சென்னை, நவ.21– சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மய்யத்தில் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடக்கிறது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கும் விழா மற்றும் சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா அறிமுக நிகழ்ச்சி 19.11.2024 அன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி, பன்னாட்டு புத்தகத் திருவிழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ளவர்த்தக மய்யத்தில் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவித்தார்.
மேலும் டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருதுகள், 38 நூலகர்களுக்கு கையடக்க கணினியும், மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட 17 வாசகர் வட்டங்களுக்கு நூலக ஆர்வலர் விருது, நற்சான்றிதழ்களை வழங்கினார்.
சாதனை
சென்னை மாவட்டத்தில் வீட்டில் சொந்தமாக நூலகம் அமைத்து சிறப்பாக பராமரித்து வரும் நாவலர் சீ.நாராயணனுக்கு சொந்த நூலகங்களுக்கான விருதையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது பள்ளிக்கல்வித்துறை செயலா ளர் சோ.மதுமதி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி, பொதுநூலக இயக்குநர் பொ.சங்கர், இணை இயக்குநர் சங்கர சரவணன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். சென்னை பன்னாட்டு புத்தக திருவிழா தேதியை அறிவித்த பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
1,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
2023ஆம் ஆண்டு நடத்தப் பட்டமுதலாவது பன்னாட்டு புத்தகத் திருவிழாவில், 24 நாடுகள் பங்கேற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2024ஆம் ஆண்டில் 40 நாடுகள் பங்கேற்று 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. 2025இல் 50 நாடுகளில் 1,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்திட திட்டமிட்டு இருக்கிறோம். -இவ்வாறு அவர் கூறினார்.
நள்ளிரவிலும் சாமி கும்பிட்ட மனைவி மீது பெட்ரோல் ஊற்றிய விவசாயி இருவரும் தீயில் கருகினர்
சென்னை, நவ. 21- திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி பழங்கனாங்குடி சாலை ஹேப்பி நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (56) இவரது மனைவி ஹேமா பிந்து (50). இவர்களுக்கு குணசேகர் (20), குருசாமி (20) என இரு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் பொறியியல் படித்து வருகின்றனர். மகள் ஹர்சினி தனியார் மருத்துவ நிறுவனத்தில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார்.
இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹேமா பிந்துவிற்கு பக்தி மார்க்கம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் அடிக்கடி வீட்டில் அமர்ந்து பூஜை அறையில் சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இது ராஜேந்திரபிரசாத்திற்கு பிடிக்காமல் போய் உள்ளது. இதனிடையே 19.11.2024 அன்று இரவு 11 மணி அளவில் ஹேமா பிந்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்ததை பார்த்து ஆத்திரம் அடைந்த ராஜேந்திர பிரசாத் வீட்டில் வாகனத்திற்காக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அவர்களின் மீது ஊற்றி உள்ளார்.
அப்போது சாமி அறையில் எரிந்து கொண்டிருந்த தீப விளக்கில் பெட்ரோல் பட்டு அவர்கள் மீது தீ பரவி உள்ளது. இதில் ஹேமா பிந்து மீது தீ பரவியதால், அவரைக் காப்பாற்ற முயன்ற மகன்கள் குணசேகர், குருசாமி ஆகியோருக்கு சிறிய அளவில் தீக்காயமும், பெட்ரோலை வீசிய ராஜேந்திர பிரசாத்திற்கு பெரிய அளவில் தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. தீக்காயம் அடைந்த நான்கு பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஹேமா பிந்தவும், ராஜேந்திர பிரசாத் ஆபத்தான நிலையில் உள்ளனர். இச்சம்பவம் குறித்து நவல்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.