காவி நிறம், சமஸ்கிருதப் பெயர் திணிப்பு வழியில் மற்றுமொரு ஹிந்துத்துவ அடையாளம் திணிக்கப் பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி தனது புதிய ஓடிடி செயலியான ‘வேவ்ஸ்’ என்பதை 20.11.2024 அன்று அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓடிடியின் மூலம் பயனர்கள் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் பல்லாண்டுகளாக ஒளிபரப்பான பழைய நிகழ்ச்சிகளை 40 பிரபல அலை வரிசைகளில் நேரலையில் காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஓடிடியின் சின்னம் திரிசூல வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்ெகனவே அரசு தொலைக்காட்சியின் சின்னத்தை காவி வண்ணத்தில் மாற்றி உள்ளார்கள். அகில இந்திய வானொலி மீண்டும் ஆகாஷ் வாணியாக மாற்றப்பட்டுள்ளது. அதே போல் எங்குமே அரசு நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்கு சமஸ்கிருதப் பெயர்கள் சூட்டப்பட்டு வருகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் பல இடங்களில் அரசு விளம்பரங்களில் ‘ஓம்’ என்ற எழுத்து பின்னணியில் இருப்பது போல் அமைக்கப்படுகிறது. அரசுக் கட்டடங் களுக்கெல்லாம் காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரச்சார் பாரதி ஓடிடி நிறுவனத்தின் சின்னம் திரிசூலவடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
அக்பர்பூர் மட்டுமல்லாமல் உபி.யில் உள்ள .அசம்கார், ஷாஜஹான்பூர், காசியாபாத், ஃபிரோசாபாத், ஃபரூக்காபாத் மற்றும் மொரதாபாத் போன்ற பகுதிகளின் பெயர்களை மாற்றுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முகல்சாராய் மாவட்டம் தீனதயாள் உபாத்யாய் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அலிகரின் மாவட்டத்தின் பெயரை ஹரிகர் என மாற்றுவதற்கான ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது.
ஃபைசாபாத் என்பதை அயோத்தியா எனவும், அலகாபாத் மாவட்டத்தின் பெயரை பிரயாக்ராஜ் எனவும்,
டில்லியில் அவுரங்கசீப் பெயரில் உள்ள சாலையை அப்துல்கலாம் என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர்.
ஒன்றிய அரசின் பிரசார் பாரதி தனது சின்னமாக திரிசூலத்தை வடிவமைத்துள்ளது எந்த வகையில் சரியானது?
ஆர்..எஸ்.எஸின் துணை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய ஆயுதம் திரிசூலம் – பொது மக்களுக்கும் அதை வழங்குவார்கள்.
திரிசூலத்தின் ஒரு சூலம் முஸ்லிம்களையும், இன்னொரு சூலம் கிறித்தவர்களையும் மூன்றாவது சூலம் மதச் சார்பின்மை பேசுபவர்களையும் கிழிக்கும் என்பதுதான் அவர்களின் விளக்கம்.
இதை ஓர் அரசு நிறுவனத்தின் அடையாளமாக ஆக்கி இருப்பது – அசல் குரூரமான பாசிச புத்தி அல்லாமல் வேறு என்னவாம்?
இந்தியா என்று சொல்லக் கூடாது என்றும், பாரத் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார்கள். குடியுரிமை சட்டம் என்ற பெயரால் முஸ்லிம்களை வெளியேற்றத் துடிக்கிறார்கள்.
காஷ்மீர் இந்தியாவோடு இணைவதற்கு வைக்கப்பட்ட நிபந்தனையின்படி அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 370ஆம் பிரிவைக் கிழித்தெறிந்து விட்டார்கள்.
யூனியன் பிரதேசத்தை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கும் ஒரு கால கட்டத்தில் ஏற்கெனவே மாநிலமாக இருந்த காஷ்மீரை மூன்று துண்டுகளாக்கி யூனியன் பிரதேசமாக சீர்குலைத்து விட்டார்கள்.
ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த கே.எஸ். சுதர்சன் சொல்லவில்லையா?
ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ணன் பகவான் ஆகியோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்! (‘தினமணி’ – 16.10.2000) என்று கூறியதுண்டே!
சர்வம் காவிமயம் – எச்சரிக்கை! எச்சரிக்கை!!