வி.சி.வில்வம்
ஜாதியை ஒழிக்க “கருஞ்சட்டை” அணிந்தவர்கள் கொடுத்த விலை கொஞ்ச நஞ்சமல்ல! கருஞ்சட்டை என்கிற போது, “கருப்புச் சேலை” அணிந்த மகளிரின் பங்கு அதைவிட மகத்தானது! ஆனால் அந்த மகளிரை நீங்கள் சந்தித்தால், சத்தமே இல்லாமல் அமைதியாக இருப்பார்கள். “நான் செய்தது சாதனை, புரட்சி”, என்கிற எண்ணமெல்லாம் அவர்களிடத்தில் இருக்காது. இதுவே வேறு இடத்தில், வேறு நாடுகளில் நடந்திருந்தால் “உலக சாதனை” என்கிற அளவில் பேசியிருப்பார்கள்!
ஆனால் பெரியார் கொள்கையில் “போகிற போக்கில்” நடந்த உலக சாதனைகள் அதிகம். 1957 இல் நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்டத்தில் மட்டுமே, “கீழடி” போன்று ஆவணங்கள் குவிந்துக் கிடக்கின்றன! தமது 19 ஆவது வயதில், அதுவும் கருவுற்றிருந்த நேரத்தில், 3 மாதங்கள் சிறை
சென்ற ஒரு வீராங்கனையை இந்த வாரம் சந்திப்போம்!
அம்மா வணக்கம்! தங்களின் பிறந்த ஊர் எது?
என் பெயர் எம்.எஸ்.வள்ளியம்மாள். 1939 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தேன். தற்போது 86 வயதாகிறது. எனது பெற்றோர் பெயர் காமாட்சி – பெருமாள். அப்போதே இருவரும் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள். கண்டி, பனாகொட (Panagoda) பகுதியில் வசித்தார்கள். 5 வயது இருக்கும் போதே, என் பாட்டி என்னைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். சென்னை இராயபுரத்தில் தம்பு (செட்டி) தெருவில் வசித்தோம். 8 ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன்.
பெரியார் கொள்கை உங்களுக்கு
எப்படி அறிமுகம் ஆனது?
தமிழ்நாட்டில் எனது தாய்மாமா வீட்டில்தான் வளர்ந்தேன். அவர் திராவிடர் கழகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சிறு வயது முதலே என்னையும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வார். அப்போதே மேடையில் கழகப் பாடல்கள் பாடியுள்ளேன். முதல் பாடலே இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துதான் பாடினேன்.
தொடர்ந்து ப.ஜீவானந்தம் அவர்களைத் தேர்தலில் ஆதரித்து, “வணக்கம் தோழரே!” என்கிற பாடலையும், “அச்சமில்லை அச்சமில்லை அச்சமில்லை தோழரே” என்கிற பாடலையும் பாடியுள்ளேன்.
இராஜாஜி ஆட்சியை எதிர்த்து, “அய்யய்ய என்னங்க, ஆட்சி முறை பாருங்க, சொல்லப் போனால் வெட்கங்க, நான் சொல்லி விடு(கி)றேன் கேளுங்க, ஆறு அவுன்சு அரிசியால் அவதிப்படுறோம் பாருங்க, இந்த வெட்கங்கெட்ட ஆட்சி முறை எப்போது தொலையும் கேளுங்க”, என்கிற பாடலும் பாடியுள்ளேன்.
தங்கள் இணையர் குறித்துக் கூறுங்கள்?
இணையர் பெயர் எம்.எஸ்.மணி. தந்தை பெரியார் அவர்கள்தான் 1953ஆம் ஆண்டு, இராயபுரத்தில் திருமணத்தை நடத்தி வைத்தார். எங்கள் திருமணம் தாலி மறுப்புத் திருமணமாக நடைபெற்றது. அப்போதிருந்தே நான் பூ, பொட்டு வைப்பதில்லை. என் இணையர் முழு பெயர் சுப்பிரமணியம். என் பெயர் வள்ளியம்மாள். இரண்டுமே கடவுள் பெயர் என்பதால், அதை வைத்துப் பெரியார் சில நிமிடங்கள் பேசினார். திருமணம் முடிந்த பிறகு இணையர் தம் பெயரை, எம்.எஸ்.மணி எனச் சுருக்கிக் கொண்டார். எங்கள் திருமணத்தில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டத் தலைவர் மு.பொ.வீரன், செயலாளர் தேனாம்பேட்டை டி.எம்.சண்முகம், வண்ணை நகர் பலராமன், தற்காப்புக் கலைஞர்
எஸ்.ஆர்.சாண்டோ, மயிலை சம்பந்தம் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
எனது இணையர் 8 ஆண்டுகள் இராணுவத்தில் பணி புரிந்தவர். விடுமுறைக்குத் தமிழ்நாடு வரும்போதெல்லாம், இயக்க நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவிடுவார்.
