாக இப்போதே துவங்கி செய்ய வேண்டும்.
கண்ணியமும், ஆதாரப்பூர்வச் செய்தி களும், மக்களைச் சிந்திக்க வைக்கும் செய்தி களின் கொத்தாகவும் இருப்பது அவசியம்.
– – – – –
கேள்வி 10: நூற்றாண்டு கண்ட சுயமரியாதை இயக்கம் ஏற்படுத்திய மறுமலர்ச்சிப் பணிகளைப் பற்றி பொதுவாக மக்கள் கருதுவது என்ன? அந்தப் பணிகளின் தொடர்ச்சியில் மக்கள் எதிர்பார்ப்பது என்ன?
– அ.லதா, சென்னை- 39
பதில் 10: புதிய சமூகம், புத்தாக்க எழுச்சி, புலப்படாத உண்மைகளை அவர்களுக்கு உணர்த்தல் – இவைகளே!