வடக்குத்து, நவ.21- கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024 அன்று மாலை 6 மணியளவில் வடக்குத்து பெரியார் படிப்பகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்ட ப.க. தலைவர் வீ.வெங்கடேசன் தலைமை தாங்கினார், மாவட்ட ப.க. செயலாளர் வி.அருணாச்சலம் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட கழகத் தலைவர் சொ.தண்டபாணி, கழக காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் நா.தாமோதரன், மாவட்ட கழக செயலாளர் க.எழிலேந்தி, மாவட்ட கழக அமைப்பாளர் சி.மணிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கோ.வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இரா.பெரியார்செல்வம் பேசுகையில், பகுத்தறிவாளர் கழகத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கடலூர் மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக அமைப்பை வலுப்படுத்துவது, அவ்வப்போது உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவது, திருச்சியில் டிசம்பர் மாதம் 28,29 ஆகிய தேதிகளில் நடைபெறும் பகுத்தறிவாளர்கள் மாநாட்டிற்கு கடலூர் மாவட்டத்தில் இருந்து தனிப்பேருந்து மூலம் பல துறைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை ஒருங்கிணைத்துச் செல்வது குறித்தும் உரையாற்றினார்.
மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வி.மோகன் பேசுகையில், பகுத்தறிவாளர் கழகம் தொடங்கப்பட்டதன் நோக்கம், செயல்பாடுகள், மாதந்திரக் கூட்டம் எப்படி எளிமையாக நடத்துவது குறித்தும் விளக்கி, கடலூர் மாவட்டத்தின் சிறப்பான செயல்பாடு களான ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடத்தியது, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழியாக பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டி நடத்தியது குறித்து வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வீ.வெங்கடேசனிடம் வழங்கினார். மாவட்ட ப.க. செயலாளர் வி.அருணாச்சலம் இம்மாநாட்டில் ‘‘பெண்களும் மூடநம்பிக்கையும்’’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்பித்தமைக்கு வாழ்துகளை தெரிவித்துக் கொண்டார்.
மற்ற தோழர்களையும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க கேட்டுக் கொண்டார்.
‘‘இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 13 ஆவது மாநாடு திருச்சி யில் நடைபெறுவதையொட்டி அதற்கு தோழர்கள் எவ்வாறு தயாராவது? நிதி வசூல் செய்வது எப்படி? மாநாட்டிற் கான செலவினங்கள், மாநாட்டிற்கு வருகை புரியும் தோழர்களுக்கு செய் யப்படும் முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.
நிறைவாக மாநில இளைஞரணி கழக துணைச் செயலாளர் கோ.வேலு நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் பெரியார் வீர விளையாட்டு கழகத் தலைவர் இரா.மாணிக்கவேல், கம்மாபுரம் ஒன்றிய கழகத் தலைவர் நா.பாவேந்தர் விரும்பி, மருவாய் கழகத் தோழர் எ.திரு நாவுக்கரசு, பெரியார் படிப்பக நூலகர் இரா.கண்ணன், கே.நாகப்பன், கழக மகளிரணி தோழர் பெ.சுமலதா, பெரியார் பிஞ்சுகள் பெ.அறிவுப்பொன்னி,பெ.ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.