உங்களின் இயக்க ஈடுபாடுகள்
எந்த அளவில் இருந்தன?
கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது. அதற்கு முன்பு வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன். சென்ற வாரம் எங்கள் சம்பந்தி க.பார்வதி அவர்களின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஆசிரியர் அவர்கள் கூட சென்ற வாரம் தொலைப்பேசியில் பேசினார்கள். இன்றைக்கும் ஆசிரியருடன் பேசினால் மனதிற்கும், உடலிற்கும் புது உற்சாகம் வந்துவிடுகிறது.
1957இல் நடந்த சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்குபெற்று 3 மாதங்கள் வேலூர் சிறையில் இருந்தேன். அப்போது எனக்கு வயது 19. அந்தச் சமயத்தில் கருவுற்று இருந்தேன். அன்னை மணியம்மையார், நாகரசம்பட்டி விசாலாட்சி அம்மையார், பாவலர் பாலசுந்தரம் இணையர் பட்டம்மாள், அறிவுக்கொடி ஆகியோர் ஒன்றாக இருந்தோம். எனது இணையர்
எம்.எஸ்.மணி 9 மாதங்கள் தண்டனை பெற்று சென்னை மத்தியச் சிறையில் இருந்தார்.
கருவுற்ற நிலையிலும் 3 மாதங்கள்
சிறையில் இருந்தீர்களா?
ஆமாம்! நான் ஒரு சிறையில்! இணையர் ஒரு சிறையில்! நான் 3 மாதங்களில் வெளி வந்துவிட்டதால், அன்னை மணியம்மையார் அவர்கள் மீரான் சாகிபு தெருவில் இருந்த தம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார். அங்கு 3 மாதங்கள் இருந்தேன். அம்மாவுடன் இயக்க நிகழ்ச்சிகளுக்கும் சென்றுள்ளேன். கொள்கைகள் தொடர்பாக நிறைய பேசுவார்கள். சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற எனது விவரங்கள், தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்தப் போராட்டம் மட்டுமின்றி இராமர் பட எரிப்பு, தமிழ்நாடு நீங்கலாக தேசப்பட எரிப்பு, முரளி பிராமணாள் கபே உள்ளிட்ட போராட்டங்களிலும் கலந்துள்ளேன். வேறொரு போராட்டத்தில் ஒரு மாதம் சிறையில் இருந்தேன். ஒன்றரை வயதுடைய எனது மகன் என்னைச் சிறையில் பார்த்து கதறி அழுதான். சிறை நிர்வாகம் 15 நாளில் என்னை விடுதலை செய்துவிட்டார்கள். எங்களுக்கு இராவணன், காமராஜ், கவுதமன் என மூன்று மகன்கள். மூன்றுமே பெரியார் வைத்த பெயர்கள்தான். இந்திராதேவி என்கிற மகளும் இருக்கிறார்.
இராணுவத்தில் இருந்து வந்த பிறகு
உங்கள் இணையர் பணியில் ஏதும் இருந்தாரா?
ஆமாம்! “ராயல் என்ஃபீல்டு” என்கிற புல்லட் தயாரிக்கும் நிறுவனத்தில் 18 ஆண்டுகள் வேலை பார்த்தார். சில வடிவமைப்புகளும் (Design) அவர் செய்துள்ளார். தவிர தற்காப்புக் கலைகளான கராத்தே, குங்ஃபூ, சிலம்பம், வாள்வீச்சு, சுருள்கத்தி போன்றவையும் தெரிந்து வைத்தி ருந்தார். நான் சென்னை மாநகராட்சியில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்தேன். 1959இல் தொடங்கி, 1999இல் ஓய்வு பெற்றேன்.
