தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள்
சென்னை, நவ.21 நேற்று (20.11.2024) நடைபெற்ற தி.மு.க. உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் மீனவர் நலன், ஒன்றிய அரசின் நிதிப் பகிர்வு மொழித் திணிப்புக்குக் கண்டனம் உட்பட ஆறு தீீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், நேற்று (20.11.2024) தி.மு.க. உயர்நிலைச் செயல் திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் வருமாறு:-
ஒன்றிய அரசுக்குக் கண்டனம்
தமிழ் உள்ளிட்ட மாநில மொழி களைப் புறந்தள்ளி ஹிந்தி மாதம் – வாரம் என விழா எடுப்பது, நாடு முழுவதும் வலியுறுத்தப்பட்டு வரும் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் காலந்தாழ்த்துவது, சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் வக்ப் வாரிய திருத்தச் சட்டம், நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல், மக்கள் உயிரைப் பறிக்கும் தொடர் ரயில் விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது, சமக்ர சிக்ஷா போன்ற திட்டங்களின்கீழ் மாநில அரசுக்கு வரவேண்டிய நிதியை விடுவிக்காமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாதிப்புக்குள்ளாக்குவது, அரசியல் சட்டம் அளித்துள்ள மாநிலங்களுக்கான அதிகாரங்களையும் அபகரிப்பது, அவசர கதியில் கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்கள், நிதி ஒதுக்கீட்டில் – பேரிடர் நிதி வழங்குவதில் பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளிடம் காட்டும் பாராமுகம், ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் விதமாக நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி குறைப்பு, இளைஞர்களைத் திண்டாட வைக்கும் 9.2 விழுக்காட்டிற்கு மேலான வேலைவாய்ப்பின்மை, பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியின மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையில் மண்டல் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப் பட்ட இடஒதுக்கீட்டினை ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் முழுமையாகச் செயல்படுத்தாமல் இருப்பது உள்ளிட்ட சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத – மக்கள் விரோத – அரசியல் சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு இந்த உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறது.
2014 தேர்தலுக்கு முன்னதாகக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் பத்தாண்டுகளாக நிறைவேற்றாமல் – அதற்கான எந்த முன்முயற்சியும் எடுக்காமல் மந்த நிலைமையில் ஒன்றிய அரசு இருக்கிறது. இந்திய நாட்டின் அனைத்துத் தார்மீக அறநெறி – அரசியல் சட்டக் கோட்பாடுகளையும் மதிக்காமல், தங்களது வகுப்புவாதச் சிந்தனைகளை மட்டும் செயல்படுத்தும் அரசாக பா.ஜ.க. அரசு இருக்கிறது. இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் சிந்தனைகளைத் தள்ளி வைத்து, இந்தியாவின் அனைத்துத் தர மக்களுக்கும் குறைந்தபட்ச நன்மைகளைச் செய்யும் செயல்களை மூன்றாவது முறை மக்களால் தனிப் பெரும்பான்மை வழங்கப்படாத தேர்தல் முடிவுகளுக்குப் பின்னராவது செய்ய வேண்டும்.
மீனவர்கள் நலன்களைக் காப்பீர்!
இலங்கையில் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தலும், இந்த மாதம் நாடாளுமன்றத் தேர்தலும் நடை பெற்று அதிபர் அனுர குமார திச நாயக தலைமையில் – மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட பெரும் பான்மையுடன் ‘தேசிய மக்கள் சக்தி கட்சி’ கூட்டணியின் புதிய அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
தமிழ்நாட்டு மீனவர்கள் கைது, படகு பறிமுதல், அபரிமிதமான அபராதத் தொகை, சிறைத் தண்டனை, மீனவர்கள்மீது தாக்குதல் ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இந்த நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையிலும், மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடும் வகையிலும் இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசிடம் இப்போதாவது ஒன்றிய பா.ஜ.க. அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கைச் சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யவும், இலங்கைக் கடற்படை பறிமுதல் செய்துள்ள படகுகளைத் திரும்ப பெறவும், ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இலங்கைத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இலங்கையின் புதிய அரசிடம் வலியுறுத்தி உறுதி செய்ய வேண்டும்.
50% நிதிப் பகிர்வு தேவை
மாநிலங்களின் அதிகாரத்திற்காகக் குரல் கொடுத்த முதல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அந்த வழியில் நின்று தற்போது 16-ஆவது நிதிக் குழுவிடம் மாநில நிதி உரிமைக்காக ஆட்சி சார்பிலும், கட்சி சார்பிலும் வலுவான வாதங்களை எடுத்துவைத்துள்ள தி.மு.க. தலைவர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு இந்தக் குழு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
‘ஒன்றிய வருவாயில் மாநில அர சுக்கு 50 விழுக்காடு நிதிப் பகிர்வை அளிக்க வேண்டும், ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் திட் டங்களுக்கு 50 விழுக்காடு நிதியை ஒன்றிய அரசு தர வேண்டும்’ என்பது உள்ளிட்ட ஆணித்தரமான கருத்துக்களை எடுத்து வைத்து – இன்றைக்கு 16-ஆவது நிதிக்குழுவின் தலைவர் “தமிழ்நாடு அரசின் சார்பில் Masterclass Presentation செய்யப்பட்டிருக்கிறது” என முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான நிர்வாகத் திறன்மிக்க அரசைப் பாராட்டியிருப்பதைப் பெரு மிதத்துடன் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது. முதலமைச்சரின் கோரிக்கைகளை வழிமொழிந்த அனைத் துக் கட்சிகளுக்கும் இந்தக் கூட்டம் நன்றி செலுத்துகிறது.
தமிழ்நாட்டின் கோரிக்கைகள்
16-ஆவது நிதிக்குழுவின் அறிக்கையில் முழுமையாக இடம்பெற வேண்டும் என்றும், அதனை ஒன்றிய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.