பிரிட்டனில் தீபாவளி விருந்தின் போது அசைவ உணவு மற்றும் மது பரிமாறப்பட்டதற்கு அந்நாட்டு பிரதமர் அலுவலகம் கடந்த வெள்ளிக்கிழமை மன்னிப்புக் கோரியது.
லண்டனில் அந்நாட்டு பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தில் கடந்த அக்.29-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை விருந்தளிக்கப்பட்டது. இதில் அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது விருந்தில் அசைவ உணவு மற்றும் மது பரிமாறப்பட்டதற்கு அந்நாட்டில் உள்ள சில ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தீபாவளிப் பண்டிகை தூய்மை மற்றும் பக்தியை வலியுறுத்துவதாகவும், அந்தப் பண்டிகையின்போது சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு, கட்டாயம் மதுவை தவிர்ப்பதே பாரம்பரிய வழக்கம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் சர்ச்சை ஏற் பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டின் இந் திய வம்சாவளி எம்.பி. சிவானி ராஜா பிரதமர் கியெர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து அந்த நிகழ்வுக்கு அந்நாட்டு பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை மன்னிப்பு கோரியது.
விருந்தில் அசைவு உணவு மற்றும் மது பரிமாறப் பட்டது குறித்து நேரடியாகக் குறிப்பிடாமல், பிரதமர் அலுவலக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித் ததாவது: பிரிட்டனை சேர்ந்த ஹிந்து, சீக்கிய மற்றும் சமண சமூகத்தினர், பிரிட்டனின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு தீபாவளிப் பண்டிகை விருந்தின்போது பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் மரியாதைசெலுத்தினார். அந்தநிகழ்ச்சியில் நடைபெற்ற தவறுக்கு பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோருகிறது. இனி அந்தத் தவறு நடக்காது என்றார்.
-தினமணி, 16.11.2024
இது என்ன கூத்து! அசைவ உணவு என்று ஒன்று இருக்கிறதா? காய்கறி உணவு, மாமிச உணவு என்றால் புரிந்து கொள்ள முடிகிறது.
எதிலும் தங்களை முன்னிலைப்படுத்தி மற்ற வர்களை எதிர் நிலையில் கீழிறக்கமாகக் கருதுவது – பார்ப்பனீயம் – இது ஒரு தந்திர உபாயம்!
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு கலாச்சாரம் இருக்கும். ஒரு நாட்டுக்குள்ளும் பல கலாச்சாரங்களைக் கொண்ட மக்களும் இருக்கத் தான் செய்வார்கள்.
இங்கிலாந்து நாட்டுக்கு மாமிச உணவு என்பது வழமையானதுதான் விருந்தில் மது இடம் பெறுவதும் இயல்பானது தான். அங்கே தீபாவளி கொண்டாடுவது சரியா, தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் விரும்பியபடி கலாச்சாரப்படி, இந்தியா வம்சாவளியினருக்கு தீபாவளி விருந்து அளித்தனர்.
விரும்பினால் சாப்பிடலாம்; இல்லையென்றால் ஒதுங்கிக் கொள்ளலாம்.
மாமிச உணவு சாப்பிடுவது தூய்மைக் கேடு என்று சொல்லுவது மாமிச உணவை சாப்பிடுபவர்களை அவமதிப்பது ஆகாதா?
இந்தியாவில்கூட திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிரியாணி விருந்து இருக்கும்; அதை சாப்பிடாதவர்களுக்கென்று காய்கறி உணவும் ஏற்பாடு செய்திருப்பார்கள். அவ்வளவுதான்.
ஆனால் இங்கிலாந்தில் குடியேறிய பார்ப்பனீயம், அரசு அளித்த தீபாவளி விருந்தில் மாமிச உணவு இடம் பெற்றதையும், மது அளிக்கப்பட்டதையும் இந்துக்கள் எதிர்த்தார்களாம். இந்துக் கலாச்சாரத்துக்கு எதிரானதாம். பிரதமரிடம் புகார் சொன்ன நிலையில் பிரதமர் அலுவலகம் மன்னிப்புக்கோரியதாம். இனிமேல் இந்தத் தவறு நடக்காது என்றார்களாம்.
இந்துக்களுக்கென்று ஒட்டு மொத்தமாக ஒரு கலாச்சாரம் இருக்கிறதா? பார்ப்பனர்களில்கூட வங்காளத்தில் மீன்தான் முக்கிய உணவு – ‘மச்சப் பிராமணர்கள்’ என்று பெயர்.
சர்.சி.பி. ராமசாமி அய்யருக்கு மாட்டு நாக்கு என்றால் ஏகப்பட்ட குஷி என்பார்கள்.
இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் அலுவலகம் மன்னிப்புக் கேட்டதற்கு இங்குள்ள ‘துக்ளக்’ குருமூர்த்தி அய்யர்வாள்கள் குதூகலிக்கிறார்கள்.
எங்கிருந்தாலும் பார்ப்பனர்கள் பார்ப்பனர்கள்தான்! சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொள்ளுமா?