இராயபுரம், கல்மண்டபம் பகுதியில் இருந்தபோது, 1988இல் எங்கள் மகள் இந்திராதேவிக்குத் திருமணம் நடைபெற்றது. அதற்கு அடுத்த நாளே எனது இணையர்
எம்.எஸ்.மணி அவர்கள் இறந்துவிட்டார்கள். ஒரு வாரம் முன்பு மாடு முட்டிய நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தார்கள். அது பலனின்றி இந்த இழப்பு ஏற்பட்டது. அந்நேரத்தில் ஆசிரியர் அவர்களும், மோகனா அம்மையாரும் வெளிநாட்டில் இருந்தார்கள். ஊர் திரும்பியதும் நேராக வீட்டிற்கு வந்து ஆறுதல் கூறினார்கள். அதன் பிறகு ஒரே வாரத்தில் ஆசிரியர் அவர்கள் படத்திறப்பு நிகழ்ச் சியைத் திடலில் ஏற்பாடு செய்தார்கள். அந்நிகழ்வை எப்போதும் என்னால் மறக்க இயலாது. சென்னை மாவட்ட உப தலைவராகவும்
எம்.எஸ்.மணி அவர்கள் இருந்தார்கள்.
இயக்க நினைவுகள் வேறு ஏதாவது இருக்கிறதா?
அரசு வேலைக்குச் சென்ற பிறகு போராட்டம், சிறை என்பது வாய்ப்பில்லை. எனினும் வாழ்க்கை முழுவதுமே இயக்கம் சார்ந்தவைதான். எங்கள் குடும்பத்தின் திருமணங்களை ஆசிரியர் அவர்கள்தான் நடத்தி வைத்தார்கள். ஒரு திருமணத்திற்கு வர இயலாத நிலையில், வாழ்த்துச் செய்தியை “கேசட்” வாயிலாகப் பதிவு செய்து அனுப்பினார்கள். அந்தத் திருமணத்தை கோ.சாமிதுரை அய்யா நடத்தினார்கள். மற்றொரு திருமணத்தை க.பார்வதி அவர்கள் நடத்தித் தந்தார்கள்.
மிசா காலத்தில் இணையரை தேடி காவல்துறையினர் வந்தார்கள். அவர் இல்லை என்றதும், என்னைக் கடற்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர். பிறகு அன்னை மணியம்மையார் அவர்கள் சொன்னதன் பேரில் என்னை விட்டுவிட்டார்கள்.
அதேபோல மிசா காலத்தில் எங்குமே கூட்டம் நடத்தக் கூடாது. கடுமையான சட்டங்கள் இருந்தன. நாங்கள் எங்கள் பேத்தி பிறந்தநாள் என்கிற அளவில், அதைக் கூட்டமாகவே ஏற்பாடு செய்து, தோழர்கள், நண்பர்களை அழைத்திருந்தோம். அந்நிகழ்வில் அன்னை மணியம்மையாரும், ஆசிரியர் கி.வீரமணி அய்யாவும் கலந்து கொண்டு பேசினார்கள்.
தஞ்சாவூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கப் பொன்விழா மாநாட்டில் பாராட்டுக் கேடயமும், 1992 பிப்ரவரி மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாடு மற்றும் நீதிக்கட்சி பவள விழா மாநாட்டில், ஜாதி ஒழிப்பு வீரருக்கான பாராட்டுச் சான்றிதழும், 10.03.2007 சென்னை, திருவொற்றியூரில் நடைபெற்ற பெண்கள் விடுதலை மாநாட்டில், “பெரியார் தொண்டர்களுக்கு (மகளிர்) பாராட்டுச் சான்றிதழும் பெற்றேன். இவை மூன்றுமே எனக்கு ஆசிரியர் கொடுத்தது!
ஆசிரியர் அவர்கள் தொலைப்பேசியில் பேசியதாகக் கூறினீர்களே?
ஆமாம்! அய்யா அவர்கள் எப்போது சந்தித்தாலும் கை கொடுத்து, நலம் விசாரிப்பார்கள். உண்மையான அக்கறை என்பதற்கு ஆசிரியர் அவர்கள்தான் எடுத்துக்காட்டு! பல கடினமான நிலைகளைக் கடந்து, இந்த இயக்கத்தை ஆசிரியர் வளர்த்து வைத்துள்ளார்! இன்னும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார்! திராவிடர் கழகத்தின் கொள்கை உணர்வு பல மடங்கு உயர்ந்துள்ளது” எனத் தம் 86ஆவது வயதிலும் மிகச் சரியாகக் கணித்துக் கூறுகிறார்” எம்.எஸ்.வள்ளியம்மாள் அவர்கள்!