உலக மக்களை அச்சுறுத்தக்கூடிய மிகக் கொடிய நோய்களில் ஒன்று புற்றுநோய். இதில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று நுரையீரல் புற்றுநோய். இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது என்பது சற்று சிரமமான காரியம் தான். ஆனால், கண்டறிந்து விட்டால் விரைவாக சிகிச்சை செய்து நோயாளியைக் காப்பாற்றி விட முடியும்.
நாம் மூச்சை வெளிவிடும் போது அதில் வெளிப்படுகிற ஒருவித வேதிப் பொருளை வைத்து நுரையீரல் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிய முடியும் என்று சீனாவைச் சேர்ந்த ஜிஜியாங் பல்கலை கூறியுள்ளது.
நம் உடலில் கொழுப்பானது உடைக்கப் பட்டுச் சக்தியாக மாற்றப்படும் போது, அய்சோப்ரின் என்னும் வேதிப்பொருள் வெளியாகும். இது நாம் விடும் மூச்சில் கலந்து உடலை விட்டு வெளியேறி விடும். இதனுடைய அளவு குறைவாக இருந்தால், நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பதற்கான வாய்ப்பு உண்டு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த வேதிப்பொருள் களைக் கண்டறிவது அவ்வளவு சுலபமான வேலை இல்லை. இது தொடர்பான நீண்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள் கடைசியில் பிளாட்டினம், இண்டியம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்கள் கலந்த ஒரு உணரியை (சென்சாரை) உருவாக்கினர். இது மிகக் குறைந்த அளவு வெளியேறுகின்ற அய்சோப்ரினைக் கூடக் கண்டறிந்து விடும்.
விஞ்ஞானிகள் 13 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களில் அய்ந்து பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக் கப்பட்டவர்கள். இவர்களின் வெளியிடும் மூச்சை சென்சார் கொண்டு ஆராய்ந்த போது, நுரையீரல் புற்றுநோய் உள்ளவர் களை விட இல்லாதவர்களுக்கு அதிகமான அய்சோப்ரின் வெளியாவது தெரிந்தது.
இந்த உணரியை (சென்சாரை) மேலும் செம்மைப்படுத்தி, நவீனமயமாக்கி, எளிமையான ஒரு கருவியாக வடிவமைப் பதற்கான முயற்சி நடந்து வருகிறது.
அவ்வாறு உருவாக்கப்பட்டு விட்டால் நுரையீரல் புற்றுநோயை, பெரிய பொருள் செலவு இல்லாமல், நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் மிகச் சுலபமாகக் கண்டறிந்து விடலாம்.