ஜாதி மறுப்பு இணையேற்பு விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
திராவிட இயக்கங்கள் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி அதனை ஊக்குவித்ததன் காரணமாக தமிழ்நாட்டில் ஏராளமான மருத்துவர்கள், அறிஞர்கள், பொறியாளர்கள் பெருகி வளர்ந்து உள்ளமை தந்தை பெரியாரின் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அந்த வகையில் சுயமரியாதை வீரர் பட்டுக்கோட்டை முத்துக்குமாரசாமி அவர்களின் மகனும் தொழிலதிபருமான அருள்நாயகம் – கிருஷ்ணா ஆகியோரின் மகள் மருத்துவர் அருள் எழில் MBBS,MS மற்றும் புதுச்சேரியைச்சேர்ந்த வீரராஜ் – உஷா என்கிற சாவித்திரி ஆகியோரின் மகன் மருத்துவர் சசிராகவன் MBBS, MS ஆகியோரின் இணையேற்புவிழா 17.11.2024 அன்று காலை 9.30 மணி அளவில் சென்னை அய்.டி.சி. சோழா ஓட்டலின் ராஜேந்திரா அரங்கில், சிறப்பாக நடைபெற்றது.
திராவிடர்கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று பாராட்டுரை வழங்கி மணவிழாவினை நடத்திவைத்தார்.
வாழ்த்துரையில் பட்டுக்கோட்டை சுயமரியாதை வீரர் முத்துக்குமாரசாமி அவர்களது அருந் தொண்டையும், அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு அவர் செய்த உதவிகளையும், பெரும் ஆலமரம்போல் வாழ்ந்த அவரது சிறப்புகளையும் எடுத்துக் கூறினார். மேலும் மணமக்கள் இருவரும் மருத்துவர்கள், அதிலும் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், அவர்களது வாழ்வை முடிவு செய்யும் ஆற்றல் பெற்றவர்களாக வளர்ந்திருக்கிறார்கள், அதைப் போலவே மணவிழாவிற்கு வந்திருக்கும் இளைய தலைமுறையினர் பலர் உயர்நிலைப் பதவிகளிலும் தொழில் துறையிலும் சிறப்பாகப் பணி செய்து நல்ல அளவுக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி இதுதான் இந்த இயக்கத்தின் நோக்கமும் சாதனையும் என்று எடுத்துரைத்தார். மேலும் இந்த இணையேற்பு விழா என்பது ஜாதி மறுப்பு விழாவாக மணமக்களால் முடிவு செய்யப்பட்டு பெற்றோர்களால் நடத்தி வைக்கப் படுவது பாராட்டுக்குரியது என்று அதன் சிறப்பையும் எடுத்துரைத்தார். மணமகனின் பெற்றோர் இந்த சுயமரியாதைத் திருமண முறையை ஏற்று ஒத்துழைப்பு வழங்கியதைக் குறிப்பிட்டு அவர்களுக்கு சிறப்பாகப் பாராட்டுகளைத் தெரிவித்தார். பட்டுக் கோட்டைப் பகுதியில் இருந்து மண விழாவிற்கு வந்திருந்த பெரியவர்கள் பலர் ஆசிரியரிடம் பழைய செய்திகளைக் குறிப்பிட்டு அன்பைத் தெரிவித்தது நெகிழ்ச்சியாக அமைந்தது .
இந்த இணையேற்பு விழாவில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, இசைவாணர் சீர்காழி கோ.சிவசிதம்பரம், திராவிட முன்னேற்றக் கழகத்தைச்சேர்ந்த பாலவாக்கம் சோமு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் விழாவில் பங்கேற்றார். மணமகளின் தந்தை அருள்நாயகம் வரவேற்புரையாற்றினார். கட்டடப் பொறியாளர் அருள் மலர் நன்றி உரை ஆற்றினார். கலைமாமணி சந்திரசேகர் அவர்கள் விழாவைத் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் அவர்கள் அரங்கிற்குள் நுழையும் முன்னர் கேசவன் என்ற தோழர் வந்து ஆசிரியரிடம் தன்னை “அய்யா நான் குகா பிராசஸ் ‘Guga Process’ நிறுவனரின் மகன். இளம் வயதிலேயே பெரியார் திடலுக்கு என் தந்தையுடன் வருவேன். பலமுறை உங்களை சந்தித்திருக்கிறேன்” என்று கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார். மாற்றுத்திறனாளியும் சிறந்த ஓவியருமான தன் மகன் ஜனார்த்தனனை ஆசிரியருக்கு அறிமுகம் செய்தார்.ஆசிரியர் அவர்கள் மிக மகிழ்வுடன் அவரது கரங்களைப் பற்றி நலம் விசாரித்தார். உடனிருந்த தோழர்களிடம் அவர்களது குகா பிராசஸ் நிறுவனத்தில்தான் ‘குடி அரசு’ இதழும் தொடக்க காலத்தில் விடுதலை ஏட்டையும் அச்சடிப்பதற்கான தயாரிப்புப் பணிகள் நடைபெற்றன என்றும் அவரது தந்தையார் தந்தை பெரியாரிடம் மிகுந்த பற்றுடன் இருப்பார் என்பதையும், ஆனால் நெற்றி நிறைய திருநீறுடன்தான் வருவார் என்றும் நினைவுபடுத்திக் கூறியது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இம்மணவிழாவிற்குப் பட்டுக்கோட்டையில் இருந்து வந்திருந்த ஒரு சகோதரி தன் தந்தையின் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு ஆசிரியரை நலம் விசாரித்தார். அந்த நொடியே ஆசிரியர் அவர்கள் ‘‘ஆம் அவர் கொள்கை வீர்ர் மாமுண்டியின் உறவினர் அல்லவா?’’ என்று கேட்டு பல்லாண்டுகளுக்கு முன்பு சந்தித்தவர் களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டார்.
கல்வியால் உயர்ந்து பல் வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழர்களின் குடும்பங்கள் இணைந்து நடத்திய மருத்துவர்கள் அருள் எழில் – சசிராகவன் ஆகியோரின் இணையேற்பு விழா ஒரு மணி நேரத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது.