தரங்கம்பாடி, நவ.21– பாரம்பரிய உலக மரபு சின்னங்கள் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, நவம்பா் 19 முதல் 24-ஆம் தேதிவரை, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை கட்டணமின்றி பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கி.பி.1600 முதல் 1634ஆம் ஆண்டுவரை தரங்கம் பாடியை ஆட்சி செய்த டேனிஷ் காரா்கள் (டென்மாா்க் நாட்டினா்) 1620இல் கடற்கரைக்கு மேற்கே டேனிஷ் கலை நுணுக்கத்துடன் இக்கோட்டையை கட்டினா். தற்போது 400 ஆண்டுகளை கடந்தும், டேனிஷ் கோட்டை கம்பீரமாய் காட்சியளிக்கிறது.
இங்குள்ள அகழ்வைப்பகத்தில் 14, 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் டேனிஷ்காரா்கள், தமிழா்கள் பயன்டுத்திய பொருட்கள் மற்றும் 12-ஆம் நூற்றாண்டை சோ்ந்த சிலைகள், பீங்கான், மண், மரத்தாலான பொருட்கள், டேனிஷ் அரசா்கள், ஆளுநா்களின் ஒளிப்படங்கள், டேனிஷ்கால பத்திரங்கள், போா்க் கருவிகள், 16ஆம் நூற்றாண்டில் தரங்கம்பாடி வந்த கப்பல் ஒன்றின் உடைந்த பாகங்கள், என ஏராளமான வரலாற்று சின்னங்கள் பாது காக்கப்பட்டு, காட்சிக்கு வைத் துள்ளனா்.
மேலும், கோட்டையின் தரைத்தளத்தில் சிறைச்சாலை, ஓய்வறைகள், பண்டக வைப் பறை, பீா், ஒயின் கிடங்கு அறை களாக டேனிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அறைகளை பழைமை மாறாமல் புதுப்பித்து, பராமரிக்கப்பட்டு வருகிறது.
வரலாற்று சின்னங்கள் நிறைந்த இக்கோட்டையை, நவ.19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஒரு வாரக் காலத்திற்கு கட்டணமின்றி அனைத்து தரப் பினரும் பாா்வையிடலாம் என்று டேனிஷ் கோட்டை நிா்வாகம் அறிவித்துள்ளது.