சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஏதோ ஒரு ரகசிய ராஜியின்மேல் நிறுத்தப்பட்டதாகவும் சீக்கிரத்தில் எல்லாப் பிரஜைகளுக்கும் அனுகூலமான முடிவை திருவாங்கூர் அரசாங்கத்தாரால் நடத்தி வைக்கப்படும் என்றும் பிரஸ்தாபம் வந்தது. ஆனால் ஏறக்குறைய சத்தியாக்கிரகம் நிறுத்தப்பட்டு இரண்டு மாதத்திற்கு மேலாகியும் இன்னமும் அதைப்பற்றி ஒரு விபரமும் தெரிவதற்கில்லாமல் கிணற்றில் கல்லு போட்டது போல் மூடுமந்திரமாயிருக்கிறது. கமிஷனர் பிட் துரை மிகவும் நல்லவர். எல்லாருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை உள்ளவர். ஆனால் திவானோ கிறிஸ்துவராயிருந்தாலும் மலையாள பிராமணர்கள் தயவைப் பெற்று புகாரில்லாமல் காலந்தாட்டிவிட்டுப் போகலாம் என்கிற ஆசையுள்ள வராம். இவர்களின் நிலைமையை நாம் கவனித்துக் கொண்டிருப்பது சத்தியாக்கிரகத்துக்கு நீதி செய்த தாகுமா? ஆதலால் சத்தியாக்கிரகத்தை மறுபடியும் துவக்கும்படி வேண்டுகிறோம்.
குடிஅரசு – வேண்டுகோள் – 23.05.1926